Monday, October 14, 2024

மூதேவியும் அதிர்ஷ்டமும் (ஜேஷ்டாதேவி வழிபாடு) சற்றே பெரிய பதிவு படித்தால் நல்ல பலன்....

*மூதேவியும்* *அதிர்ஷ்டமும்*
(ஜேஷ்டாதேவி வழிபாடு)

தலைப்பே வித்தியாசமாக தோன்றுகிறதல்லவா?

ஆம்,மகாலெஷ்மியின் மூத்த சகோதரியான அன்னை ஜேஷ்டாதேவியின்
(மூதேவி) அருளைப் பெற்றால்தான் அதிர்ஷ்டகரமாக,செல்வசெழிப்புடன் வாழ முடியும் என்பதற்கான பதிவுஇது.

முன்னோர்களும், தானும் செய்த தர்ம பலன்களால் எத்தனையோ பேர் செல்வந்தர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

அன்னை மகாலட்சுமியின் கருணையினை பெற்றவரும்  செல்வம் படைத்தவர்களாக வாழ்கிறார்கள்.

இதில் பலர் நிம்மதி இல்லாமல் இருக்க கண்டிருப்பீர்கள்.

லட்சுமியின் அருளை பெற்ற இவர்களுக்கு நிம்மதி ஏன் கிட்டவில்லை என்று ஆய்வு செய்ததில் பலரும் அன்னை லட்சுமியின் மூத்த சகோதரியான  மூதேவியை பழித்தும், மூதேவியின் அருளினால் கிடைக்கும் தூக்கத்தை ஒதுக்கியும்  அந்த நேரத்தை பயன்படுத்தி உழைத்து செல்வத்தை சேர்த்தது தெரிய வந்தது .

இரவில் மூதேவியின் அம்சமான தூக்கத்தை அனுபவித்தால்தான் ஸ்ரீதேவியால் சந்தோஷம் கிடைக்கும் .

 இல்லையேல் மூதேவி அனைத்தையும் தடுத்துவிடுவாள். 

மூதேவியை எவராலும் வெல்ல முடியாது . அதற்கென தனியே இறையருளும் பக்குவ உடலும் வேண்டும்.

சராசரி மனிதனால் முடியாத ஒன்றாகும் . 

இந்த தூக்கம் உலகத்தில் இறைவனால் அளிக்கப்பட்ட சொர்க்கமாகும். 

இந்த தூக்கம் இல்லாமல் உலகில் பாதி பேர் வேதனைபடுகிறார்கள்.

 மக்கள் எல்லோரும் ஒரு தவறை செய்கிறார்கள்.

 கஷ்டப்பட்டு வாங்க கூடியது லட்சுமிதேவியின் அருள் .

ஆனால் கஷ்டமே இல்லாமல்  இயற்கையை போல் இதமாக இலவசமாக எம் முயற்சியும் இல்லாமல் கிடைக்க கூடியது மூதேவியின் அருளே.

 இலவசமாக கிடைக்கக்கூடியவைகளுக்கு மக்கள் பெரும்பாலும் மதிப்பளிப்பதில்லை .

 அந்த இலவசங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது . 

காற்று, வெப்பம், பூமி, ஆகாயம், தண்ணீர், தூக்கம் இவைகளெல்லாம் இலவசமாகவே அனுபவிக்கிறோம்.

இதில் குறிப்பாக மக்கள் மத்தியில் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பானவர் மூதேவி என்றும் ,வெளிச்சத்துக்கு (சூரியன்) எதிர்ப்பு இருள் (சனி) என்றும் தவறான கருத்து கொண்டிருக்கிறார்கள்.

இது பெரும் தவறு.எனவே மூதேவியை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர் அருமையை தெரிந்து கொள்ள ஒரே ஒரு நாள் தூங்காமல் இருந்து பார்த்தால்
தெரியும். 

அவர் அருமை இவரை வெறுப்பதினால் எவ்வளவு செல்வம் இருந்தும் நிம்மதி தூக்கம் இழக்கின்றனர். 

அன்னை மூதேவியின் அம்சமான தூக்கம் நம்மை அரவணைக்கும் போது உடல் செல்வங்கள் காக்கப்படும்.

 மூளை சுறுசுறுப்படையும், மனம் பலம் பெரும். கோபம் தடைபடும், நிதானம் பெருகும், உஷ்ணம் குறையும், கண்கள் பலப்படும், சிந்தனை யோகம் கைகூடும், சக்கராக்கள் சீராகும், மர்ம உறுப்பு பலப்படும் இப்படி அத்தனை உடல் உறுப்புகளுமே தூக்கத்தினால் ஓய்வு பெற்று சக்தி பெறுகிறது . 

எனவே பகலில் தூங்கினால் தரித்திரம் என்றும் ,இரவில் நேரத்திற்கு உறங்கி அதிகாலையில். விழித்து லக்ஷ்மி அருள் பெறுவது நல்லது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

 பகல் வேளையில் தூங்கினால் கர்ம பாவத்துடன் தூக்கமும் பெருகி உழைப்பு பாதிக்கும் என்பதால் பகலில் மூதேவியை அண்டவிடக்கூடாது  விரட்டி விடு என்றார்கள். 

இரவில் உழைப்பே கதி என்று இல்லாமல் உழைத்த உடலுக்கு ஓய்வு கொடு என்றார்கள். 

இந்த ஓய்வு தூங்குவதால் மட்டுமே கிடைக்கும் என்பதை தெரிந்தும் தூக்கத்திற்கு மதிப்பளிக்காததால் பிரச்சனை அங்கேதான் உருவாகிறது .

உடல் செல்வம் சரியாக இயங்காத போதும் பொருட்செல்வத்தால் நிம்மதி இருப்பதில்லை . 

எனவே இரவு வேளையில் பணிமுடித்தபின் அவசியம் தூங்குவது நல்லது. 

டிவி, நெட், கேம் என பார்த்து ஆர்வ காட்சிகளால் தூக்கத்தை கட்டுபடுத்தி சமாளித்து தூக்கத்தை கெடுத்துக்கொள்கின்றனர். 

இதனால் மூதேவியின் கோபத்திற்கு மட்டுமல்ல ஸ்ரீதேவியின் அருளை பெறவும் தகுதி இழக்கிறார்கள்.

எனவே தேவையான அளவு தூக்கத்தை அனுபவியுங்கள். பகலில் தூங்காதீர்கள். 

நல்ல தூக்கத்தில் இறைவனின் தரிசனத்தை காணலாம். நல்ல தூக்கமே விடிவு விழிப்புக்கு உதவி செய்யும்.

 பிரம்ம முகூர்த்தத்தை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். 

தூக்கம் இல்லையேல் துக்கங்கொண்டவனாகவோ, வெறிகொண்டவனாகவோ, சந்தோஷத்தை குறுக்கு வழியில் அனுபவிப்பவனாகவோ,  தன் துன்பத்திற்கு தானே காரணமாகுபவனாகவோ, நோயுள்ளவனாகவோ தான் ஆகிறார்கள். 

யோசித்துப் பார்த்தால் இது அனைவரும் அறிந்த உண்மையாகும் . எனவே தூக்கமும் ஒரு செல்வமே எனவே அதனை நேரத்திற்கு அனுபவிக்க முக்கியத்துவம் கொடுங்கள், கட்டாயமாக தள்ளி போடாதீர்கள்.

 லட்சுமி அன்னை என்றோ ஒருநாள் தான் அருள் புரிவார்கள்.

 மூதேவி அன்னை தினசரி அருள்புரிவார்கள். 

மதிப்பவருக்கு நல்ல தூக்கம் கொடுப்பார்கள். 

மூதேவிக்கும், ஸ்ரீதேவிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. 

ஆத்மா துக்கம் இல்லாமல் இருந்தால்தான் இருவருமே அருள்புரிவார்கள். 

அவ்வாறு ஆத்மா துக்கமும், துயரமும் கொண்டு நிரம்பி இருந்தால் இருவருமே அருள் புரியமாட்டார்கள்.

எனவே மனதை துயரத்தால் நிரப்ப வேணடாம். 
துயரத்தை நீக்க வழி தெரியில்லை என்றாலும் தெய்வத்தின் மீது நம்பிக்கையை வையுங்கள் .

தன்னால் துயரம் விலகுவதை காண்பீர்கள். இந்த முயற்சி உங்களிடம் தான் உள்ளது. 

ஸ்ரீதேவி மூதேவி அருளை இனிதே பெறுங்கள். 

தூக்கத்தை கொன்று மேலும் துக்கத்தை பெறாதீர்.

 எந்நேரமும் தூங்கி சந்தோஷத்தையும் தடை செய்து கொள்ளாதீர்கள்.

 அளவான தூக்கத்தை அன்பான சிந்தனையோடு அனுபவியுங்கள்.

 அதுவே அன்னை மூதேவியின் வழிபாடாகும். அன்னை லட்சுமியின் அருளை பெறுவதற்கு அன்னை மூதேவி வழிவிட்டால் தான் உண்டு என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

 ”மூ” என்றால் உயர்ந்த, சிறந்த, உன்னத, உத்தம, மூல, முதன்மையான, மூத்த என்றெல்லாம் பொருளுண்டு. அப்படி இருக்கும்போது உயர்ந்த தேவியை வணங்கும் யாரும் தாழ்ந்து போவார்களா? சற்றே சிந்தித்துப் பார்க்கவும்.

மூதேவி என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டாதேவி திருமகளுக்கு மட்டும் மூத்தவள் என்று நினைக்க வேண்டாம்.

 நவகிரகாதியருக்கே மூத்தவள் ஜேஷ்டாதேவி. மேலும் மூத்தவள் என்றால் எல்லோருக்கும் முன்னால் உற்பவித்தவள் என்று மட்டும் பொருளல்ல. அனைவரையும் விட ஞானத்தில், இறை பக்தியில் உயர்ந்தவள் என்றும் பொருள் உண்டு.

திருக் கைலாயம், வைகுண்டம் போன்ற தெய்வ லோகங்களைப் போல ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு என்றே ஒரு பிரத்யேகமான லோகமும் உண்டு.
 
மௌனகுரு தட்சிணா மூர்த்தி சனகாதி முனிவர்களுடன் காட்சி தருவதைப் போல ஸ்ரீஜேஷ்டாதேவியும் இரு கன்னிகைகளுடன் காட்சி தருவதை பல திருத்தலங்களில் நாம் பார்க்கலாம்.

 ஸ்ரீஜேஷ்டாதேவி லோகத்தில் நிரந்தர வாசம் கொண்ட இத்தேவியர்களின் திருநாமங்கள் வில்வாம்ருதா, சுநந்யை என்பதாகும்.

 ஸ்ரீஜேஷ்டாதேவியின் வலது புறத்தில் குதிரை முகத்துடன் அருள்புரியும் தேவியே வில்வாம்ருதா தேவி ஆவாள். 

ஒவ்வொரு தெய்வத்தின் அருள் புரியும் பாங்கு யுகம் என்னும் காலக் கோட்பாட்டைப் பொறுத்தும், மனிதர்கள் விலங்குகள் என்று ஜீவ சக்திக் கோட்பாட்டைப் பொறுத்தும் மாறுபடுவதைப் போல இத்தேவியர்களின் அருள்புரியும் பாங்கும் யுகத்திற்கு யுகம் ஜீவன்களைப் பொறுத்து மாறுபடும்.

 கலியுக நியதியாக மனிதர்களுக்கு இவர்களின் அனுகிரக பாகுபாட்டை விளக்க வேண்டுமானால் வில்வாம்ருதா தேவி மனிதர்களுக்கு ஞாபக மறதியைத் தரக் கூடிய தேவியாக அருள்பாலிக்கிறாள்.

பொதுவாக, தேவதைகளும் தெய்வங்களும் மனிதர்களுக்குத் தேவையான நற்சக்திகளைத் தானே வரமாகத் தருவார்கள்? 

அப்படி இருக்கும்போது ஞாபக மறதியை ஒரு தெய்வம் அளித்தால் அது எப்படி ஒரு அனுகிரகமாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம்?

உண்மையில் இதை தீவிரமாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் ஞாபக மறதியின் மகத்துவம் புரிய வரும்.

எந்த ஜீவ ராசியும் ஞாபக மறதி இல்லையென்றால் அது ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ளவே முடியாது.

 இதுவே உண்மை. இதற்காகத்தான் ஒரு ஜீவன் ஒரு பிறவி முடிந்து அடுத்து பிறவி எடுக்கும்போது இறைவன் அந்த ஜீவனின் முந்தைய பிறவி நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதுமாக அழித்து விடுகிறான்.

இதை மேலும் விளக்கமாக கூறவேண்டுமானால்  நீங்கள் ஏதாவது ஒரு வருத்தமான செய்தியைக் கேள்விப்பட்டால்  அன்று இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது.

நாட்கள் செல்லச் செல்ல அந்த துக்கமான செய்தியை எந்த அளவிற்கு மறக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்குத் தூக்கம் அமைய வாய்ப்புண்டு. 

அது மட்டுமல்லாமல் ஒருவர் தேவைக்கு அதிகமாக செல்வத்தைத் தேடி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இறந்தபின் தான் பாடுபட்டுத் தேடிய செல்வத்தின் நினைவு அவரிடம் இருந்தால் அவருடைய உயிர் தான் தேடிய செல்வத்தை விட்டுப் பிரியாமல் பேயாய் அவ்விடத்திலேயே சுற்றி வரும்.

இதைத்தான் பூதம் காத்த செல்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

 அந்த செல்வம் யாருக்கும் பயன்படாது. அதை வேறு யாரும் பயன்படுத்தவும் முடியாது. 

மனித உடல் இல்லாததால் உயிர் பிரிந்தவர்கள் ஆவி ரூபத்தில் அதை பயன்படுத்த முடியாது. 

மற்றவர்கள் அந்தச் செல்வத்தைக் கண்டால் அதைப் பயன்படுத்தும் எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது.

 எனவே பணம் சேர்த்தவர்களுக்கு ஞாபக மறதி என்ற ஒன்று ஏற்பட்டால்தான் அவர்கள் தாங்கள் தேடிய செல்வத்தைப் பற்றி மறந்து இப்பூமியிலிருந்து விடுதலை பெற்று அடுத்த பிறவிகளுக்குத் தங்களை ஆயத்தம் செய்து கொள்ள முடியும். 

அதே போல ஒருவர் உங்ளைத் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் மீண்டும் அவரைக் காணும் போதெல்லாம் அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும் அல்லவா?

 இவ்வாறு ஒருவர் உங்களுக்கு இழைத்த துன்பம் முற்பிறவிகளில் நீங்கள் அவருக்கு இழைத்த துன்பத்தால் ஏற்பட்ட விளைவாக இருந்தால் நீங்கள் அவரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறுதானே. 

இத்தகைய பழிவாங்கும் உணர்ச்சி உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாக தங்கி விடும்போது அதுவே கான்சர் அல்லது புற்று நோய் என்ற கொடிய நோயைத் தோற்றுவித்து விடுகிறது.

மனிதன் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் காரணம் அவனுடைய முற்பிறவியின் செயல்களே என்று மகான்கள் வலியுறுத்துகிறார்கள்.

 பழிக்குப் பழி என்ற உணர்வு சமுதாயத்தில் தற்போது மேலோங்கி நிற்பதன் காரணமாகவே எங்கு நோக்கினும் புற்று நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் கண் கூடாகக் காணலாம். 

எனவே தயவு செய்து பழிவாங்கும் எண்ணத்தை வேரோடு களைய இறைவனை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

 அவ்வாறு ஒருவர் அளித்த துன்பத்தை மறக்கத் தேவையான சக்தியை அளிக்கும் தேவியே வில்வாம்ருத தேவி ஆவாள். 

இவ்வாறு மனித உடல் இருக்கும்போது அந்த உடலில் தூக்கம் போன்ற சுகத்தை அனுபவிக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக வில்வாம்ருத தேவியும் மனித உடலைத் துறந்து அடுத்த பிறவிக்குத் தயாராவதற்காக இப்பிறவி நிகழ்வுகளை மறக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக சுநந்யை தேவியும் அருள்பாலிக்கிறார்கள்.

 ஸ்ரீஜேஷ்டாதேவியின் இடது புறம் அருள்பாலிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள்.  
ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி பிரசாதமாகப் பெற்ற அபிஷேக தீர்த்தத்தை தூங்கு மூஞ்சி மரத்திற்கு ஊற்றி மேற்கு நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வந்தால் எதை எதை மறக்க வேண்டுமோ அதை மறக்க வைக்கும் சக்தியை வில்வாம்ருத தேவியும் சுநந்யை தேவியும் அருள்வார்கள்.

மேலும் பாதுகாப்பு, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மறுமணம் செய்து கொண்ட இளம் பெண்கள் தங்கள் முந்தைய மண வாழ்க்கை நிகழ்ச்சிகளால் தற்போதைய வாழ்வில் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து மன அமைதி இழக்க நேரிடும்.

 அத்தகையோருக்கு மன அமைதி அளிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள். 

அதே சமயம் கணவனை இழந்தவர்கள் தாங்கள் மீண்டும் மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் கணவனையே நினைத்து மிஞ்சிய காலத்தை ஆன்மீகமாகப் பாதையில் அமைத்துக் கொள்வோம் என்ற மன உறுதியுடன் இருந்தால் அவர்களுக்குத் தேவையான மன உறுதியும் பாதுகாப்பான சூழ்நிலையும் அமைய சுநந்யை தேவி அருள்பாலிக்க வல்லவள். 

பல்வேறு உடல், மன உபாதைகளால் ஒவ்வொரு இரவும் தூக்க மாத்திரையை உட்கொண்டே தூங்குவது என்னும் நோயால் பலரும் வாடுகிறார்கள்.

 அத்தகைய பழக்கத்திற்கு ஆளானோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு மேற்கூறிய முறையில் வழிபாடுகள் இயற்றி வந்தால் நாளடைவில் இயற்கையான உறக்கமும் மன அமைதியும் கிட்டும். நரம்புத் தளர்ச்சி நோய்கள் குணமடையும்.

தியாக சீலரான, உத்தம புருஷரான உத்தாதலக மகரிஷிதான் ஸ்ரீஜேஷ்டாதேவியின் கணவராவார்.தினமும் காலையில் எழுந்தவுடன் இரு உள்ளங்கைகளை பார்த்து தரிசனம் செய்து "ஓம் ஸ்ரீ உத்தாதாலக மஹரிஷியே சரணம் என்று யார் ஒருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு அன்னை ஜேஷ்டாதேவியின் அனுகிரகம் கிடைத்து தரித்திரநிலை அணுகாமல் பாதுகாப்பாள்.

ஸ்ரீஜேஷ்டா தேவியை ரோஹிணி, மகம், அனுஷம், திருவோணம் என்னும் நட்சத்திரங்களில் வழிபடுவதால் உறுதியான மன உறுதியும் எடுத்த காரியத்தை வெற்றியுடன் சாதிக்கும் திறமையும் சிறப்பான முனிநிழல் அனுகிரகமாக கிட்டும். 

ஒரு வருடத்தில் வரும் மேற்கூறிய நான்கு நட்சத்திர தினங்களிலும் தொடர்ந்து வழிபாடுகளை நிகழ்த்தி வந்தால் எத்தகைய சூழ்நிலையிலும் அஞ்சாமல் செயல்படும் மன உறுதியைப் பெறலாம்.

நவமி, திரயோதசி, பௌர்ணமி திதிகளும் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய சிறப்பான பூஜை தினங்களாகும். இந்த திதிகள் மேற்கூறிய நட்சத்திரங்களுடன் இணைந்து வந்தால் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...