Saturday, August 31, 2024

63 நாயன்மார்களில் ஒருவரான செருத்துணை_நாயனார்...

சிவ வழிபாட்டிற்கான பூவினை முகர்ந்து 
சிவபதாரம் செய்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்த,
63 நாயன்மார்களில் ஒருவரான 
#செருத்துணை_நாயனார் 
குருபூஜை: முக்தி நாள் 
(#ஆவணி_பூசம்)
செருத்துணை நாயனார் சிவவழிபாட்டிற்கான பூவினை முகர்ந்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்த வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
செருத்துணை நாயனார் பண்டைய சோழ நாட்டின் ஒருபகுதியாக விளங்கிய மருகல் நாட்டின் தஞ்சாவூரில் தோன்றியவர்.

வேளாண்குடியின் தலைவராக விளங்கிய இவர் மன்னர்களுக்கு போரில் துணை செய்யும் படை உடையவராதலின் இப்பெயரினைக் கொண்டு விளங்கினார்.

இயல்பிலேயே சிவனாரிடத்தும் அவர் தம் தொண்டர்களிடத்தும் பேரன்பு கொண்டவராக செருத்துணையார் விளங்கினார்.

சிவாலயங்களுக்கு திருப்பணிகள் செய்வதை தமது கடமையாகக் கொண்டு செயலாற்றினார். திருக்கோவில்களில் வழிபாடுகள் நடைபெற வழிவகை செய்தார்.

சிவனடியார்களை காப்பதில் துணிவோடு செயல்படுவார். சிவனடியார்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பார். சில நேரங்களில் தண்டிக்கவும் செய்வார்.

ஒருசமயம் செருத்துணையார் திருவாரூர் சென்று, அங்கு தங்கியிருந்து திருக்கோவிலுக்கு திருத்தொண்டுகள் வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார்.

அப்போது பல்லவ அரசர் கழற்சிங்க நாயனார் தம்முடைய பட்டத்தரசியுடன் திருவாரூர் திருக்கோவிலுக்கு வழிபாடு மேற்கொள்ள வந்திருந்தார்.

திருவாரூர் திருக்கோவிலின் பூமண்டபத்தில் இறைவனாருக்கு மாலைகள் தொடுத்துக் கொண்டிருக்கும் பணியினை சிலர் மேற்கொண்டிருந்தனர்.

அப்போது பூ ஒன்று கீழே விழுந்தது. அங்கு வந்த பல்லவ பட்டத்தரசி அப்பூவின் அழகு மற்றும் மணத்தால் கவரப்பட்டு பூவினை எடுத்து முகர்ந்தாள்.

பூமண்டபத்தில் இருந்த செருத்துணையார் அரசியாரின் செயலைக் கண்டார்.

“இறைவனாருக்கான பூவினை முகர்ந்தல் என்பது மிகவும் தவறானது. இச்செயல் சிறியதாயினும் குற்றமுடையதே. இதனை இப்போதே கண்டிக்காவிடில் இது வளர்ந்து பெரிய தவறாக மாறும்” என்று எண்ணினார்.

தம்மிடமிருந்த கத்தியால் தவறு செய்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்தார். வலியால் பல்லவ அரசி கத்தினாள்.

அரசியின் கூக்குரலைக் கேட்டு அவ்விடத்திற்கு வந்த கழற்சிங்க நாயனாரிடம், ‘இறைவனாருக்கான பூவினை முகர்ந்து சிவபதாரம் செய்த இப்பெண்ணின் மூக்கினை நானே அரிந்தேன்.’ என்று துணிவுடன் கூறினார்.

இறைவனுக்காக அடியவர் செய்த செயலை கண்டு அரசன் வியந்தான். அடியவர்களின் பக்தியைக் கண்ட இறைவனார் அரசன், அரசி, அடியார்க்கு அருள் புரிந்தார்.

அரசி என்றும் பாராது சிவபராதம் செய்த கழற்சிங்க நாயனார் மனைவியின் மூக்கினை அரிந்த செருத்துணை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பெருமை பெற்றார்.

செருத்துணை நாயனார் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

செருத்துணை நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

மகா சங்கடஹர சதுர்த்தியில் விரதம்

பொதுவாக மாதா மாதம் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியை தவறவிடுபவர்கள் இந்த மகா சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால், ஒரு வருடம் விர...