_ஓம் நமோ நாராயணாயா மந்திரம் சொல்வதால் என்ன பலன்?_.
ஓம் நமோ நாராயணாயா அந்த மந்திரத்தைக் கேட்பவர்களுக்கே முக்தி என்றால், அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு பயன்கள் கிடைக்கும்.
எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், “ஓம் நமோ நாராயணாயா…” எனும் மந்திரத்தை உச்சரித்த படியே மூன்று உலகையும் வலம் வருபவர் சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர்.
பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?
ஒரு நாள் வைகுண்டத்தில் இறைவன் நாராயணன் பாம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.
அவரின் காலுக்கருகில் மகாலட்சுமி அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த நாரதர், “இறைவனே, உன் பக்தர்கள் அனைவரும் உனது பெயரைச் சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது பெயரில்?” எனக் கேட்டார்.
நாராயணன் நாரதரை பார்த்து, “நாரதா, அவர்கள் என் பெயரைச் சொல்லி வேண்டுவதை நான் உனக்குச் சொல்லி விளக்குவதை விட, நீயே அதை நேரடியாகச் சென்று தெரிந்து கொள்.
நீ உடனடியாகப் பூலோகம் சென்று தென்திசையில் இருக்கும் வனத்தில் வாழும் ஒரு புழுவிடம் அந்த மந்திரத்தைச் சொல்.” என்றார்.
உடனே நாரதரும் நாராயணன் சொன்ன வனத்தை நோக்கிச் சென்றார்.
அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது.
அதன் அருகில் சென்ற நாரதர் அதனிடம், “ஓம் நமோ நாராயணாயா…” என்று சொன்னார்.
உடனே அந்தப் புழு செத்து விழுந்தது.
நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார்.
“இறைவனே, நான் அந்தப் புழுவிடம், தங்கள் பெயரைச் சொல்லியதும் அந்தப் புழு செத்து விழுந்து விட்டது.
இது தான் உங்கள் பெயரின் மகிமையா? ” எனக் கேட்டார் நாரதர்.
அதைக் கேட்ட நாராயணன், “நாரதா, நீ மீண்டும் பூலோகம் செல், அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும்.
அதனிடம் சென்று என் பெயருடனான மந்திரத்தை சொல்” என்றார்.
நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார்.
அங்கு அவர் சொன்னபடி ஒரு பசு மாடு கன்றை ஈன்றது.
நாரதர் அந்தக் கன்றின் அருகில் சென்று, “ஓம் நமோ நாராயணாயா…” என்றார்.
பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்தக் கன்று கீழே விழுந்து இறந்தது.
நாரதர் திடுக்கிட்டார்.
அவர் மனதில், “பசுமாட்டைக் கொல்வதே பெரும் பாவம்.
இதில் பிறந்து சில நிமிடங்களே ஆன, கன்றாக இருக்கும் பொழுதே அந்த மந்திரத்தை சொல்லி அதைக் கொன்றுவிட்டோமே…” என்று நினைத்து வருந்தினார்.
உடனே நாரதர் அங்கிருந்து மீண்டும் வைகுண்டத்துக்கு வந்து சேர்ந்தார்.
“இறைவனே,
இது என்ன விளையாட்டு? நான் தங்களின் பேச்சைக் கேட்டு, உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தக் கன்று இறந்து போய் விட்டது… மிகப் பெரிய பாவத்தைச் செய்து விட்டேனே…” என்றார்.
“நாரதா, நீ கவலைப்படாதே, மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று, நான் சொல்லுமிடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனிடம் என் பெயரிலான மந்திரத்தைச் சொல்லிப் பார்” என்றார் நாராயணன்.
நாரதருக்கோ மிகுந்த பயமாகி விட்டது.
ஏற்கனவே இரு முறை இறைவன் பெயரிலான மந்திரத்தைச் சொல்லி புழுவும், பசுவின் கன்றும் இறந்து போய்விட்டன.
இப்போது, தன்னால் ஒரு சிறுவன் இறந்து போய் விடக்கூடாதே” எனக் கவலைப்பட்டார்.
இறைவன் அவரைப் பார்க்க,
மனதைத் திடப்படுத்திக் கொண்டு பூலோகத்திற்கு வந்தார்.
அங்கு அவர் சொன்ன இடத்தில் சிறுவன் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அச்சத்துடன் அவனருகில் சென்ற நாரதர், “ஓம் நமோ நாராயணாயா…” என்று சொன்னார். அவ்வளவுதான் அந்தச் சிறுவனும் இறந்து போனான்.
நாரதருக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது.
இறைவன் தன்னை வைத்து மூன்று உயிர்களை இறக்கச் செய்து விட்டாரே…” என்று கவலையுடன் மீண்டும் வைகுண்டம் வந்தடைந்தார்.
அங்கு நாராயணனும் மகாலட்சுமியும் அமர்ந்திருக்க, அவர்களின் அருகில் கீழாக ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார்.
மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட நாராயணன், “நாரதா, ஏன் இப்படி கவலையுடன் வருகிறாய். உனக்கு என்ன ஆயிற்று?” என கேட்டார்.
நாரதர், அங்கு புதிதாக வந்திருந்த முனிவரையும் குழப்பத்துடன் பார்த்தார்.
பின்பு அவர் நாராயணனிடம், “இறைவா, இது என்ன சோதனை? நான் தங்களிடம், தங்களின் பெயரிலான மந்திரத்தின் சிறப்பைச் சொல்லும்படி கேட்டேன்.
ஆனால்,
தாங்களோ பூலோகத்திற்குச் சென்று உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொல்லிப் பார்க்கச் சொன்னீர்கள், நான் உங்களின் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன் அந்தப் புழு இறந்து விட்டது.
அடுத்து பசுவின் கன்று இறந்து விட்டது.
அதன் பின்பு இளம் வயது பாலகன் இறந்து போனான்.
உங்கள் பெயரிலான மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உயிர்கள் இறந்து போய் விடுகின்றன.
உங்கள் பெயரிலான மந்திரம் இவ்வளவு கொடுமையாக இருக்கிறதே…? ஒரு வேளை அதை நான் உச்சரித்தது தவறாக இருந்திருக்குமோ…?” எனக் கேட்டார் நாரதர்.
உடனே நாராயணன் நாரதரைப் பார்த்துச் சிரித்தார்.
பின்னர், “நாரதா, நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன்.
எங்கே என் முன்னாள் ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொல் பார்க்கலாம்” என்றார்.
இறைவன் இருக்கும் இடத்தில், தனது மனதை திடமாக்கிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அந்த மந்திரத்தைச் சொன்னார்.
“ஓம் நமோ நாராயணாயா…”
நாரதர் கண்களை திறந்து பார்த்தார். இறைவனின் கீழாக அமர்ந்திருந்த முனிவர் உடலை விடுத்து, அந்த ஆன்மா இறைவன் காலடியைச் சென்றடைந்தது.
நாரதர் கலங்கிப் போய் விட்டார்.
நாராயணன், நாரதரை பார்த்து, “நாரதா… எனது பெயரை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும்.
உனது வாயால் என் பெயரிலான மந்திரத்தைக் கேட்டதும் அந்தப் புழு பசுவாகவும்,
பசு பாலகனகவும் மறுபிறப்பை அடைந்தது.
பாலகன் மாமுனியாக அவதரித்ததும்,
அந்தப் பெயரிலான மந்திரச் சிறப்பினால் தான். கடைசியாக நீ அந்த மந்திரத்தை இங்கு சொன்னதும், அந்த மாமுனியும் முக்தி அடைந்தார்.
என் பெயரிலான மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் என்பதை உணர்த்தவே உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன்.
அந்த மந்திரத்தைக் கேட்பவர்களுக்கே முக்தி என்றால், அதைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்” என்றார்.
அன்று முதல் தொடர்ந்து,
“ஓம் நமோ நாராயணாயா…
ஓம் நமோ நாராயணாயா…
ஓம் நமோ நாராயணாயா…” என்று சொல்லிக் கொண்டிருக்க.
இப்போது, நாரதருக்கு புரிந்தது, உங்களுக்குப் புரிந்திருக்கும்…!
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
No comments:
Post a Comment