Wednesday, July 24, 2024

சீர்காழி சிவலோகநாதர் திருக்கோவில்,திருப்புன்கூர்,

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்,
திருப்புன்கூர், 
சீர்காழி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் - 609 112. 
*இறைவன்: சிவலோகநாதர்  

*இறைவி: சவுந்தரநாயகி 

*தலவிருட்சம்: புங்கமரம் 

*தீர்த்தம் : கணபதி தீர்த்தம்,  தேவேந்திர தீர்த்தம்,  அக்கினி தீர்த்தம், இடப தீர்த்தம்.                

*இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல்  பெற்ற தலம். 
*வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஏயர்கோன் கலிக்காமர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி,  பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், இராசேந்திர சோழன் முதலியோர்.  

*புற்று வடிவமாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புனுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பூஜைகள் நடத்துகிறார்கள்.    

*புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோருக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். 
நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

 *இத்தலத்திற்குரிய பன்னிருவேலி பெற்ற வரலாறு : தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி மழை பொழியச் செய்யுமாறு வேண்டினான். சுந்தரரும் மழை பெய்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்கு கட்டளையிட்டுவிட்டுப் பாடினார், மழை பெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைமிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணி மழையை நிறுத்துமாறு சுந்தரரை  வேண்ட, அவரும் மேலும் பன்னிருவேலி, நிலம் கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது. 

*இது ஏயர்கோன் கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம்.   

*சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம். 
*திருநாளைப்போவாரின் (நந்தனார்) ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ. -ல் உள்ளது.     

*இந்த ஆலயத்தில் குளம் வெட்டிய பிள்ளையார் மிகவும் பிரசித்தி பெற்றவர். நந்தனார்  நீராடுவதற்காக ஒரே இரவில் பூதங்களைக் கொண்டு இங்கு திருக்குளம் அமைத்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் குளம் வெட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். 

*திருநாளைப்போவார் (நந்தனார்) இக்கோயிலுக்கு வெளியில் நின்று இறைவனை வழிபடமுயன்றார். கொடிமரமும் நந்தியும் இறைவனை மறைத்து நிற்க நந்தனார்  இறைவனைக் காண மனமுருக வேண்டினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவாரபாலகர்களும் இறைவனிடம் "சுவாமி நந்தனார் வந்திருக்கிறார்" என்றனர். நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான் தனக்கு முன்பாக இருந்த நந்தியை சற்று விலகி இருக்கும்படி சொன்னார். நந்தியும் அதன்படியே விலகிக் கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாக தெரிந்தது.    
இப்போதும் இந்த ஆலயம் சென்றால் நந்தி இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதை  தரிசிக்கலாம். 

*சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு துவாரபாலகர்களுள் தென்புறமுள்ள வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை விலகியிருக்குமாறு கட்டளையிடுவதுபோலக் காட்சித்தருவது கண்டு மகிழத்தக்கது.  

*வெளிப்பிரகாரத்தில்  நந்தனார் திருவுருவம் உள்ளது.   

*இங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.               

*ஒரு முறை சுவாமிக்கும் அம்பாளுக்கும்
போட்டி வந்தபோது, ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது பூலோகத்தில் எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கே அழகில் சிறந்தவள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறேன் என்று சிவபெருமான் கூறினார். அதற்கு அம்பாளும் சம்மதித்தார்.
அதன்படி சிவபெருமான், ஒரு தர்ப்பையை எடுத்து கீழே போட்டார். அது இந்தத் திருத்தலத்தில் வந்து விழுந்து பஞ்ச லிங்கங்களாக மாறியதாக தல புராணம் சொல்கிறது. இந்த பஞ்ச லிங்கங்களை வணங்கினால், திருமணத்தடை, மற்றும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.   

*பிரம்மா, சூரியன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் கோயிலுள் உள்ளன.            

*வெளிப்பிரகாரத்தில் நாக சிற்பங்களும், புற்றும் உள்ளன. நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவர்கள் தங்கத்தில் நாகத்தகடு செய்து உண்டியலில் போடுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணம் தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது.            

*இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் "பஞ்ச அர்ச்சனைகள்", பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும். 

*வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால்  திருப்புன்கூர் கைகாட்டியும்,  திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...