விஜயதசமி பற்றிய பதிவுகள் :*
வெற்றிகளை அளித்திடும் விஜயதசமி நன்னாளில் கல்வி, கலைகளுக்குரியப் புதுத் தொடக்கம் செய்யப்பெறுவதைச் சம்பிரதாயமாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். தவிர தொழிலகங்கள், அங்காடிகள் முதலான அனைத்துத் துறையினரும் புது வணிகக் கணக்கு தொடங்கிடும் நன்னாளாக இந்நாளைப் போற்றுகின்றனர்.
ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள். அம்பிகையைப் பூஜிக்க உகந்த சிறப்பான நாட்கள். அவற்றுள் சரத் காலத்தில் கன்யா மாதம் எனப்படும் புரட்டாசி மாதத்தில் அமையும் 'சாரதா நவராத்திரி அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுவது.
'சாரதா' என்பது கலைமகளைக் குறிக்கும் பெயர். அம்பிகையை 'சாரதா ஆராத்யா' - (சாரதையினால் ஆராதிக்கப் பெறுபவள்) என லலிதா சஹஸ்ரநாமம் போற்றுகின்றது.
'சரத் ருது' என்பது பூமியின் மழை தொடங்கிடும் காலம். கடும் கோடைக்குப் பிறகு இலேசான மழைப் பொழிவு ஏற்பட்டு பூமி குளிர்ச்சி அடையும் காலம் இது.
இதமான இத்தகு பருவச் சூழலில் பூமியில் வாழும் அனைத்து சிறு உயிர்களும் விருத்தி அடையும் காலமாக இது அமைகிறது. துறவிகள் தங்களது காலடி பட்டால் மண்ணில் விருத்தியாகும் நுண்ணுயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால்தான் இக்காலகட்டத்தில் 'சாதுர்மாஸ்யம்' என்ற விரதத்தினை மேற்கொண்டு ஓரிடத்தில் தங்கி விடுகின்றனர்.
ஜோதிட ரீதியாக கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இந்த சமயத்தில் சூரியனுடைய கிரணங்களும், பூமியிலுள்ள பௌதீக சக்திகளும் தொடர்பு கொள்வதால் அனைத்து பொருட்களுமே விருத்தி அடையும் தன்மை உண்டாகின்றது.
மேலும் சூரியன் ஆத்மகாரகன். அவர் பிரவேசிக்கும் கன்னி ராசிக்குச் சொந்தமான புதன் கிரகமோ புத்திகாரகன். ஆக, இத்தகைய கிரக சேர்க்கையினால் இம்மாதத்தில் பிள்ளைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் கல்வித் தொடக்கம் செய்து வைப்பது சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக கலைகளின் விழாவாகிய நவராத்திரியில் மனோகாரகனாகிய சந்திரன் சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) அமையும்போது, வெற்றிகளை அளித்திடும் தசமி நன்னாளில் கல்வி, கலைகளுக்குரியப் புதுத் தொடக்கம் செய்யப்பெறுவதைச் சம்பிரதாயமாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். தவிர தொழிலகங்கள், அங்காடிகள் முதலான அனைத்துத் துறையினரும் புது வணிகக் கணக்கு தொடங்கிடும் நன்னாளாக இந்நாளைப் போற்றுகின்றனர்.
சைவ ஆதீனங்களில் இவ்விழா மிக முக்கியமானதொரு சம்பிரதாய விழாவாகக் இரு தினங்களும் கொண்டாடப் பெறுவது தொன் மரபாக விளங்குகின்றது.
ஆயுதபூஜையன்று திருமடங்களில் பாதுகாக்கப்படும் பழங்காலத்திய ஓலைச் சுவடிகளையும்; ஏடுகளையும் அழகாக அடுக்கி, வர்ணப் பட்டு வஸ்திரத்தினால் சுற்றி உருவமாக ஆக்கி வைப்பர். இதுபோன்ற மூன்று திருவுருக்களை அலங்கரித்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்திடுவர். இந்த ஏட்டுத் திருவுருக்களுக்கு குருமகா சந்நிதானங்கள் ஷோடஸ உபச்சாரங்களுடன் விசேஷ பூஜைகள் செய்வது மரபு.
தவிர திருமடத்தில் உள்ள பூஜா மணிகள், சேகண்டிகள், பல்லக்குகள், பதாகைகள், ஆசனங்கள், களஞ்சியங்கள், மரச் சாமான்கள்.., எனப் பண்டு தொடங்கி இந்நாள் வரை உள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து சந்தனத் திலகமிட்டு, மலர்களால் அர்ச்சித்து, அன்னப் பள்ளயமிட்டு விசேஷ ஆராதனைகள் செய்வர்.
பின்னர் இரவு பூஜை நிறைவிலும் இச்சம்பிரதாயங்கள் மீண்டும் முறையே நிகழ்த்தப் பெறும். மறுதினமான விஜயதசமி அன்று விசர்ஜன பூஜை செய்யப்படுவதும்; குருமார்கள் ஆசியுடன் புதுக்கணக்கு துவங்கப்படுவதும் இப்பகுதிகளில் வழக்கம்.
வெற்றிதரும் நாயகியான துர்கை வன்னி மரத்தில் அவதரித்ததாக நம்பிக்கை. இதனால் வன்னி மரத்தினை துர்கையாகவே கருதி வழிபடுவது மரபு. முற்காலத்தில் படைவீரர்கள் வன்னி மரத்தின் பொந்துகளில் தங்களது ஆயுதங்களை மறைத்து வைப்பர். இதனாலேயே அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரத்தின் கீழே வைத்து வழிபடுவார்கள்.
அசுரவதத்தின் பொருட்டு அவதரித்த அம்பிகை பதினெட்டு கரங்களுடன் கூடிய மகாசக்தியாக மஹாளய சதுர்த்தசி அன்று விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையே வியாபித்தாள். அசுரனை அழிக்கவல்ல பெரும் சக்தி உருவாகிவிட்ட மகிழ்ச்சியில் சகல தேவராதிகளும் அவளது திருவடிகளில் தங்களது ஆயுதங்களைச் சமர்ப்பித்து வணங்கி நின்றனர்.
இதன் நீட்சியாகத்தான் சரஸ்வதி பூஜையன்று ஆயுதபூஜை செய்யப்படும் சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. வன்னி மரம் வீரத்தின் அடையாளமாக வணங்கப்படுவது.
வன்னி மரத்தினை வணங்கிய வீரசமூகத்தினரே பிற்காலத்தில் வன்னியர் எனப்பட்டனர். வன்னி மரத்திற்கு தெலுங்கில் பங்காரம் (பங்காரம் - தங்கம்) என்பது பெயர்.
விஜயதசமி அன்று வன்னி இலைகளை பங்காரம் என்று சொல்லி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் வன்னி இலைகளால் அம்பிகையை அர்ச்சிப்பதால் அதீத நற்பலன்கள் கிடைத்திடும். ஆயினும் பவழமல்லி மலர்கள் சரஸ்வதி பூஜைக்கு உபயோகிப்பது கூடாது என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.
வெற்றிகளைத் தந்திடும் இந்நாள் கலை மற்றும் இசைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு மிக முக்கியமானதொரு நாள். இசைக்கருவிகளுக்கு அன்னப்பள்ளயமிட்டு தூப தீபங்களுடன் வழிபாடு செய்து பூஜை நிறைவில் வாத்தியங்களை இசைத்தும்; பாடல்களைப் பாடியும் கலைமகளைப் போற்றுவதன் மூலம் ஆண்டு முழுவதும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கை.
விஜயதசமி அன்று பெரும் சிவாலயங்களில் நிகழ்த்தப்படும் அம்பு போடுதல் என்கிற நிகழ்வு முக்கியமானது. விஜயதசமி அன்றைய இரவு முருகப்பெருமான்
தனது செங்குதிரை வாகனத்தில் ஆரோகணித்தவராய் வேட்டைக்குப் புறப்படுவார். ஆற்றங்கரையில் அம்பு போட்டுவிட்டு மீண்டும் ஆலயம் திரும்பும் முருகப்பெருமானை தீப ஆரத்தியுடன் உபச்சாரங்கள் செய்து வரவேற்பர் . இதனை பரிவேட்டை அல்லது பாரி வேட்டை என்று அழைப்பர்.
ஐப்பசி சூரசம்ஹார நிகழ்விற்கு ஆயத்தமாகும் முருகப்பெருமான் தனது அன்னையின் அருளைப் பெறுவதற்கான ஐதீக நிகழ்வாக இது செய்யப்படுகிறது.
இப்படி எல்லா வகைகளிலும் ஏற்றங்களையும்; வெற்றிகளையும் தந்திடும் நன்னாளாகத் திகழ்ந்திடும்..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment