Tuesday, June 25, 2024

திங்கட்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசய சிவன் கோவில்...!

திங்கட்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில்...!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரக்கலக்கோட்டை.

 இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது. பொதுவாக அனைத்து ஆலயங்களும் காலையிலேயே நடை திறந்து இரவில் நடை அடைக்கப்படும்.

 ஆனால் இத்தலத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் ஆகும்.ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. 

கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது.

 மூலஸ்தானத்திற்குள் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது.

 அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.

அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.

 இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.

 திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது.

 மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபடுவர்.ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படும்.

 இவ்விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள்..... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...