Tuesday, October 8, 2024

புதுக்கோட்டை புவனேஸ்வரிஅம்மன் திருக்கோயில்...


#புதுக்கோட்டை #புவனேஸ்வரிஅம்மன் 
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 

 பொற்கொல்லர் பேச்சைக் கேட்டு ஏதோ அவசரத்தில் தவறான தீர்ப்பு வழங்கி விடுகிறான் பாண்டிய மன்னன், கோவலன் கொல்லப்படுகிறான். அரசவையில் கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கிறாள். தவறான தீர்ப்பு கூறி பாண்டிய குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டதை அறிந்த அரசன் அரசவையிலேயே உயிரை விடுகிறான்.

 
இவை எல்லாம் சரித்திரத்தில், இலக்கியத்தில் படித்த சம்பவங்கள். நம் வாழ்நாளிலேயே புதுக்கோட்டையில் ஒரு நீதிபதி இருந்தார். சாட்சியங்களின் அடிப்படையில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டவன் குற்றவாளி அல்ல என்பது பின்னர் தெரியவருகிறது. தமது தவறான தீர்ப்பால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விட்டானேயென்று வருந்தினார் அந்த நீதிபதி. தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அது மட்டுமல்ல, வாழ்க்கையும் வெறுத்து துறவறம் பூண்டார். ஜட்ஜ் சுவாமிகள் என்று எல்லோராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டார். இன்று புதுக்கோட்டையில் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் மாதா ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயம் உருவாவதற்கு முன் அந்த ஸ்தலம் (அவதூத) ஸ்ரீ ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானமாக விளங்கிற்று. இங்குதான் ஸ்ரீ சுவாமிகள் சமாதி அடைந்தார். பின்னர் சத்குரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் தம்முடைய சொந்த வழிபாட்டுக்காக மகா புவனேஸ்வரியின் விக்கிரகம் ஒன்றை நிறுவி, ஆலயம் ஒன்றை எழுப்பினார். பின்பு இந்த ஆலயம் படிப்படியாக விரிவாக்கப்பட்டது.

ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்... என்பார் கம்பர். கலைகளை 64 ஆகக் கூறுவது பிரசித்தம். அது போல பாரத நாட்டில் வடக்கே காஷ்மீரில் தொடங்கி தெற்கே குமரி முனை வரை 64 சக்தி பீடங்கள் உள்ளதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். அவற்றுள் மிகச் சிறப்பாகக் கூறப்படுபவவை 36 என்றும், இவற்றில் மிக முக்கியமானவை ஒட்டியாண பீடம், ஜாலந்தர பீடம், காமராஜ பீடம் என்ற மூன்றும் என்பார்கள். பிரபஞ்சத்தை ஆண்டு வரும் பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாகப் பேசப்படுகிறாள். மகா சரஸ்வதி ஞான ரூபம், மகாலட்சுமி கிரியா ரூபம். மகாகாளி இச்சாரூபம். ஆகவே லக்ஷ்மி சத், சரஸ்வதி சித், காளி ஆனந்தம் என்றும் இம்மூன்று பேரும் சேர்ந்து சச்சிதானந்த ரூபினியாக, சாமுண்டீஸ்வரி, புவனேஸ்வரியாக வழிபடப்படுகிறார்கள். காலமாக விரிந்தவள் காளி என்றும் இடமாக விரிந்தவள் புவனேஸ்வரி என்றும் சாஸ்திர வல்லுநர்கள் குறிப்பிடுவார்கள். கால வெள்ளத்தில் புவனங்களை, உலகங்களை மலரச் செய்பவள் புவனேஸ்வரி புவனங்களில் தோன்றி நிரம்பிய அனைத்துயிர்கட்கும் வடிவங்களும், பெயர்களும் அருளியவள் இவள். புவனங்களையும் புவனத்து உயிர்களையும் ஆளுபவள், ரட்சிப்பவள்  புவனேஸ்வரி இவளையே பிரகிருதி அல்லது இயற்கை என்று குறிப்பிடுவார்கள். இயற்கை என்பது பலவாக அறிந்திருப்பதைப் பார்ப்பதன் மூலம் அதில் பிரம்மம் மறைவு பட்டிருப்பதை உணர முடிகிறது. எனவே இவள் மாயை என்றாலும் இவளைப் போற்றி வணங்கினால் மாயை நீங்கி மெய்ஞானம் உண்டாகும் என்பது உண்மை. காளி மூலாதாரக குண்டலினி புவனேஸ்வரி இதியாகாசத்தில் திகழும் ஞான வெளி அன்பர்களுக்கு என்று சிவந்த மேனியாக வந்த அன்னை இவள். திருமாலின் நாசி முனையில் புவனம் முழுவதையும் கக்கி நிலைநிறுத்திய அவதாரம் புவனேஸ்வரியின் வெளிப்பாடாகும்.

புதுக்கோட்டை நகருக்குப் பெருமை தேடித் தரும் கோயிலாக அமைந்துவிட்டது மாதா ஸ்ரீ புவனேஸ்வரியின் கோயில். நகரின் கிழக்கே இருக்கும் இக்கோயிலை அதிஷ்டானம் என்றே குறிப்பிடுகிறார்கள். நவஸாலபுரி என்ற புதுக்கோட்டை நகரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ மாதா புவனேஸ்வரி சந்நிதானத்தில் ஸ்ரீசக்ர பூரண மேரு 30.05.1966-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ சக்கரத்தையே மேல் நோக்கி உருவகப்படுத்துவதே பூரணமேரு, மகாமேரு என்று கூறப்படும். ஸ்ரீபுவனேஸ்வரிக்கு நடப்பதுபோல இம்மகா மேருவுக்கும் அபிஷேக ஆராதனைகள் விதி முறைப்படி நடைபெற்று வருகின்றன. மாதா ஸ்ரீ புவனேஸ்வரி அபய வரதகரங்களுடன் அமர்ந்த கோலத்தில் பேரெழில் பொங்கக் காட்சி தருகிறாள்.

நான் இருக்குமிடத்தில் செல்வம் கொழிக்கும், என்ற வரிகளுடன் கூடிய மாதா ஸ்ரீ புவனேஸ்வரியின் திருஉருவப் படம் ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தில் கிடைக்கிறது. இந்தப் படத்தைப் பூஜையில் வைத்து ஸ்ரீ புவனேஸ்வரி பஞ்சரத்ன ஸ்துதியை தினம் பாராயணம் செய்பவர் வீட்டில் செல்வம் செழித்து வளரும். ஞானம் கைகூடும் என்பது நம்பிக்கை.
 
ஸ்ரீ புவனேஸ்வரி ஸ்தோத்திரத்தில், “உதயத்பாதுஸஙஸ் ராபாம் பாலேந்து மகுடோஜ் வலாம் கோடி கந்தர்ப்ப லாவண்யாம் சிவமானஸவாஸி நீம்” என்றும் “துர்க்கா ஸரஸ்வதி லக்ஷ்மி ரூபிணீம் புவனாம் பிகாம் இச்சாகி ஞான க்ரியாசக்தி ரூபிணீம் இஷ்ட தாயிநீம்” என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்ரீ புவனேஸ்வரியை வழிபடுவர்களுக்கு சரஸ்வதி கடாக்ஷம் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படுவதுடன் உலகப் பற்று என்ற மாயை அகன்று மெய்ஞானம் ஏற்படும் என்பதும் ஆன்றோர் வாக்கு.
 
ஸ்ரீ புவனேஸ்வரியின் சந்நிதிக்கு நேர் எதிரில் அஷ்ட தச புஜ மகாலக்ஷ்மி, துர்க்காதேவியின் பெரிய திருஉருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ புவனேஸ்வரிக்கு தீப ஆராதனை நடத்தும்போது அதே சமயத்தில் இந்த அஷ்ட தசபுஜ மகா லக்ஷ்மிக்கும் தீப ஆராதனைகள் காட்டப்படுகின்றன. சுற்றுப் பிராகாரத்தில் பிரமாண்டமான ஸ்ரீ பஞ்சமுக ஆயு்சநேயர், ஸ்ரீ ஹோம்ப் (பஞ்சமுக) ஸ்ரீ விநாயகர் திரு உருவங்களும் நம்மை ஈர்க்கின்றன.
 
*புவனேஸ்வரி மற்றும் அஷ்டதச புஜ லட்சுமி:

அன்னை புவனேஸ்வரிக்கு நேர் எதிரில் அஷ்டதச புஜ லட்சுமி.இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேர் எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர் வகுப்பினர் புடவை கட்டும் மடிசாரில் அஷ்டதச புஜ லட்சுமிக்கு அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம் இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை நிச்சயம்.

சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி இச்சா ரூபம் - இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த சாமுண்டீஸ்வரி அஷ்டதச புஜ லட்சுமியாக அன்னை இங்கே வணங்கப்படுகிறாள்.

ஸிவ - ஸக்தி: காம: க்ஷித - ரத ரவி: ஸீதகிரண:
 ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா -மார ஹரய:
 -செளந்தர்ய லஹரி
 வர்ணிப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அழகு ரூபமாக வீற்றிருக்கிறாள் அன்னை ஸ்ரீபுவனேஸ்வரி. புதுக்கோட்டை நகரில் கீழ ஏழாம் வீதியில் அமைந்துள்ளது புவனேஸ்வரி அம்மன் ஆலயம்.
 "ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானம்' என்றாலும் அம்பிகை குடி கொண்டுள்ளதால் அவள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
 மூலஸ்தானத்தில் சுமார் நாலரை அடி உயரத்தில், அழகான தோற்றத்துடன் சகல லட்சணங்களும் அமைந்து ஞானமே வடிவாக அமர்ந்த கோலத்தில் புன்னகை ததும்ப காட்சி தருகிறாள் அன்னை புவனேஸ்வரி. இங்கு ஸ்ரீசக்ர மகாமேரு உள்ளதால் சகல தோஷங்களையும் போக்கி நலம் யாவும் தரும் திருத்தலமாய் விளங்குகிறது.
 அன்னை முப்பெரும் சக்தி வடிவம். "ஹ்ரீம் பீஜம் : சாக்த பீஜம்' எனப் போற்றப்படுகிறது. அந்த பீஜத்தில் உறையும் மகாசக்தி புவனேஸ்வரி. அவளின் முழு அழகையும், அருளையும் வெளிப்படுத்தும் விதமாக இவ்வாலயம் திகழ்கிறது.
 இங்குள்ள அர்த்த மண்டபத்தில் விநாயகர், பாலமுருகன் காட்சி அளிக்கிறார்கள். ஆலயத்தின் விசேஷமாக வேங்கடேஸ்வரர், காலபைரவர், நவகிரக சந்நிதிகள் திகழ்கின்றன. சனீஸ்வரருக்கு தனிச் சந்நிதி உள்ளது. அஷ்டதசபுஜா மகாலக்ஷ்மி, துர்காதேவி, 25 தலைகள் கொண்ட சதாசிவர் சந்நிதி ஆகியவை இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
 சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஆந்திர மாநிலத்தில் இருந்த தவனேஸ்வரம் என்ற கிராமம், கோதாவரி நதிக்கு குறுக்கே அணை கட்டும்போது மூழ்கி விட்டது. அங்கிருந்த அந்தணர் குடும்பங்கள் வேறு பக்கம் இடம் பெயர்ந்தனர். அதில் ஒருவர் வேதமூர்த்தி சாஸ்திரிகள். பத்ராசல ராமனின் தீவிர பக்தர். இவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
 ஜாதகத்தைப் பார்க்கும்பொழுது, "இக்குழந்தை உலகத்திற்கு ஒளி காட்ட வந்த தெய்வக் குழந்தை' என்று புரிந்து கொண்டார் சாஸ்திரிகள். மகன் வேதம் பயில்வதற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தனர்.
 அங்கு மகன் வக்கீல் தொழிலுக்குப் படித்தார். பணத்துக்கு ஆசைப்படாமல், நியாயம், தர்மம் என்றே வாதாடியதால் மகனின் இயற்பெயர் தெரியாவிட்டாலும் "ஜட்ஜ் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.
 இவரின் பெருமைகளை அறிந்த திருவிதாங்கூர் மகாராஜா, நீதி பரிபாலனம் செய்ய இவரை அழைத்து வரச் செய்தார். அங்கு பல வழக்குகளைத் திறம்பட விசாரித்து தீர்ப்பு வழங்கிய ஜட்ஜ் சுவாமிகள், ஆத்மஞானம் தேடி ஒரு கட்டத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
 பல இடங்களில் சுற்றித் திரிந்த அவர் காளஹஸ்தி வந்து சேர்ந்து, ஒரு குருவைத் தேடி ஓர் ஆசிரமத்தின் வாசலில் நின்றார்.
 ஆசிரமத்தின் தலைவர் ராமகிருஷ்ண குரு மகராஜ், "ஞானதீபம்' ஒன்று வாசலில் நிற்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். ஜட்ஜ் சுவாமிகளை உள்ளே அழைத்து வந்து அவருக்கு "சதாசிவம்' என்று நாமம் சூட்டி, தீட்சை வழங்கினார். இதன் பிறகு அவர் "சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.
 அதன்பிறகு பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்ற சுவாமிகள், திருச்சி தாயுமானசுவாமி கோயிலுக்கு வந்தபோது, தன் அந்திம நேரம் நெருங்குவதை உணர்ந்தார். புதுக்கோட்டை நோக்கி நடந்தே சென்றார். அங்கிருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள நார்த்தாமலை சிவன் கோயிலில் நிஷ்டையில் அமர்ந்தார்.
 அவரின் நிஷ்டை கலையாமல், மக்கள் அவரை பல்லக்கில் அமர்த்தி வைத்து, புதுக்கோட்டைக்கு கொண்டு வந்தனர். அங்கு சுவாமிகள் இறைவனுடன் கலந்தார். புதுக்கோட்டை மன்னர் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு, நகரின் கிழக்குப் பகுதியில் தற்போதுள்ள இடத்தில் அடக்கம் செய்தனர்.
 அங்குதான் அம்பிகையின் உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
 பிரபஞ்சத்தின் மூலமாக விளங்குபவள் ஆதிசக்தியாம் பராசக்தி. அவளின் அம்சமாக விளங்குபவள் புவனேஸ்வரி.
 "நமது பூமியைப் போல் எண்ணற்ற உலகங்கள் உள்ளன' என்கிறது வேதம். அந்த உலகங்கள் அனைத்திற்கும் அன்னை புவனேஸ்வரியே அதிபதி. புவனம் முழுதும் காப்பவள் என்பதால் இவள் "புவனேஸ்வரி' என்று அழைக்கப்படுகிறாள்.
 தியானம் செய்வதற்கு ஏற்ற இடம். எத்தனை தீராத மனவேதனைகள் இருந்தாலும், இங்கு வந்து அம்பிகையை வணங்கி நின்றால் அனைத்தும் தூள், தூளாகும் என்பது சத்தியமான வார்த்தை. அம்பிகையை பச்சை வண்ண ஆடையில் வீட்டில் வைத்துப் பூஜித்தால் சொந்த வீடு தருவாள் என்பதும் நிரூபணமான உண்மை.
 இங்கு நவராத்திரி, பெளர்ணமி தினங்களும், ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அம்பிகைக்கு புடவை சாற்றி, அர்ச்சனை செய்கிறார்கள்.
 செளந்தர்ய லஹரி: அம்பிகையின் துதிகளில் முக்கியமானது செளந்தர்ய லஹரி. ஆதிசங்கரர் கைலாயம் சென்று அம்மையையும், அப்பனையும் தரிசித்து வரும்போது ஈஸ்வரனால் அளிக்கப்பட்டது இந்த ஸ்லோகங்கள். ஆனால் தேவலோக விஷயங்கள் வெளியில் போகக்கூடாது என்று நந்திகேஸ்வரர் சுவடிகளைப் பிடுங்கிக் கொண்டுவிட, ஆச்சார்யர் கையில் நாற்பத்தொன்று ஸ்லோகங்களே கிடைத்தன.
 அம்பிகையின் உத்தரவினாலும், அவளின் கருணையாலும் மீதி ஸ்லோகங்களை சங்கரர் எழுதி முடித்தார். பரமேஸ்வரனே அம்பிகையின் ரூப லாவண்யங்களை புகழ்ந்து பாடிய நூறு ஸ்லோகங்கள் அவை. எனவேதான் துதிகளில் எல்லாம் சிறந்ததாக செளந்தர்ய லஹரி போற்றப்படுகிறது.
 "யதீயம் செளரப்யம் சஹஜம் உபலப்தும் ஸுமநஸோ'
 என்கிறார். "அம்பிகையின் கருங்கூந்தல் நம் இருளை நீக்கும் ஒளி வெள்ளம்.
 தாயே! உன்னை வணங்கிய பின் நாங்கள் செல்வத்தை அடைவதில் விருப்பம் கொள்வதில்லை. நல்லோர்கள் அல்லாதவர்களுடன் எந்த உறவும் இல்லை. சம்சாரமென்னும் கடலில் வீழ்ந்து அல்லல்பட மாட்டோம். ஆனால் மன்மதனின் மமதையை அழித்த சிவனாரின் மனதில் வாசம் செய்யும் உன் திருவடிகளை வழிபடுவதையே எங்கள் கடமையாகக் கொள்கிறோம்!' என்று புகழ்கிறார்.
 வாழ்க்கை என்பது நகர்ந்து கொண்டே இருப்பது; சலனம். வாழ்வதற்கான போராட்டமே அதை நகர்த்திச் செல்கிறது. அதை இயல்பாக, எந்தக் கடினமும் இல்லாமல் கடக்க அம்பிகையே துணை நிற்கிறாள்.
 புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்பிகை அத்தகைய போராட்டமான வாழ்விலிருந்து நம்மைக் கரை சேர்க்கிறாள். நம்முள் குடியிருக்கும் மமதை என்னும் பிசாசை அடித்து விரட்டி, வாழ்க்கைப் போராட்டம் இல்லாமல் வாழ வைக்கிறாள்.

புதுக்கோட்டையில் ஸ்ரீ புவனேஸ்வரியைத் தரிசிக்கச் செல்பவர்கள் அருகில் உள்ள திருக்கோகர்ணம் குடைவரைக் கோயிலுக்கும் (மலையில் குடையப்பட்டது) சென்று அருள்மிகு பிரசுதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரரையும் தரிச்த்து வரவேண்டும். காமதேனுப் பசு தன் காதுகளில் கங்கை நீரைக் கொண்டு வந்து இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதாக வரலாறு பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர்பெற்ற முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அற்புதமான சிற்பங்களும் கூரை மற்றும் சுவர் ஓவியங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாக உள்ளன. ஒரே கல்லில் அமைக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இறைவன் தேவியோடு அமர்ந்து நாயன்மார்களுக்குக் காட்சி கொடுக்கும் நாயனார் உருவச் சிலையும் கல் கொடுங்கைகளும் பிரமிப்பூட்டுபவையாய் அமைந்துள்ளன.

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலும் இத்தலத்தில் பிரசித்திபெற்ற கோயிலாகும். சமயபுரம் மாரியம்மனின் சகோதரி என்றழைக்க்ப்படும் அருள்மிகு முத்துமாரியம்மன், நாடி வரும் அன்பர்களுக்கு நோய் தீர்த்து அருள்புரிந்து வருகிறாள்.

கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக்கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது. நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும். இடது பக்கத்தில் அஷ்டதச புஜ லட்சுமி எதிரே புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடைபெறும். கற்பூர ஆரத்தி நேரத்திலும் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆரத்தி நடைபெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி. நடுவில் தரிசனம் மட்டும்தான்.

*கோவில் சிறப்பு:

கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார், பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் இருக்கும். படு சுத்தமாக நிசப்தமாக இருப்பது சிறப்பு.

இங்கே கோவில் சுத்தமான தசாங்கம் கிடைக்கும். அதைக் கோனில் வைத்து ஏற்றுவது ஒருக்கலை. சுகந்தச்ச மனோஹரமாக வாசம் தூக்கும். புவனேஸ்வரி குங்குமம் எந்தக் கலப்பும் இல்லாத மஞ்சள் குங்குமம்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஸ்கந்தாஸ்ரமம் இருக்கிறது. அதுவும் சாந்தானந்தா சுவாமிகளால் அமைக்கப்பட்டதுதான். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...