Tuesday, July 23, 2024

பேச்சுத்திறன் அருளும் மணக்கால் அபிமுக்தேஸ்வரர்...

பேச்சுத்திறன் அருளும் அபிமுக்தேஸ்வரர்!!! 
மணக்கால் - அய்யம்பேட்டை
காவிரியின் தென்கரையில் உள்ளது ஒரு தேவாரத்தலம். அதன் தொன்மைப் பெயர், திருப்பெருவேளூர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது. தற்காலத்தில் இவ்வூரை ‘மணக்கால் அய்யம்பேட்டை’ என்றழைக்கின்றனர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்து இறைவனை வந்து தரிசித்து (ஏழாம் நூற்றாண்டில்) பதிகம் பாடிப் போற்றி வணங்கியுள்ளனர்.

வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள தலம். சூரனை சம்ஹாரம் செய்த பின்னர், அந்த தோஷம் நீங்குவதற்காக, சங்காரமாடிய சிங்காரவேலனாகிய முருகன், சிவபிரானை சிவத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று வணங்கி வழிபட்டார்.

திருச்செந்தூர், கீழ்வேளூர், திருமுருகன்பூண்டி, புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) என்ற அந்தத் திருத்தலங்கள் வரிசையில் இந்த திருப்பெருவேளூரும் ஒன்று.
முருகப்பெருமான் நீராடிய சரவண தீர்த்தம் என்னும் தீர்த்தக்குளம் இவ்வாலயத்தின் பின்புறம் உள்ளது. 

வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே ஒரு முறை ‘யார் பெரியவன்?’ என்று போட்டி. அச்சண்டையின்போது மேரு மலையின் சிகரம் ஒன்று தூள் தூளாக உடைந்து, ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்ததாக ஐதீகம். 

அதுவே காலப்போக்கில் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டதாம். எனவே, இத்தலத்து இறைவனை வழிபட்டால், கயிலை மலையையே வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு ஐந்து கலசங்களுடன் கூடிய மூன்று நிலை ராஜகோபுரம். கோபுர நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், தரைதளத்தில் பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. நந்தி தேவரை வணங்கிவிட்டு, நிமிர்ந்தால் கட்டுமலை போன்ற பிரமாண்ட அமைப்பு. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று.

கட்டுமலையின் இடதுபுறம் அமைந்துள்ள 18 படிகளில் ஏறி மேலே சென்றால், முதலில் எதிர்படும் சந்நதி சோமாஸ்கந்த மூர்த்தியுடையது! 

அவரை வணங்கி விட்டு, வலதுபுற வாயில் வழியே நுழைந்தால் மகா மண்டபம். அதில் தெற்கு பார்த்த திருக்கோலத்தில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் திகழ்கிறார்.

மண்டபத்தின் உள்ளே நுழைந்தால்,  கருவறையில் கிழக்கு நோக்கி மூலவர் அபிமுக்தேஸ்வரர் சிவலிங்க வடிவில் காட்சி அருள்கிறார்.

இவருக்கு பிரிய ஈஸ்வரர் என்றும் பெயருண்டு.

கீழே பிராகாரம் வலம் வரும்போது கன்னி மூலையில் பிரதான விநாயகரை தரிசிக்கலாம். அவரை அடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நதி உள்ளது. 

இந்தப் பெருமாள் தாருகா வனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அடக்கும் வகையில் ‘மோகினி அவதாரம்’ எடுத்தவர் என்றும், தன்னுடைய பெண் வடிவத்திலிருந்து மீண்டும் ஆண் உரு பெற இத்தலத்து இறைவனை வழிபட்டார் என்றும் தலபுராணம் கூறுகிறது. 

அடுத்து சுப்பிரமணியர் தனிச் சந்நதியில் வள்ளி தெய்வானையுடன் வீற்றுள்ளார். இவர் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர்.

இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு, இங்கே இரண்டு சண்டிகேஸ்வரர்கள் சந்நதி இருப்பது. முருகப்பெருமான் சந்நதியை அடுத்து, கிழக்கு நோக்கிய நிலையில் யோக சண்டிகேஸ்வரர் சந்நதியும், வழக்கம் போல் கோமுகத்தின் அருகில் ஒரு சண்டிகேஸ்வரரும் கொலுவிருந்து அருட்பாலிக்கின்றனர். துர்க்கையும் தனக்கென தனியே சந்நதி கொண்டு விளங்குகிறார்.

இறைவியின் பெயர் ராஜராஜேஸ்வரி. பொதுவாக சிவாலயங்களில் அம்பிகை நின்ற கோலத்தில்தான் இருப்பார். ஆனால் மூன்று தலங்களில் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறார். 

ஒன்று காஞ்சிபுரம் (காமாட்சி), மற்றொன்று திருமீயச்சூர் (பேரளத்தை அடுத்துள்ளது), மூன்றாவது இந்த மணக்கால்  அய்யம்பேட்டை. 

ஆலயத்துள் கிழக்கு கோஷ்டத்தில் உள்ள சரஸ்வதீஸ்வரர் (லிங்கத் திருமேனி) சரஸ்வதியால் பூஜிக்கப்பட்டவர். 

பேச்சுத் திறனுக்கு அருள்பாலிப்பவள் சரஸ்வதி அல்லவா? பூவிலும், நமது நாவிலும் இருப்பவளல்லவா? அதனால் இந்த சரஸ்வதீஸ்வரருக்கு ஒரு தனி சக்தி. 

இந்த லிங்கத்தை முன்னொரு காலத்தில் வாழ்ந்த பக்தர் ஒருவர் தினந்தோறும் பக்திப் பரவசத்துடன் வழிபட்டு வந்துள்ளார். அவரது ஒரே மகன் பேசும் திறனின்றி இருந்தான். அவர் அவனை இந்த சரஸ்வதீஸ்வரரை வழிபட அழைத்து வரலானார். 

அதன் பலனாக, மகனுக்கு பேசும் திறன் வந்தது. பேச்சு வராத பிள்ளைகள் மற்றும் திக்குவாய் குறைபாடு உள்ளவர்கள் இந்த சரஸ்வதீஸ்வரரை வந்து வழிபட்டால், விரைவில் அந்தக்குறை நீங்கப் பெறுவர் என்பது பல பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. 

அதன் நன்றிக்கடனாக, குறை தீர்ந்தவர்கள் இந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவதை வழக்கமாக் கொண்டுள்ளனர். 

கிழக்குப் பிராகாரத்தில் பைரவர், காலபைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் உள்ளனர். இத்தலம் சுக்கிர தோஷப் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. 

அசுர குரு சுக்கிராச்சாரியார் ஒருமுறை தனது சக்திகள் அனைத்தையும் இழந்தார். அதனால், இந்தத் தலத்திற்கு வந்து சரவணப் பொய்கையில் நீராடி, அம்பிகையை நோக்கித் தவம் செய்தார்.

அன்னையின் அருளால் சுக்கிராச்சாரியாருக்கு மீண்டும் அனைத்து சக்திகளும் பரிபூரணமாகக் கிடைத்தன.

மிருகண்டு மகரிஷி, பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர்,

‘இறப்பில்லார் பிணியில்லார் 
தமக்கென்றும் கேடிலார் 
பிறப்பில்லாப் பெருமானார்
பெருவேளூர்ப் பிரியாரே!’

- என்று போற்றிப் பாடுகின்றார். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையிலும், பெளர்ணமி திதியிலும், இங்குவந்து அம்பாளை பிரார்த்தனை செய்கிறார்கள். 

காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 7.30 வரையும் கோயில் திறந்திருக்கும்.

நன்னிலத்திலிருந்தும், திருவாரூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்து வசதி உள்ளது. திருவாரூரிலிருந்து 10 கி.மீ. நன்னிலத்திலிருந்தும் 10 கி.மீ.  குடவாசலிலிருந்து 8 கி.மீ.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...