*#மாங்காடு #காமாட்சி அம்மன் - சிறப்பு தகவல்கள்*
காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள். மாங்காடு காமாட்சி அம்மன் பற்றிய 25 சிறப்பான, அரிய தகவல்களை கீழே பார்க்கலாம்.
மாங்காடு காமாட்சி அம்மன் 25 சிறப்பு தகவல்கள்
1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.
3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.
4. மாங்காடுக்கு வடமொழியில் “ஆம்ராரண்யம்” என்று பெயர். அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.
5. காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.
7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள். அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.
8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.
9. இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.
10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
11. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
12. இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
13. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
14. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.
15. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.
16. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.
17. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.
18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.
19. மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
20. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் “அழகிய சோழ நல்லூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
22. அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.
23. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.
24. மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.
25. கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment