Tuesday, October 15, 2024

திருவாரூர் வழுவூர் அமைந்துள்ள அருமருந்தீசர்....

ஆனை உரித்த தேவரின் மிக அபூர்வ கோலம்...!
தல வரலாறு

சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த தலங்களை அட்ட வீரட்டம் என்பர். 

அந்த எட்டு செயல்களில் ஒன்றே கஜாசுரன் என்பானின் யானை உடலுக்குள் நுண்ணியனாகிய சிவபெருமான் புகுந்து யானை உடலினைப் பிளந்து கால பைரவராக ஆடிக்கொண்டே வெளி வந்த கோலமாகும்.

இந்நிகழ்வு நடத்த இடம் வழுவூர் எனும் திருவூராகும். திருவாரூர் மயிலாடுதுறை சாலையினை ஓட்டியவாறு வழுவூர் அமைந்துள்ளது.
.
தாருகாவனமாக (தேவதாருமரங்கள் உள்ள இருந்த இங்கு தன் மனைவியருடன் வசித்த இருடிகள் (முனிவர்கள்) பூர்வமீமாம்சை எனும் நெறியைப் பின்பற்றியவர்கள். 

அவர்கள் வேள்வி மூலம் மட்டுமே அனைத்தையும் பெறலாம் என்ற கோட்பாடு உடையவர்கள். 

சிவன் திருமால் போன்ற பெருந்தெய்வங்களை ஆராதிக்க மறுத்தவர்கள் எனவே தங்களின் ஆற்றல் மிக வேண்டும் என்பதற்காக மிமாம்சை நெறிவழி வேள்விகள் புரியத்தொடங்கினர்.

அவர்கள் தம் ஆற்றல்களையும், செருக்கையும், களைய விரும்பிய கயிலை நாதன் வீணை ஒன்றைக் கையில் ஏந்தி கங்காளராக வட்டணை என்ற ஆடலை ஆடியவாறே தாருகா வனத்து முனிபுங்கவர் குடில்கள் வழியே சென்றார்.

கணமொன்று அவர்தம் பிச்சை கேட்கும் பாத்திரத்தைத் தலையில் சுமந்து கொண்டு பின் சென்றது. 

பெருமானாரின் கூற்றுக்கு ஏற்ப திருமால் மோகினி வடிவம் பூண்டு இருடிகள் யாகம் செய்யும் வேள்விச் சாலையினுள் புகுந்து இருடிகள் முன்பு மோகினி ஆட்டம் ஆடத் தொடங்கினார்.
.
பேரழகோடு பிட்சாடணராக ஆடிக்கொண்டு சென்ற பெருமானின் தோற்றப்பொலிவைக் கண்ட முனிபத்தினிகள் அவன் அழகின்பால்மையல் கொண்டனர்.

தாங்கள் கொண்டு வந்த பிட்சையாகிய அன்னத்தை பூதம் சுமந்து வரும் தட்டில் இட்டவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பாமல் வீணை இசையுடன் வட்டணை ஆடல் ஆடிவந்த பெருமானின் அழகில் இலயித்து மோகம் மிகுதியால் ஆடைகள் நெகிழ அவன் பின்னே தொடர்ந்து நடந்து சென்றனர்.
.
அதே நேரத்தில் வேள்விச் சாலையில் கடுமையான வேள்விபுரிந்த தாருகாவனத்து இருடிகளோ தங்கள் மந்திரங்களை மறந்து, வேள்வி நெறி பிறழ்ந்து மோகினியின் அழகில்  மயங்கி தடுமாறி நின்றனர். 

பின்னர் ஒருவாறு தங்கள் நிலை உணர்ந்த போது தங்கள் பத்தினிகளோ மோக நிலைப்பட்டு வீதியில் பிட்சாடணன் பின் செல்வதைக் கண்டனர். உடன் சிவன் பால் கடுங்கோபம் கொண்டனர். தங்கள் வேள்வியைக் கடுமையாகப் புரியத் தொடங்கினர்.
.
அப்போது அந்த வேள்வித்தீயிலிருந்து ஒரு கொல்புலி வெளி வந்தது.

கடுங்கோபத்துடன் திகழ்ந்த புலியை பிட்சாடணன் மீது ஏவினர். ஆடியவாறு வந்த பெருமானோ புலியைக் கிழித்து அதன் தோலை ஆடையாகப் பூண்டான்.

பின்னர் கடும் விடம் கொண்ட பாம்பு ஒன்றினை வேள்வித் தீயிலிருந்து எழச்செய்து கயிலை நாதன் மீது ஏவினர். 

கொல்ல வந்த பாம்பினைப் பிடித்து பெருமான் ஆபரணமாகப் பூண்டார். பின்னர் பரசு, தீ முதலியவற்றை ஏவினர். அதனைப் பிடித்து கரத்தில் ஏந்தினான். 

தீயிலிருந்து எழுந்த மான் ஒன்றை அவன்பால் ஏவினர்.  அதனையும் கையில் தரித்தான்.

முனிவர்களின் கோபம் உச்சம் பெற்றது. 

நிறைவாக வேள்வித் தீயிலிருந்து கஜாசுரன் எனும் கொல்யானை ஒன்றை எழுப்பி சிவன்பால் ஏவினர்.

அப்போது குழந்தை முருகனோடு உமையவளும் அங்கு வந்து சேர்ந்தாள்.

யானையைக் கண்ட பெருமான் அவன் உடலுக்குள் புகுந்தார்.

பின்னர் காலபைரவர் கோலத்தோடு அவ்வுடலைக் கிழித்தார். அதன் தலையை மிதித்தவாறு தன் இருகரங்களாலும் கிழிச்ச யானை உடலை விரித்து பிரித்து தன் உடலை சுழற்றிய நிலையில் ஆடியவாறு பத்துக் கரங்களோடும் கடுங்கோபமுகத்தோடும் வெளி வந்தார். 

கந்தனை இடுப்பில் கொண்டிருந்த தேவி அஞ்சி ஒடுங்கினாள். குழந்தையை அக்கோலம் காணாதவாறு மறைத்துக்கொண்டாள்.

பரமேஸ்வரனின் பேராற்றலை கண்ணுற்ற இருடிகளின் ஆணவம் பஸ்பமாயிற்று. 

அனைவரும் பெருமானின் காலில் விழுந்து வணங்கினர். தெளிவு பெற்றனர். அவர்கள் வேண்டிக்கொள்ள அவர்கள் முன்பு பெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்து அனைவரையும் ஆட்கொண்டார்.

காலபைரவனாக பெருமான் யானையின் உடலிலிருந்து வெளிவந்தபோது தேவி பயந்து அஞ்சி ஒடுங்கியதைக் கண்ட கயிலைநாதன் கிழிந்த யானையின் உடலால் தன் கால கோல பைரவ வேடத்தை மறைத்ததோடு உமையைக் கண்டு வாய்விட்டு சிரித்தாராம். இதனைத்
திருநாவுக்கரசு பெருமானார்.
.
‘‘விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்து ஓர் கால கோல பயிரவன் ஆகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச்
செந்நெறி செல்வனாரே’’
(4:73:6)
.
என்று திருச்சேறையில் பாடியவர்,
‘‘உரித்திட்டார் ஆனையின் தோல்
உதிர ஆறு ஒழுகி ஓட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி
விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கலராகித் தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருபயிற்றூரனாரே’’
(4:32:1)
.
என்று திருப்பயிற்றூர் தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஆனை உரித்த தேவரின் கோபத்தையும் சிரிப்பையும் கண்டு தரிசிக்க விரும்பு பவர்கள் வழுவூருக்கு சென்று அங்குள்ள கஜசம் ஹாரமூர்த்தியின் செப்புத் திருமேனியினையும் அருகிருக்கும் கந்தனுடன் அஞ்சி ஒதுங்கும் அன்னை ஒரு புறமிருந்து பார்த்தால் கோபமுகமும், தேவி இருக்கும் திசையிலிருந்து பார்த்தால் புன்சிரிப்பையும் காட்டும் அரிய தாராசுரம் கோயிலுக்குரிய திருமேனியைக் காண விரும்புபவர்கள் தஞ்சாவூர் கலைக்கூடத்திற்கு சென்று ஒப்பரும் அக்கற் திருமேனியைக் கண்டு களியுங்கள். 

அப்பர் பெருமான் கூறுமாபோல ஓர் கால பைரவனாக அவன் யானை உடலிருந்து வெளிவரும் கோலத்தைக் காண விரும்புபவர்கள் திருத்துறைப் பூண்டி அருமருந்தீசர் கோயிலுக்கு வாருங்கள். அங்கு திகழும் கால பைரவரை காண்போம்

பவ அவுஷ தேஸ்வரர் என வடமொழியிலும் அருமருந்தீஸ்வரர் எனத் தமிழிலும் திருநாமம் பெற்ற ஈஸ்வரனார் திருக்கோயில் திருத்துறைப் பூண்டியின் நடுவில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் முன் மண்டபத்தின் வடபுறம் கஜசம்ஹார மூர்த்தி எனப்பெறும் ஆனை உரித்த தேவர் திருமேனி இடம்பெற்றுத் திகழ்கின்றது.

தமிழகத்திலேயே மிகச்சிறந்த கஜ சம்ஹார மூர்த்தியின் செப்புத் திருமேனி வழுவூர் ஆலயத்தில் உள்ளது.

அடுத்து கல்லால் சமைந்த திருமேனிகளில் மிகச் சிறந்த படைப்பாக விளங்குவது தாராசுரத்து ஐராவதீஸ்வரர் கோயிலில் இடம்பெற்றதாகும்.

இங்கெல்லாம் திகழும் திருமேனிகளுக்கு ஒருமுகம் மட்டுமே திகழும். ஆனால் திருத்துறைப்பூண்டியில் உள்ள திருமேனிக்கு நான்கு திருமுகங்கள் உண்டு.

காலபைரவ கோலத்தில் சிவபெருமான் தோன்றும்போது அவருக்கு நான்கு திருமுகங்கள் உண்டு.

சில இடங்களில் ஐந்து முகங்களையும் காட்டுவர். இங்கு ஐந்து முகமுடைய காலபைரவர் என்பதால் நேர் எதிரே மூன்று முகங்கள் தெரிகின்றன. பின்புறம் ஒருமுகம் மறைந்துள்ளது.

ஈசானமுகம் பெரும்பாலும் பாவனையாக ஊர்த்துவமுகமாகக் கொள்ளப்பெறும். அதனால்தான் இங்கு பெருமான் பத்துத் திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார். 

கால பைரவராக ஆகும் ஆனை உரித்த தேவருக்கு அருகில் நிற்கும் உமா தேவி குழந்தை முருகன் தந்தையைக் கண்டு பயந்துவிடுவானோ எனக் கருதி அவன் அவரைக் காண இயலாத வாறு ஒதுங்கி நிற்க முற்படுகின்றாள். 

பெருமான் தூக்கிப் பிடித்துள்ள யானையின் மேல் இரு கால்களால் முறையே கணபதி பிள்ளையாரின் உருவமும், துர்க்காதேவியின் உருவமும் உள்ளன. பெருமான் அழுத்தி மாத்தித்துள்ள யானையின் தலைக்குப் பக்கவாட்டில் ஒருபுறம் சிவனார் தட்சிணா மூர்த்தியாக அமர்ந்திருக்க, மறுபுறம் நாயுடன் பைரவமூர்த்தி காணப் பெறுகின்றார். 

அவர் அருகே தாடி மீசையுடன் மூன்றாம் இராஜராஜ சோழன் மார்பின் மீது உடைவாளை அணைத்த வண்ணம் கும்பிட்டு நிற்கின்றான். 

இத்தகைய தொரு கஜ சம்ஹாரர் உருவத்தை நாம் எங்கும் காண முடியாது. அரிதினும் அரிதான வடிவம் இது. இச்சிவாலயம் அண்மைக் காலத்திருப்பணிக்கு ஆளானதால் பழம் சிறப்புகள் மறைந்துவிட்டன.
.
இவ்வாலயத்தின் இசைமரபு குறிப்பிடத்தக்கதாகும். அருமருந்தீசருக்கு உரிய தாள இசைக் கருவிகள் இரண்டு. ஒன்று பஞ்சமுகவாத்தியம் மற்றொன்று சுத்தமத்தளம். இங்கு சோழர்
காலத்திய குடமுழவம் எனும் பஞ்சமுகவாத்தியம் எழுத்துப் பொறிப்புடன் இடம்பெற்றுள்ளது. அதில் ‘‘இக்குடமுழா சமர்ப்பித்திட்டார் சீகாருடையார் மல்லாண்டாரான சோழ கோனார்’’- என்ற கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துப் பொறிப்பு காணப் பெறுகின்றது.
.
அதன் அருகில் 2330 பலம் என்ற எடைக் குறிப்பும் குறிக்கப் பெற்றுள்ளது. இதனை ஒத்த சோழர்கால பஞ்சமுக வாத்தியமொன்று ஆரூரில் உள்ளது. 

வெண் கலவார்ப்பால் உருவாக்கப்பெற்ற இவ்வாலயத்து குடமுழாவின் ஐந்து வாய்களையும் மான் தோல்கொண்டு போர்த்தியுள்ளனர்.

இவ்வாத்தியத்தின் ஐந்துமுகங்களுக்கும் தத்புருஷாதி ஈசனின் ஐந்துமுகப் பெயர்களே குறிக்கப்பெறுகின்றன.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்து வசந்த உற்சவத்தின்போது மருந்தீசருக்காக சுத்தமத்தளமும், பஞ்சமுக வாத்தியமும் இசைக்கப்பெறுகின்றன.

இம்மரபும் அருகி வருவது வேதனைக்குரியதாகும்.
தமிழக ஆலயங்களில் பைரவர் வடிவத்தினை பெரும்பாலும் காணலாம்.

அவருடன் கணபதியார், துர்க்கை, ஆலமர் செல்வர், பைரவர் ஆகிய மூர்த்தங்களையும் சோழமன்னனின் வழிபாட்டு உருவத்துடன் நாம் தரிசிக்கின்றோம். திருத்துறைப்பூண்டி செல்வோர் அருமருந்தீசரை வணங்கி பின்பு இந்த ஆனை உரித்த தேவரையும், பஞ்சமுகவாத் தியத்தையும் கண்டு வாருங்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 
.

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...