*இன்று எம்பெருமான் மாணிக்கவாசகர் குருபூசை*
எங்கும் எதிலும் எல்லா உயிரிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைபொருளான செம்பொருளாம் சிவப்பரம்பொருளை இப்பிறவியில் சிந்திக்கப் பேறு பெற்றோம்.
இணையற்ற இனிய பெருமானை இனிதே சிந்திக்க வழியமைத்தவர் நால்வர், நாயன்மார் பெருமக்கள்.
திருநெறி நின்று ஒருநெறி போற்றி நலமிகு நன்னெறியை நமக்கு காட்டிய பெருமக்களுள் மணிவாசகர் உயிர் பொருட்டு உணர்த்திய சிவச்சிந்தனை போற்றுதலுக்குரியது.
உயர்வான மாசற்ற மாணிக்க ஒளியை ஒத்த செம்பொருளான சிவப்பரம்பொருளை தம் வாசகத்தால் பாடி உய்வடைந்த பெருமகனார்; பெருமான் திருவடி தீக்கை நல்க ஈடற்ற திருவடி பேற்றினை பெற்ற திருமகனார்.
மாணிக்கவாசகப் பெருந்தகை அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் இன்தமிழ்ச் சொல்லால் இனியானை போற்றும் இனிமைமிகு பாடல்களாகும்.
இவரது ஞானப்புலம்பலான திருவாசகமும் திருக்கோவையாரும் பாடுவதற்கு இனியவை; பரவுவதற்கு எளியன; உய்த்துணர்வதற்கு அரிய மெய்ப்பொருளை ஆழ உணர்த்த வல்லன; ஊனினை உருக்கி உள்ளொளி பெருகச் செய்யும் பேராற்றல் மிக்கவை.
" *வான்கலந்த மாணிக்கவாசக* *! நின் வாசகத்தை*
*நான்கலந்து பாடுங்கால்* ,*நற்கருப்பஞ்சற்றினிலே*
*தேன்கலந்து, பால்கலந்து* , *செழுங்கனித் தீஞ்சுவை*
*கலந்து,என்*
*ஊன்கலந்து,* *உயிர்கலந்து, உவட்டாமல்* *இனிப்பதுவே!"*
"*வாட்டமிலா மாணிக்க* *வாசக நின் வாசகத்தை*
*கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்*
*வேட்டமுறும் பொல்லா விலங்குகளும்* *மெய்ஞ்ஞான*
*நாட்டமுறும் என்னிலிங்கு* *நானடைதல் வியப்பன்றே!.* "
வள்ளலார் உள்ளுணர்ந்து போற்றுகிறார்!
மாணிக்கவாசகர் அருளிச் செய்த பாடல்கள் உயிர்க்குச் சிவபரத்துவத்தை உணர்த்தும்; திருவருளை வியந்து போற்றும்; திருவருள் வீழ்ச்சி பெறும் முறையை அறிவிக்கும்; திருவருள் வீழ்ச்சியினால் ஏற்பட்ட தன்மையை/அனுபவத்தை ஓயாது உரைக்கும்; பற்றற்றப் பெருமானைப் பற்றி பக்குவம் அடையும் வழி காட்டும்.
இத்தகு நனிசிறப்பு உடைய காரணத்தினால்
" *திருவாசகத்துக்கு உருகாதார்* , *ஒரு வாசகத்துக்கும் உருகார்* "
எனத் திருவாசகத்தைச் சிறப்பித்துக் கூறுவர் சைவ ஆன்றோர்.
ஓரிறை கொள்கையை ஓயாமல் உணர்த்தியவர் மாணிக்கவாசகர்.
பேரறிவு பொருந்திய இறைவன் ஒருவன்; அவனே சிவப்பரம்பொருள்; அவ் ஒருவனே உயிர்கள் தொழத்தக்கவன்; திருவருள் காட்ட உயிர் அவனை காணலாம்.
மாணிக்கவாசர் காட்டிய, உணர்த்திய பெருநெறியில் வழுவாது நின்றொழுகுவதே அப்பெருமகனார்க்கு நாம் செய்யும் குருபூசை!!!
மாணிக்கவாசகர் நின்ற நெறியில் நாமும் திறம்பட நிற்போம்; அவர் காட்டிய நன்னெறியை நாமும் பற்றுவோம்; அகமகிழ அடியார் பாடிய பெருமானை நாமும் புகழ்ந்தேத்த...
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment