Saturday, October 12, 2024

தியானம் என்றால் என்ன?



இந்த தியானம் என்றால் என்ன இது பலருக்கும் இருக்கும் கேள்வி
தியானத்தைப் பற்றி நான் படித்ததை அறிந்த விஷயங்களை சிலதை பகிர்ந்து கொள்கின்றேன்.
தியானம் என்பது ஒரு செயலல்ல அதை நீங்கள் பழக முடியாது அதை நீங்கள் "செய்ய "முடியாது அது ஒரு தன்மை அந்தத் தன்மையில் நீங்கள் இருக்கலாம். 
தியான தன்மையோடு நீங்கள் நடக்கலாம் சாப்பிடலாம் குளிக்கலாம் உங்கள் வாழ்வின் அன்றாட வேலைகள் அனைத்தையும் தியான நிலையில் இருந்து செய்ய முடியும்.

பலரும் நினைப்பது போல தியானம் என்பது எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து மட்டுமே செய்யக் கூடியது அல்ல ஒருவன் தியான தன்மையோடு போர் புரிய கூட முடியும்.

முதலில் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவது அல்ல (அது consentretion) தியானம் என்பது
 மனதை பயன்படுத்தாமல் இருப்பது (meditation )

மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பதும் சிந்தனை என்பதும் நீங்கள் செய்யும் மற்ற செயல்களை போல ஒரு செயல்தான் ஆனால் தியானம் என்பது எந்த செயலும் செய்யாத ஒரு அமைதி நிலை. சுற்றிவரும் சக்கரத்தின் சுற்றாத மைய அச்சு போல.. உங்களுக்குள் இருக்கும் இயக்கத்தை நீங்கள் இயங்காமல் கவனிப்பது.

மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது மனதை பலமாக்கும் ஒரு செயல். 
அது வாழ்வில் வெற்றி பெற  உதவும்.
ஆனால் தியானம் உங்கள் மனதை பல படுத்தாது அது உங்கள் மனதை கடந்து செல்ல உதவும். மனதை ஒருநிலைப்படுத்துதல் மனமற்ற நிலையில் இருத்தல் இரண்டுமே முக்கியமானதுதான் அதில் மனமற்ற நிலையில் இருத்தல் கொஞ்சம் கடினமானது. காலம் காலமாக மனதை பயன்படுத்தி மட்டுமே அனைத்து செயலையும் நாம் செய்து பழகி விட்டோம மனதை பயன்படுத்தாமல் இருப்பது என்பது அப்படி ஒரு செயலை செய்வது என்பது நமது பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆனால் நமக்கே தெரியாமல் வாழ்வில் நாம் பலமுறை அந்த தியான தன்மையிலிருந்து இருக்கின்றோம் மனமற்ற நிலையில் சில வினாடிகள் நாம் பலமுறை இருந்து இருக்கின்றோம் 
அது எப்போ ??

சாலையில் நீங்கள் நடந்து செல்கிறீர்கள் ஒரு வாகனம் உங்களை மோதுவது போல வந்து தற் செயலாக நீங்கள் தப்புகிறீர்கள்.... அந்த சில வினாடிகளில் உங்கள் மனம் வேலை செய்வதில்லை உடனடியாக செயலாற்றி நகர்ந்து தப்பினீர்கள் அல்லவா அது சிந்தனையால்  விளைந்த செயல் அல்ல.
அங்கே உங்கள்  மனம் செயல்படுவதற்கு நேரமே இல்லை. திடீரென்று அங்கே நீங்கள் விழிப்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வளவு நேரம் உள்ளுக்குள் மன ஓட்டதொடு நடந்து வந்த நீங்கள் மனமற்ற நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள். அப்போது உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தும் உங்கள் கண்ணுக்கு திடீரென்று தெரிகிறது சுற்றியிருக்கும் ஒலிகள் உங்கள் காதுகளுக்கு கேட்கிறது.

நண்பர்களுடன் சேர்ந்து மிக அதிகமாக சிரிக்கும் போது கவனித்து இருக்கிறீர்களா திடீரென்று சில வினாடிகள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.
தொடர்ச்சியான சிரிப்புக்குப் பின்னால் அமைதி எங்கிருந்து வருகிறது.
காரணம் தொடர்ச்சியான சிரிப்பு உங்கள் மனதை கொஞ்ச நேரத்துக்கு நிறுத்தி வைக்கிறது அந்த சில வினாடி உங்கள் மனதில் எண்ணங்கள் எதுவும் இருப்பதில்லை. உங்களுக்கே தெரியாமல் தியான தன்மையில் அப்போது இருக்கிறீர்கள்.

மலை ஏறும் சாகச வீரர்கள்... கால்களைக் கட்டிக்கொண்டு தலைகீழாக குதிப்பவர்கள்... இவர்கள் ஏன் அந்த சாகசத்தை விரும்புகிறார்கள் தெரியுமா காரணம் அந்த கணத்தில் அவர்கள் மனம் நின்றுபோய் தியானம் தன்மையில் இருக்கிறார்கள் தியானம் கொடுக்கும் பரவசம்தான் அவர்களை சாகசம் செய்ய தூண்டுகிறது.
அந்த நேரத்தில் அவர்கள் உணரும் பரவசத்தைக் கொடுத்தது தியானம்தான் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆம் மனமற்ற நிலை என்பது ஒரு பரவச நிலை தான்.

இன்னொரு ஆச்சரியமான விஷயத்தை சொல்கிறேன். மகிழ்ச்சியை விடவும் துக்கம் சோகம் தியானத்திற்கு மிகவும் நெருக்கமானது.  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனதில் மேலோட்டமாக மட்டுமே வாழ்கிறீர்கள். துக்கத்தின் போது உங்கள் மனதிற்கு உள்ளே கடந்து செல்கிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு துக்கம் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு நீங்கள் ஆழமாக உள்ளே செல்கிறீர்கள். அப்போது நீங்கள் அனைத்தையும் விழிப்போடு கவனிக்கிறீர்கள். எப்போதாவது துக்கமாக இருந்தால் அந்த கணத்தை கண்மூடி அனுபவிக்க தவறாதீர்கள்.
உங்களுக்கு உள்ளே இறங்க மிகச் சிறப்பான தருணம் அதுதான்.

தியானம் என்பது எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பது நம்மைவிட விலங்குகளும் பறவைகளும் அதிகமான தியான தன்மையோடு இருக்கின்றன.
ஆனால் அவைகளுக்கும் நமக்கும் உள்ள ஒரு வித்தியாசம் அவைகளால் அந்த தன்மையில் இருப்பதை உணர முடியாது மனிதனால் அது முடியும். ஒரு விலங்கு எப்பொழுதும் தன்னை சுற்றியுள்ள விஷயத்தை மட்டுமே கவனமாக உள்ளது அவைகளுக்கு கடந்த காலமும் எதிர்காலமும் இல்லை எப்போதுமே நிகழ்காலத்திலேயே அவைகள் வாழ்கின்றனர்.

ஒரு இருட்டான சாலையில் நீங்கள் நடந்து செல்கிறீர்கள் அந்த  இருட்டுக்குள் ஒரு கொலைகாரன் கத்தியோடு எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் மேல் பாய்வதற்கு தயாராக இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக நடப்பீர்கள் என்ன விதமான நிலையில் இருப்பீர்கள் ?
அப்படி ஒரு நிலையில் அந்த அளவு விழிப்பில் சாதாரணமாக நடந்து செல்வதுதான் தியான நிலையில் நடப்பது.

ஜப்பானின் சாமுராய் வீரர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அங்கே கத்திச்சண்டை களையும் தற்காப்பு கலையும் உண்டு பண்ணது.
துறவிகள் என்பது ஆச்சரியமான விஷயம்... மனதை நிறுத்தி தியானம் செய்ய விரும்பிய துறவிகளுக்கு கத்தி எதற்கு ??

தியானம் பழக வந்த மாணவர்களுக்கு அவர்கள் கத்தி சண்டையை பழகி கொடுத்தார்கள். அவர்களுக்குள் கத்தியைக் கொடுத்து சண்டை அடிக்க விட்டார்கள்.  உங்கள் உடலுக்குள் எப்போது வேண்டுமானாலும் கத்தியை இரக்க தயாராக ஒருவன் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் போது உங்களால் மனதை பயன்படுத்த முடியாது அங்கே உங்கள் சிந்தனைக்கு வேலை எதுவும் இல்லை நீங்கள் சிந்திக்கும் நேரம் அவன் கத்தியை உங்கள் உடலில் இரக்க கூடும்..
மிகுந்த விழிபுடன் வாள் பிடித்து நிற்கும் போது.. அந்த விழிப்பை கவனிக்க கற்று கொடுத்தார்கள் குருமார்கள்.

சரி இந்த தியானத்தை எப்படி பழகுவது?
முன்பே சொன்னது போல அது ஒரு செயலல்ல பழகுவதற்கு. அது ஒரு தன்மை. அது ஒரு நிலை. அது ஒரு நுணுக்கம்.. நீச்சலை போல. அதை அறிந்து கொண்டால் அதில் நீங்கள் இருக்கலாம். அதை நீங்கள் தொடங்க வேண்டியது உங்கள் எண்ணத்தை கவனிப்பதின் மூலமாக.

சரி அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்....

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உங்களுக்குள் கவனித்து தயாராக இருங்கள். உங்களுக்கு உள்ளே வரும் எண்ணங்களை மூன்றாவது மனிதனை போல தள்ளி நின்று கவனித்த பழகுங்கள்.

ஒரு பிஸியாக இருக்கும் சாலையில் சென்று நில்லுங்கள் அங்கே செல்லும் வாகனங்களை தள்ளி நின்று கவனியுங்கள். இப்போது தனியாக அறைக்குள் செல்லுங்கள். கண்ணை மூடி உங்கள் மனதிற்குள் கவனியுங்கள் அங்கேயும் சிந்தனைகள்தான் வாகனங்களை போல என்று கற்பனை செய்யுங்கள் அந்த வாகனத்தை தள்ளி நின்று கவனித்ததை போல எண்ணங்களை தள்ளி நின்று கவனியுங்கள். எந்த  சிந்தனை வந்தாலும் அதில் நீங்கள் கலந்து விடக்கூடாது தள்ளி நின்று மட்டுமே கவனிக்க வேண்டும் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கவனிப்பது மட்டும்தான். இதை செய்ய செய்ய உனக்குள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனம் படிப்படியாக வேகம் குறைவதை காண முடியும்.

நீங்கள் உங்கள் சிந்தனையை கவனித்தால் சில விஷயத்தை புரிந்து கொள்ள முடியும். எண்ணங்கள் என்பது ரயில்வே போல ஒரு தொடர்ச்சியான ஓட்டமல்ல. அவைகள் சாலையில் செல்லும் காரை போல குட்டி வாகனங்களை போல ஒன்று அதற்குப் பின்னால் ஒன்று அதற்குப் பின்னால் ஒன்று என்று தொடர்கிறது.
ஒரு குறிப்பிட்ட சிந்தனை எப்பொழுதும் முடிகிறது அடுத்த சிந்தனை எப்போது தொடங்குகிறது என்று அந்த புள்ளியை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால் சிந்தனை ஏற்படுவது நின்று விடுவதை கவனிக்கலாம்.

இப்போது மீண்டும் சாலைக்கு செல்லுங்கள் இப்போது நீங்கள் கவனிக்க வேண்டியது வாகனங்களை அல்ல அந்த வாகனத்திற்குள் இடையிலான இடைவெளியை.
இதற்கு முன் நீங்கள் ஒரு வாகனத்தை கவனித்தீர்கள். ஒரு வாகனம் அதைத் தொடர்ந்து அடுத்த வாகனம் இப்படி.
ஆனால் இப்போது நீங்கள் அந்த இடைவெளியை கவனியுங்கள் ஒரு இடைவெளி அதைத்தொடர்ந்து வாகனம் அதைத் தொடர்ந்து மீண்டும் இடைவெளி.
உண்மையில் சாலையில் இருப்பது இடைவெளி மட்டும் தான் வாகனங்கள் குறுக்கே வந்து செல்பவை.

அப்படியே நமது மனதிற்குள் உற்று கவனித்தால் அதன் இயல்பும் வெற்று வெளி தான். சிந்தனை என்பது குறுக்கே வந்து செல்லும் வாகனங்களை போன்றது தான். ஆனால் தொடர்ச்சியான சிந்தனையால் மனம் நிரம்பி இருப்பதால் மனதின் இயல்பு சிந்தனை என்பதைப் போல நமக்குத் தெரிகிறது. உண்மையில் மனம் என்பது ஒன்று இல்லை. இருப்பது சிந்தனைகளின் தொடர்ச்சி தான் பல சிந்தனைகளின் தொடர் ஓட்டம் காரணமாக அங்கே தொடர்ச்சியாக எதோ இருப்பதை போல தெரிகிறது.
வேகமாக சுற்றும் காற்றாடி பார்க்க ஒரு வட்டு போல தெரிவதை போல்.

தியானம் என்பது வேறொன்றுமல்ல விழிப்பு நிலை தான். நீங்கள் எத்தனை சதம் விழிப்போடு இருக்கிறீர்களோ... அத்தனை சதம் மனம் குறைந்து காணப்படுவீர்கள். நீங்கள் பத்து சதம் விழிப்போடு இருந்தால் 90 சதம் மனம் இருக்கிறது. நீங்கள் 90 சதம்  விழிப்போடு இருந்தால் 10 சதம் மனம் இருக்கிறது. 100 சதம் விழிப்போடு இருக்க முடிந்தால் அங்கே மனம் இருப்பதில்லை அதுவே தியான நிலை.

நீங்கள் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அது சாதாரணமான வேலையாக இருக்கலாம் நீங்கள் சாப்பிடுவது குளிப்பது நடப்பது இப்படி இவை எல்லாவற்றையும் முழு கவனத்தோடு ஈடுபாட்டோடு அந்த செயலை செய்தால் அந்த செயல் தான் தியானம்.

தியானம் ஏன் செய்ய வேண்டும் ?

தியானம் தான் உங்களுக்கு உள்ளே இருக்கும் உண்மை நிலையை வெளிக்காட்டுகிறது. உங்களது உண்மையான சுயத்திலிருந்து நீங்கள் எவ்வளவுதூரம் வெளிவந்த இருக்கிறீர்கள் என்பதை தியானத்தின் மூலம் தான் புரிந்து கொள்ள முடியும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்களையே நீங்கள் உணர்வதுதான்தியானம்....

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...