Tuesday, October 15, 2024

ஆன்மீக குரு என்ன செய்துவிட்டார் ஸ்ரீ ராமானுஜர்?....

அப்படி என்ன பெரிதாய் செய்துவிட்டார் ஸ்ரீ ராமானுஜர்?
கேளுங்கள்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக்  கொடுத்தார்.
அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்!
அவர் பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்.
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே! எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?
அவர் துலுக்க நாச்சியாரையும் கொண்டாடிய சமரச சன்மார்க்க வள்ளல்.
-------
என்ன செய்தார் ராமானுஜர்?
மேலக்கோட்டையில் தலித் ஆலயப் பிரவேசம் இன்றைக்கு வேண்டுமானால் அது பெரிய விஷயமில்லை. ஆனால் சுமார் 1000 ஆண்டுக்கு முன்னால்?
இன்றைக்கும் கண்டதேவி என்னும் ஊரில்  தலித்துக்கள் வடம் பிடிக்க முடியாமல், ஆயிரம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசே ஒன்றும் செய்யும் முடியாத நிலைமை!
ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்...
காந்தியடிகள் “ஹரிஜன்” என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்…
மேலக்கோட்டையில் அவர்களை “திருக்குலத்தார்” என்று அழைத்து ஆலயத்தின் உள்ளே அரவணைத்துக் கொண்ட பெருந்தகை அவர்.
சாதி இல்லா இறைமையை சாதித்துக் காட்டிய இராமனுஜன் திருவடிகளே தஞ்சம்!
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
திருக்கச்சி நம்பிகளின்  சாதி பார்க்காது அவரை வீட்டுக்குள் உணவருந்த வைத்து, அவர் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மையாவது ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணினார். அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால் குடும்பத்தில் குழப்பம்  ஏற்பட்டு
எம்பெருமானின்  அடியவருக்காக,
தனது குடும்ப வாழ்க்கையை விட்டு,
ஸ்ரீவைஷ்ணவத்தையும் சம்பிரதாயத்தையும் காக்க நின்ற உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?
-------
என்ன செய்தார் ராமானுஜர்? 
எங்கோ வயலில் வேலை செய்யும் ஒரு விவசாயி யாத்திரை போகும் போது, நான்கு ரோடு சந்திக்கும் சாலையில, காஞ்சிபுரம் செல்ல எந்த வழிப்பா?-என்று கேட்க அவரும் சரியான வழி சொன்னதற்கு
மோட்சத்துக்கு வழி காட்டி நிற்கிறான் வரதன் பேரருளாளன்.
அந்த வழிகாட்டியைக் காண எனக்கு வழிகாட்டிய விவசாயி இவன் என்று
ஒரு வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய பெருமகன் தான் ராமானுஜர்…
------
என்ன செய்தார் ராமானுஜர்?
எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...
“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
அந்த வேண்டுதல் நிறைவேறாமல் வெறும் பாட்டோடு முடிந்து போயிருக்கும்!
"கோதை பொய் சொல்லி விட்டாள்!
சும்மா வேண்டிக் கொண்டாள்! வேண்டுதலை நிறைவேற்ற வில்லை!" என்ற பேர் வராது. அதைத் தவிர்க்க அண்ணன் பொறுப்பில் அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார்!
ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காவது தோன்றிற்றா?
வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது இருநூறு வருடங்களுக்குப் பிறகு
அதை பக்தியோடு  சுவாசிக்கும் உள்ளம் அவருடையது...
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
குழந்தைகள் ஆடும் “சொப்பு” விளையாட்டுப் பெருமாளை ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட அந்த உள்ளம் வேறு யாருக்கு வரும்?
அரங்கன் ஆலயத்தில் ஆகம விதிகளை  ஏற்படுத்திய ராமானுஜர், அரங்கத்தில் காவிரிக் கரையில் ஆகமம் என்றால் என்னவென்று தெரியாத சிறிய குழந்தைகளின், சொப்பு விளையாட்டுப் பெருமாளுக்கு மரியாதை கொடுத்து விழுந்து வணங்கியது அந்த உயர்ந்த ஜீவன்.
------
என்ன செய்தார் ராமானுஜர்?
வேதத்துக்கு பாஷ்யமும் எழுத வல்ல வேதாந்த உள்ளம்! அதே சமயம், தமிழ் உணர்வால் அன்பினால் கரைந்து வாழ்ந்த ஆழ்வார் உள்ளம்!
இரு உள்ளங்களும் ஒருங்கே பெற்ற உடையவர் அவர்.
------
என்ன செய்தார் ராமானுஜர்? 
திருமலை திருப்பதியில்  எம்பெருமான் திருவேங்கடமுடையான்.
அவன் தமிழ்-முல்லைத் தெய்வமான மாயோன் திருமாலே என்று
புறநானூறு, கலித்தொகை., சிலப்பதிகாரம் என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தரவு காட்டி, மற்ற வீண் கும்மிகளை அன்றே ஒழித்துக் கட்டிய பாங்கு கொண்டவர்.
--------
என்ன செய்தார் இராமானுஜர்?
இன்றைக்கு அனைத்து மடாதிபதிகளும், சொகுசு வாகனங்களில், பல்லக்கில், செல்கிறார்கள்! ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அதாவது 120  வருடங்களும் கால்நடையாகவே அலைந்து அலைந்து 
ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்த கால்கள் அவருடையது.
சோழன் துரத்தத் துரத்த ஓடிய கால்கள் அவை. 
மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெற  வடநாடு ஓடிய கால்கள் அவை.
திருப்பதியில் இருந்தது காளியா? சிவனா?  அல்லது முருகனா? என்று  வம்பு வந்த போது வயதான காலத்திலும் அங்கு ஓடிய கால்கள் அவை.
தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள் அவை, திரு மந்திர இரகசியம் அறிவதற்காக! 
அதைக் கோபுரத்தின் மேலேறி ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கிய கால்கள் அவருடையது!
இவையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா?
இராமனுஜன் திருவடிகளே தஞ்சம்!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...