Saturday, July 27, 2024

குற்றம் பொறுத்த நாதர் கோயில், திருக்கருப்பறியலூர், தலைஞாயிறு

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் கோயில்,      திருக்கருப்பறியலூர், தலைஞாயிறு 609201 மயிலாடுதுறை மாவட்டம்.  
*இறைவர் திருப்பெயர்:  குற்றம் பொறுத்த நாதர்.

*இறைவியார் திருப்பெயர்:  கோல்வளை நாயகி.

*தல மரம்:  கொகுடி முல்லை.

*தீர்த்தம் :  இந்திர தீர்த்தம்.

*வழிபட்டோர்:  வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன், சூரியன்.               
*இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். சம்பந்தர், சுந்தரர் இருவராலும் பாடப் பெற்றதாகும். 

*கொகுடி முல்லையைத் தலவிருட்சமாகக் கொண்டதால்  இக்கோயில் கொகுடிக்கோயில்என்றும் வழங்கப்படுகிறது.

*இறைவன் குற்றம் பொறுத்த நாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.        

*வெளிப் பிராகாரத்தில் சீர்காழியில் இருப்பதுபோல உயர்ந்த தனிக்கோயிலாக சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டைநாதரைத் தரிசிக்கலாம்.          

*இதனால் இத்தலம் மேலக்காழி,  என்றும் அழைக்கப்படுகிறது.             

*தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர்.           

*பக்குவப்பட்ட ஆன்மாக்கள் கருப்பறியலூர் தலத்தில் வழிபட்டால் மறு பிறவி கிடையாது. அவை இனி கருவாக உருவாக மாட்டா.   

*இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை சிவன் மேல் பிரயோகித்ததால் ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கிக் கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்து அருளியதால் இவர் `குற்றம் பொறுத்த நாதர்’ என அழைக்கப்படுகிறார். இறைவனுக்கு `அபராத சமேஷ்வரர்’ என்ற பெயரும் உண்டு. 

*சூரிய தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் குற்றம் பொறுத்தநாதர் கோவில். சூரிய பகவான்  வழிபட்டதால் இத் தலம் `தலைஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது. 
தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபட சூரியன் வழிபட்ட தலங்கள் அனைத்தும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில், திருக்கருப்பறியலூர் தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. 
இந்த தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்கப் பெறலாம்.

*விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து, இறைவன் அருளால் குழந்தை பெற்றான். இதனால் மகிழ்ந்த மன்னன் இந்தத் தலத்தை அழகுறக் கட்டினான் என்பது வரலாறு.

*இந்தத் திருத்தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
சிலருக்குக் கருவிலே சிசு கலைவது உண்டு. சிலருக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடும். சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டு. இந்த அனைத்து தோஷங்களும் இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டால்   நீங்கும் என்பது நம்பிக்கை.    

*ராவணனின் மகன் இந்திரஜித் தனது புஷ்பகவிமானத்தில் இத்தலத்தின் மீது பறந்தபோது விமானத்தின் நிழல் கோயிலின் மீது விழ  விமானம் நின்றுவிட்டது. இந்திரஜித்தும் அவன் தந்தை ராவணனும் இப்பழி நீங்க  இங்கு வழிபாடு செய்துள்ளனர். 

*இத்தலத்து இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர்.
யுத்தத்தில் ராவணனைக் கொன்ற ராமர், அந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அனுமனிடம் இரண்டு நாழிகைகளுக்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். ராமரின் கட்டளையை ஏற்று  வடதிசை நோக்கிச் சென்ற அனுமன் வரத் தாமதமானது. எனவே ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது தோஷமும் நீங்கியது. தான் வருவதற்குள் ராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அந்த லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தான். முடியவில்லை. இப்படிச் செய்ததால் அனுமனுக்கு தோஷம் ஏற்பட்டது.   "சிவனை நோக்கி தவமிருந்தால் அந்த தோஷம் நீங்கும்’’ என ராமர் அனுமனுக்கு யோசனை கூற அனுமனும்   தலைஞாயிறு எனும்  இத்தலத்து இறைவனை வணங்க தோஷம் விலகியது.  

*'இந்த தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும்’ என்பதை பிரம்மன் வசிஷ்டருக்குக் கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு, மெய்ஞானம் பெற்றார் என்கிறது தலபுராணம். 

*தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இவ்வாலயம்.     
 
*இத் திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் அருகில் பட்டவர்த்தி என்னும் ஊரின் வடகிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...