Sunday, July 21, 2024

மகான்_பட்டினத்தார்_குரு_பூஜை இன்று ஆடி_உத்திராடம்)

இன்று 
#ஆடி_பெளர்ணமி நாளில் 
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" 
என்று உலகிற்கு உணர்த்தியவரான 
#திருவெண்காடர் என்று அழைக்கப்படும் 
#மகான்_பட்டினத்தார்_குரு_பூஜை இன்று (முக்தி நாள்)
 (#ஆடி_உத்திராடம்)
மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார்.பூம்புகார் எனப்படும் காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றி சென்னை, திருவொற்றியூரில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் முக்தியடைந்த மகான் பட்டினத்தார். இவரின் குருபூஜை இன்று  கொண்டாடப்படுகிறது.

சிவநேசர் - ஞானகலை தம்பதிக்கு மகனாக கி.பி 11-ம் நூற்றாண்டில் அவதரித்தவர் பட்டினத்தார். இவரது இயற்பெயர் திருவெண்காடர் என்பதாகும். இவருக்கு `சுவேதாரண்யன்' என்ற பெயரும் உண்டு. இவர் பூம்புகாரில் வணிகத்தொழில் செய்துவந்த பெருவணிகராவார்.
`மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார். இவரை மக்கள் பட்டினத்தார், பட்டினத்தடிகள் என்று அன்போடு அழைத்தனர்.

காசி மன்னனான பத்ரகிரியார் பட்டினத்தாரின் சீடராவார். சிவன் முதலில் பத்ரகிரியாருக்குக் காட்சி கொடுத்து முக்தி அளித்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டுமென்று சிவபெருமானிடம் வேண்டினார்.

சிவபெருமானோ கரும்பு ஒன்றைப் பட்டினத்தாரிடம் கொடுத்து, `இதன் நுனி எங்கு இனிக்கிறதோ, அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்றார். அதன்பிறகு பட்டினத்தார் சிதம்பரம், சீர்காழி என்று பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

திருவொற்றியூர் தலத்தில் கரும்பின் நுனி இனிக்க திருவொற்றியூரிலேயே ஜீவ சமாதி அடைந்தார், பட்டினத்தார். அவரது ஜீவ சமாதி திருவொற்றியூரில் கடலை பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இவரது குருபூஜை தினத்தில் பட்டினத்தாரின் ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்துக்கு எண்ணெய், கரும்புச் சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். குருபூஜை தினத்தில் பட்டினத்தாரை நினைத்து வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.

🙏🏻காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே -பட்டினத்தார் 

🙏🏻🕉️கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்து அடிகள்.

🕉️🙏🏻ஈசன் தனக்கு உணர்த்தியதை உலகிற்கு உணர்த்த செல்வங்களை துறந்து துறவியானவர். 

#பட்டினத்துஅடிகள்வரலாறு:

👉பதினொன்றாம் திருமுறையில் கோயில் நான்மணி மாலை முதலான ஐந்து பிரபந்தங்களை அருளியவர் பட்டினத்து அடிகள் ஆவார்.

👉திருவெண்காடர், திருவெண்காட்டு அடிகள், பட்டினத்துப் பிள்ளையார் எனவும் இவர் தம் பெயர் வழங்கப்பெறும்.

👉காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் செழுங்குடியில் தோன்றி மனைத்தக்க மாண்புடைய மனைவியை மணந்து இல்லறம் இயற்றி வந்த இவர் பிறவி நோய்க்குக் காரணமான ஆசையை அறவே விட்டொழித்துத் துறவறம் பூண்டு உயர்ந்தவர்

👉காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.

👉திருவிடைமருதூரில் சிவனடித் தொண்டு பூண்டொழுகிய சிவசருமர் என்னும் அந்தணர் வறுமையால் துயருறுவதைக்கண்டு மனம் பொறாத மகாலிங்கப் பெருமான் மருதவாணர் என்னும் திருப் பெயரோடு அவர்முன் தோன்றி காவிரிப்பூம்பட்டினத்தில் மகப் பேறின்றி வருந்தும் திருவெண்காடரிடம் தன்னை விற்றுப் பொருள் பெற்று வறுமை நீங்குமாறு கூறியருளினார். சிவசருமர் இறைவன் கட்டளைப்படி மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் மருதவாணரை அளித்துப் பொருள் பெற்றுத் திருவிடைமருதூர் மீண்டு வறுமை நீங்கி இன்புற்றார்.

👉திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.

👉வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.

👉வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருத வாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டி யுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினார். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக் கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்த போது அதனுள் தங்கப்பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து அதனை வணிகர்களிடம் கூறிப் பெருமையுற்றார்.

👉சில நாட்களில் சென்றபின் அனைத்து வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்தபோது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன்மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத் துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக்காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையம்மை யோடும் அங்கிருத்தலைக் கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார். மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் பெருஞ்செல்வராகிய அவர்க்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் `காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே` என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

👉திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியன வும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக்கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவிய போது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.

👉பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலநாள் தங்கி யிருந்து தன் தாயார் இறந்தபோது அவருக்கு ஈமக்கடன் செய்து முடித்துத் திருவிடைமருதூர் சென்று அங்குச் சில காலம் தங்கி மருதப் பிரானை வழிப்பட்டுப் பின் திருவாரூர் முதலிய தலங்களை அடைந்து அங்கிருந்தபோது முன்பு தமக்குக் கணக்கராய் இருந்த சேந்தனாரை அரசன் சிறைப்படுத்திய செய்தி கேட்டு `மத்தளை தயிருண்டானும்` என்ற பாடலைப் பாடிய அளவில் சிவகணங்கள் சேந்தனாரைச் சிறை யிலிருந்து மீட்டு அவர் முன் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனாரும் திருவெண்காட்டு அடிகளைப் பணிந்து `பிறவிச் சிறையிலிருந்து விடுதலை பெறும்` உபதேச மொழிகளைக் கேட்டு உய்தி பெற்றார். பின்னர் சீகாழி சிதம்பரம் கச்சி ஏகம்பம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் சென்றார்.

👉திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.

👉இனிப் பட்டினத்து அடிகள் வரலாற்றில் மேலும் சில செய்திகள் சேர்ந்து வழங்கக் காணலாம். மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து வயதில் தந்தையாரை இழந்த திருவெண்காடர் கல்வி பயின்று இறை உணர்வோடு வாணிபம் புரிந்து வந்தார்.

👉ஒருநாள் சிவபிரான் இவர் கனவில் அந்தணராகத் தோன்றி திருவெண்காடு வருமாறு பணிக்க அவ்வாறே திருவெண்காடர் திருவெண்காடு சென்றபோது கனவிடைத் தோன்றிய அந்தணர் காட்சி தந்து சிவதீட்சை வழங்கி அவர் கையில் ஒரு சம்புடத்தைக் கொடுத்து மறைந்தருளினார். சம்புடம் இவர் கைக்குக் கிடைத்தவுடன் தானே திறந்து கொண்டது. அதில் விநாயகர் சிவலிங்கம் இருக்கக் கண்டு திருவெண்காடர் நாள்தோறும் அவற்றைப் பூசித்து வந்தார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் இயற்றினார். நெடுநாள் ஆகியும் மகப்பேறு வாய்க்காமையால் இறைவனை வேண்டி வந்தார்.

திருவிடைமருதூரில் தன்னை வழிபட்டுச் சிவதருமங்கள் பல செய்து வந்த அந்தணராகிய சிவசருமர் சுசீலை ஆகியோர் வறுமை நிலையில் இருப்பதை உணர்ந்து மகாலிங்கப் பெருமான் அவர்கள் கனவில் தோன்றி, நாளை தீர்த்தக் கரையில் மருத மரத்தடியில் நாமே ஒரு குழந்தையாய் இருப்போம். அக்குழந்தையைக் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழும் வணிகராகிய திருவெண்காடரிடம் கொடுத்து எடைக்கு எடை பொன் பெற்று வறுமையின்றி வாழ்க என அருள் புரிந்தார். விழித்தெழுந்த சிவசருமரும் சுசீலையும் அக்குழந்தையை எடுத்து அணைத்து அதனைக் கொடுக்க மனம் இன்றி முடிவில் இறைவன் கட்டளைப்படி காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்து திருவெண்காடரிடம் அளித்து எடைக்கு எடை பொன் பெற்று மீண்டனர்.

👉திருவெண்காடர் அக்குழந்தைக்கு மருதப்பிரான் எனப் பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்தார்.

👉மருதப்பிரான் கல்வி கேள்விகளில் வல்லவராய் வாணிபத்தில் சிறந்து விளங்கினார். வணிகர் சிலரோடு கடல் வாணிபம் சென்று மீண்டார். தான் கொண்டு சென்ற கப்பலில் எரு மூட்டைகளையும் தவிட்டையும் கொண்டு வந்த தம் மைந்தரைத் தேடியபோது அவர் மனைவியார் மைந்தர் தம்மிடம் கொடுத்துத் தந்தையிடம் சேர்ப்பிக்குமாறு கூறிய பெட்டியில் நிலையாமை உணர்த்தும் பொருள்களும் அறவுரையும் இருக்கக்கண்டு உண்மை ஞானம் கைவரப் பெற்றுத் துறவறம் பூண்டார். தம் தலைமைக் கணக்கராகிய சேந்தனாரை அழைத்துத் தமது கருவூலத்தைத் திறந்து வைத்துப் பலரும் கொள்ளை கொள்ளுமாறு செய்தார். தன்னைக் கொல்லத் திட்டமிட்ட உறவினர்க்குத் தக்க பாடம் புகட்டினார். தாயார் இறந்தபோது வாழைப் பட்டைகளை அடுக்கித் தாயின் உடலை அதன் மீது வைத்துச் சில பாடல்களைப் பாடி ஞானத்தீயால் அவ்வுடலை எரித்து ஈமக்கடன்களை ஆற்றி முடித்துப் பலசிவ தலங்களையும் வழி பட்டுக் கொண்டு உஜ்ஜயினியை அடைந்து அவ்வூரின் புறத்தே இருந்த சிறு காட்டில் விநாயகர் ஆலயத்தில் தங்கித் தவ நிலையில் இருந்தார்.

👉இரவில் பத்ரகிரி மன்னன் அரண்மனையில் அணிகலன்களைத் திருடியவர்கள் தாம் வேண்டிச் சென்று வெற்றியோடு களவாடிய அணிகலன்களில் மணிமாலை ஒன்றை விநாயகர்மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலை விநாயகர் கோயிலில் தவமிருந்த திருவெண்காடர் கழுத்தில் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் திருடர்களைத் தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அடிகள் கழுத்தில் மணிமாலை இருத்தலைக் கண்டு அவரைக் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதி பிடித்துச் சென்றனர். அரசனிடம் தெரிவித்து கழுமரத்தில் அவரை ஏற்றுதற் பொருட்டு கழுமரம் இருக்கு மிடத்துக்கு அழைத்து வந்தனர். அடிகள் தான் குற்றம் செய்யாமல் இருக்கவும் தன்னைத் தண்டித்த அரசன் செயலுக்கு வருந்தி `என் செயலாவது யாதொன்றுமில்லை` என்ற பாடலைப் பாடிய அளவில் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த பத்திரகிரி மன்னன் அடி களை அடைந்து பிழை பொறுக்குமாறு வேண்டியதோடு தானும் அரசு துறந்து அடிகளைப் பணிய பத்திரகிரியாரைத் திருவிடைமருதூர் சென்று கோபுர வாயிலில் தங்கியிருக்குமாறு செய்து அங்கிருந்து புறப் பட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். பத்திரகிரியார் கையில் திருவோடு ஒன்றை ஏந்தி இரந்துண்டு திருவிடைமருதூர்க் கோயிலில் தங்கியிருந்தார்.

👉பட்டினத்து அடிகள் பல தலங்களுக்கும் சென்று பின் திருவிடை மருதூரை அடைந்து பத்திரகிரியாரை மேலைக் கோபுர வாயிலில் இருக்கச் செய்து தான் கீழைக் கோபுர வாயிலில் இருந்தார். பத்திர கிரியார் பலர் இல்லங்கட்கும் சென்று இரந்து வந்து தன் குருநாதர்க்கு அமுதளித்து எஞ்சியதைத் தான் உண்டு மீதத்தைத் தன்னைத் தொடர்ந்து வந்த நாய் ஒன்றிற்கு அளித்து மேலைக் கோபுர வாயிலில் இருந்தார்.

👉🕉️ஒருநாள் சிவபெருமான் சித்தராக வந்து பட்டினத்து அடிகளிடம் உணவு வேண்ட அடிகள் `யான் கந்தையும் மிகை` என்னும் கருத்தோடு வாழும் துறவி, என்பால் ஏதுவும் இல்லை. மேலைக்கோபுர வாயிலில் ஒரு குடும்பி உள்ளான் அவனிடம் சென்று கேளும் எனக்கூற, சித்தர் அவ்வாறே சென்று அடிகள் கூறியன வற்றைத் தெரிவித்துக் கேட்ட அளவில் பத்திரகிரியார் நம்மோடு இணைந்துள்ள உணவேற்கும் ஓடும் பரிவு காட்டும் நாயும் அல்லவா நம்மைக் கும்பியாக்கின என அவ்வோட்டை கீழே எறிய ஓடு உடைந்து சிதறியது. நாயின்மீதுபட்டு நாயும் இறந்தது. சித்தர் மறைந்தார். நாய் அடியார் பரிகலம் உண்ட சிறப்பால் காசிராசன் மகளாகச் சென்று பிறந்தது.

👉சில ஆண்டுகளுக்குப்பின் அப்பெண் தந்தையோடு திருவிடைமருதூர் வந்து பத்திரகிரியாரைப் பணிந்து `அடிநாய் மீண்டும் திருவடிப்பேற்றுக்கு வந்துள்ளது` எனக் கூற பத்திரகிரியார் அப்பெண்ணைப் பட்டினத்து அடிகளிடம் அழைத்து வந்து ஞானிகளின் பரிகலம் உண்ட சிறப்பால் அரச மரபில் பிறந்து வளர்ந்துள்ள இப் பெண்ணுக்கு வீடுபேறு அருளுமாறு வேண்ட அங்கு ஒரு சிவசோதி தோன்றியது. அப்பெண் அச்சோதியில் கலந்து வீடு பெற்றார். பத்திரகிரியாரும் குருநாதர் ஆணைப்படி அச்சோதியில் கலந்து இறையடிப் பேற்றை எய்தினார்.

👉அடிகள் இறைவன் கருணையை வியந்து `என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி வைத்தனை போலும்` என இரங்கிக்கூற சிவபிரான் திருஒற்றியூருக்கு அவரை வருமாறு பணித்தருளினார். அடிகள் எப்போது தனக்கு முத்தி சித்திக்கும் எனக் கேட்க பெருமான் பேய்க்கரும்பு ஒன்றை அவர் கையில் தந்து இக்கரும்பு எங்கு தித்திக்கிறதோ அங்கே உனக்கு முத்தி சித்திக்கும் எனக் கூறியருளினார். அடிகள் இறைவன் அருளியவாறு திருவொற்றியூரை அடைந்தார். அங்குச் சில நாள் தங்கினார். கடற்கரையில் இடைச் சிறுவர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது கையில் கொண்ட கரும்பு இனிக்கத் தொடங்கியது. பட்டினத்து அடிகள் இறைவன் திருவருளை எண்ணிய நிலையில் அத்தலத்தில் மணலில் மறைந்து சிவலிங்கத் திருவுருவாய் வெளிப்பட்டருளினார்.

👉பட்டினத்து அடிகள் காலம் கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.

பட்டினத்தார் பாடிய திருஅகவல்:

"நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 


No comments:

Post a Comment

Followers

பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் ஆழ்வார்களுள் ஒருவர்...

பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்...