Saturday, July 6, 2024

திருநெல்வேலி பாண்டுரங்க விட்டலேஸ்வரர்..

அருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், 
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் – பாண்டுரங்க விட்டலேஸ்வரர்

தாயார் – பாமா, ருக்மணி

பழமை – 500 வருடங்களுக்கு முன்

ஊர் – விட்டலாபுரம்

மாவட்டம் – திருநெல்வேலி

மாநிலம் – தமிழ்நாடு
16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது. இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி “வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு” எனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றிலிருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது. ஆற்றிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி “வேண்டிய வரம் கேள்” என்றார். விட்டலராயனும்,”பெருமாளே. தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்” என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றிலிருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.

பாண்டுரங்கனை வழிபட்ட புரந்தரதாசர், இராமதேவர், துக்காராம், ஞானதேவர் போன்றவர்களின் வாரிசுகள் இன்னும் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்கிறார்கள். இத்தலம் தட்சிண பண்டரிபுரம் என்பதற்கு ஏற்ப இங்குள்ள சிவன் கோயிலில் விருபாஷீஸ்வரர், அம்பாதேவி அருள்பாலிக்கிறார்கள்.

கோயிலின் முன்பக்கம் 16 கால் மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. கோபுரத்தை விட உயரமாக காட்சிதருகிறது இக்கொடிமரம். மேற்கு நோக்கிய கருடாழ்வார் சன்னதியைத் தாண்டி சென்றால் கருவறை உள்ளது. அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் இடுப்பில் கை வைத்தபடி, கருணைப் பார்வையால் காத்து ரட்சிக்கும் பாண்டுரங்க விட்டலேஸ்வரர், அருகே பாமா, ருக்மணி காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னால் உற்சவர் நான்கு திருக்கரத்துடன் பாமா, ருக்மணி, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பாமா, ருக்மணி, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது. ருக்மணி சன்னதியில் அற்புதமாக வேலைப்பாடுகள் அமைந்துள்ளது.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்திற்கு முன் இங்குள்ள பாண்டுரங்கனை வழிபடுகிறார்கள். திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...