சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம். எண்ணி துணிந்து இறங்கினார்.
1945 ஆம் ஆண்டு கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார். தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார். பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் வி்ற்று விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
1945 ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன் மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்கு தோப்புகளும்,புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப்பட்ட பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார். கடலடி ஆய்வு செய்து கடற்கோளினால் அளிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே, காவேரிப் பூம்பட்டிணம் கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.
1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு,கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து, மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.
மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கினார்.
1945 ஆம் ஆண்டு தொடங்கிய பயணம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் அந்த இனிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார்.
கடந்த 2012 டிசம்பரில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பித்தார்.
கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு? என்பது குறித்து தினமணி நாளிதழுக்கு சில வருடங்களுக்கு முன் திரு. கோவிந்தராசனார் அளித்த பேட்டி..
’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’’
கண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு?
’’வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.’’
அது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்?
’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.
மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்....
No comments:
Post a Comment