Thursday, June 6, 2024

கற்கடேஸ்வரர் திருக்கோவில், நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி, திருவிசலூர்

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில், நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் –     612105.  
*தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப் பட்டது.                

*இறைவன்: ஸ்ரீகற்கடேஸ்வரர். 

*அம்பிகை: ஸ்ரீஅருமருந்து நாயகி மற்றும் 
ஸ்ரீஅபூர்வ நாயகி 

 *தலவிருட்சம்: பஞ்சதள வில்வம் 

*தீர்த்தம்: நவபாஷாண தீர்த்தம்.         

*வழிபட்டவர்கள்: அம்பிகை, இந்திரன், கந்தர்வன்

*இது பாடல்பெற்ற தலம் - இங்கு திருஞானசம்பந்தர் ஒரு தேவாரப் பதிகம் அருளியுள்ளார்.
*கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.      

*தல புராணப்படி, துர்வாசமுனிவரின்  சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாற்றி வழிபட்டு வந்தது. 

இந்திரனும் தனது சாபம் நீங்க அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அவன் அதைக் கண்காணித்தபோது, 
ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன்  
லிங்கத்தின் மீது தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.
நண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். முனிவரால் சபிக்கப்பட்ட கந்தர்வனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். 

*அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்தது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.  

கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது.

*முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. 

*இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள். 

*இங்கு, அம்மனுக்கும் இறைவனுக்கும்  செய்யப்படும் அபிஷேக எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது.          

*இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.    

*இத்தலத்தில் அபூர்வநாயகி என்றும் அருமருந்தம்மை என்றும் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. 

*சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றார். 

*இங்கு  சந்திரன் அமர்ந்த கோலத்தில், யோக நிலையில் இருக்கிறார். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், 
எல்லாவகையான யோகங்களும் கிடைக்கவும்
வழிபட வேண்டிய  தலம் திருந்துதேவன்குடி தலமாகும். 
  
*கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில்  இருந்து  2 கி மீ நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாம்.      

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...