Thursday, July 25, 2024

பட்டீஸ்வரம் பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் தழுவக் குழைந்த ஈசன் தலம்.

_பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் தழுவக் குழைந்த ஈசன் அருள்பாலிக்கும் தலம்_


கும்பகோணம் அருகில் உள்ளது திருசத்திமுற்றம் சிவத் திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு சிவக்கொழுந்தீசர் மற்றும் தழுவக் குழைந்தநாதர் எனும் பெயர்கள் உள்ளன. கணவன், மனைவிக்கிடையே மன ஒற்றுமை இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் அது வாழ்க்கையாக இருக்கும். அதை வலியுறுத்தும் வகையில் இந்த கோயிலில் அம்பிகையும் ஈசனும் காட்சி தருகிறார்கள்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது கோயில். கோபுர வாயிலில் வல்லபகணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர வாயிலை கடந்தால் பெரிய வெளிப்பிராகாரத்தை காணலாம். அடுத்துள்ள இரண்டாவது கோபுர வாயிலில் விநாயகர், முருகன் சன்னிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதி பிராகாரத்தில் உள்ள பைரவர் சன்னிதியில் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகுடன் காணப்படும் இதுபோன்ற பைரவரை வேறு எங்கும் காண முடியாது.
ஒரு சமயம் பார்வதி தேவிக்கும் சிவபெருமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வழக்கம் போல பார்வதி தேவி பூலோகத்தில் பிறக்க நேரிட்டது. மீண்டும் சிவபெருமானை சென்று சேர வேண்டுமானால் காவிரி நதிக்கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பார்வதி தேவி, காவிரி நதிக்கரையில் எந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து ஈசனை வழிபடுவது என்று பார்த்துக்கொண்டே வந்தாள். அப்போது கும்பகோணம் அருகே உள்ள திருச்சத்தி முற்றம் பகுதியைத் தேர்ந்தெடுத்தாள்.

காவிரி கரையோரத்தில் மண் எடுத்து அதில் லிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் அதற்கு மலர்மாலைகள் சூடி தவ வழிபாடு செய்து வந்தாள். அம்பிகையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆழ்ந்த தியானத்தில் இருந்த பார்வதி தேவியை சற்று சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டார். அதன்படி காவிரியில் கரைபுரண்டு ஓடும் வகையில் வெள்ளம் வருமாறு செய்தார். திடீரென வெள்ளப்பெருக்கு உண்டானதால் பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்தாள். தாம் வழிபடும் மணல் லிங்கம் வெள்ளத்தில் கரைந்து விடுமே என்று பரிதவித்தாள். அடுத்த வினாடி ஓடிச் சென்று அந்த லிங்கத்தை கட்டிப்பிடித்து இறுகத் தழுவிக்கொண்டாள். இதனால் காவிரி வெள்ளத்திலிருந்து மணல் லிங்கத்தை அவளால் காப்பாற்ற  முடிந்தது.

இதுபோன்ற சோதனைகள் இனி வரக்கூடாது என்பதற்காக தனது வழிபாட்டை மேலும் கடுமையாக்க பார்வதி தேவி முடிவு செய்தாள். அதன்படி ஒற்றைக் காலில் நின்றபடி  சிவபெருமானை மனதில் நிறுத்தி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டாள். அவளது இந்தத் தவத்தை கண்ட ஈசனுக்கு மீண்டும் மனதில் இரக்கம் பிறந்தது. என்றாலும் இன்னொரு சோதனை செய்து பார்க்கலாம் என்று ஈசன் நினைத்தார். பார்வதி தேவியின் தவத்தை கலைக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். பார்வதி தேவியை அச்சுறுத்தும் வகையில் தீப்பிழம்பாகத் தோன்றினர்.

தீயின் வெப்பத்தால் பார்வதி தேவியின் ஒற்றைக்கால் தவம் கலைந்தது. ‘என்ன இது சோதனை’ என்று நினைத்தபோது, தீப்பிழம்பாக எழுந்து நிற்பது ஈசனே என்பதை பார்வதி தேவி அறிந்து கொண்டாள். ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பார்வதி தேவி முடிவு செய்தாள். ‘ஜோதியே சிவம்’ என்று சொல்லியபடியே பார்வதி தேவி அத்தீயை ஆரத்தழுவிக் கொண்டாள். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு அருள்பாலித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

இதை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தலத்தின் கருவறையின் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் சிவனை அம்பாள் தழுவிய கோலத்தில் ஒரு சன்னிதி அமைந்துள்ளது. அம்பாள் ஒற்றைக் காலை தரையில் ஊன்றியபடி மற்றொரு காலை மடக்கி வைத்து தனது இரு கைகளாலும் சிவலிங்கத்தை தழுவியபடி நிற்பதை இங்கு பார்க்கலாம்.

பார்வதி தேவியை பரிசோதிக்க சிவபெருமான் ஜோதி பிழம்பாக நின்றதால் அவருக்கு சிவக்கொழுந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கருவறையில் உள்ள மூலவர் திருமேனியில் தீச்சுடர்கள் இருக்கின்றன. அர்ச்சகர்கள் தீப ஆராதனை செய்யும்போது நன்கு உற்று பார்த்தால் இந்த அதிசயத்தைக் காண முடியும். பார்வதி தேவி, தீயை கட்டிப்பிடித்ததால் ஈசன் மனம் உருகிப்போனார் என்பது புராண வரலாறு. இந்த சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தலத்து ஈசனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த ஆலயம் திருமண யோகத்தைப் பெற்றுத் தரும் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. நீண்ட நாட்களாக திருமணம் கைகூடாமல் இருக்கும் இளைஞர்களும் பெண்களும் சக்தி தழுவிய ஈசனை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும். கணவன், மனைவி விதிவசத்தால் பிரிவது உண்டு.  ஒருகாலத்துக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவார்கள் இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...