Tuesday, October 8, 2024

திருநெல்வேலி வழுதுார் அக்னீஸ்வரர் திருக்கோயில்....

#திருநெல்வேலி மாவட்டம் #அம்பை வட்டம் #வழுதுார்
ஸ்ரீ #அழகியநாயகி அம்மை உடனாய ஸ்ரீ #அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பொது விண்ணப்பம்
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்அடி என்மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர்
செழுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே
– அப்பரடிகள் அருளிச் செய்த 4ம் திருமுறை
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், இடைகால் அருகில் அமைந்துள்ளது வழுதுார். இவ்வூரில், சுbhbbbvமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தினைbbbbbச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. (ஆதாரம்: நெல்லை மாவட்டம் கையேடு; ஆசிரியர்: தே.கோபாலன்; பொறுப்பாசிரியர்: நடன. காசிநாதன்; வெளியீடு: தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1997; பக்: 71, 72) 

திருக்கோயில் அமைப்பு

வழுதுாரின் மையத்தில், தல விநாயகராக மார்த்தாண்ட விநாயகப் பெருமான் அருள்புரிகிறார். இவ்வூரில், அழகிய நாயகி அம்மை உடனாய திருவக்னீசுரப் பெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. சுயம்புத் திருமேனியான சுவாமி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்மையும் அவ்வாறே.  கருவறை, இடைநாழி, மகா மண்டபம் என்ற எளிய அமைப்புடன் சிறிதாக இக்கோயில் உள்ளது. இடைநாழியில் ஒரு விநாயகப் பெருமான் உள்ளார். சுவாமி சந்நிதி மகாமண்டபத்தில் துவாரபாலகர்கள், நந்திதேவர், சக்தி விநாயகர், வள்ளி – தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அம்மை சந்நிதியின் மகா மண்டபத்தில் நந்திதேவர் உள்ளார். 

திருச்சுற்றில் கன்னிமூல கணபதி, பலிபீடம், சண்டிகேஸ்வரர், சனைச்சரர், நாய் வாகனத்துடன் கால பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். இசந்நிதிகள் மிகப் பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. கோயிலின் ஈசான திசையில், தீர்த்தமாக கிணறு ஒன்று உள்ளது. 

விநாயகர், வேல், ஆடல்வல்லான், சிவகாமி அம்மை, காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர் ஆகிய ஆறு உற்சவத் திருமேனிகள் உள்ளன. இவை தற்போது அம்பை கிருஷ்ணன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை பாதுகாப்பில் உள்ளன.

பாண்டியர் கல்வெட்டுகள்

இத்திருக்கோயிலில், முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1217), முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216 – 1239), மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (1268 – 1281) ஆகியோரின் கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. கோயிலின் வருவாய்க்கு நிலம் தானமாக வழங்கப்பட்டமை, அணையா விளக்கிற்கு நெய் வழங்கப்பட்டமை உள்ளிட்ட செய்திகள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. 

பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளில், இவ்வூர் ராஜராஜ சதுர்வேதி மங்கலம், வழுதூர், வழுதியூர் என்று குறிப்பிடப்படுகிறது. இறைவன், ‘திருவன்னீசுரம் உடையார்’ என்றும் ‘திருவக்னீசுவரம் உடையார்’ என்றும் ‘திருவக்னீசுவரம் உடைய நாயனார்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். 

இக்கோயில் பிற்காலப் பாண்டியர் கலைப்பாணிக்குச் சான்றாக விளங்குகின்றது. கோஷ்டங்களில் சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் இல்லையாயினும், சுவாமி சந்நிதி வாசலில் உள்ள துவார பாலகர்கள் பாண்டியர் கலைக்கு எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றனர். கோஷ்ட மகர தோரணங்களில், கண்ணன் அல்லது திருஞானசம்பந்தர், ஆடல்வல்லான், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களின் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. சுவாமிக்கு ஏகதள விமானமும், அம்மைக்கு 3 கலசங்களுடன் கூடிய சிறிய விமானமும் அமைந்துள்ளன. 

இலக்கியத்தில் வழுதுார்

அதிவீரராம பாண்டியனைப் (1564 – 1604)  பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, 16ம் நுாற்றாண்டில், (தற்போதைய நெல்லை மாவட்டம்) விஜயநாராயணம் என்ற ஊரைச் சேர்ந்த சிதம்பரநாத கவி என்பவர் பாடிய ‘சீவலமாறன் கதை’ என்ற நுாலில், ‘மருப்பொலிந்த தார்மார்பர் வழுதியூர் சென்றணைந்தார்’ – என்று 866வது பாடலிலும், ‘திருவழுதியூர் உறையும் தீவண்ணர் பதம் போற்றி’ – என்று 867 வது பாடலிலும் இக்கோயில் குறிக்கப்பட்டுள்ளது. 

மனநோய்கள் நீங்கும்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்து அக்னீசுவரப் பெருமானை வழிபட்டால், மனநோய், சித்தப்பிரமை போன்ற மனம் தொடர்பான நோய்கள் நீங்கும். புற்றுநோயின் தாக்கம் பெருமளவு குறையும் என்பது கண்கண்ட உண்மை. 

இவ்வளவு வரலாற்றுப் பெருமையும் புகழும் வாய்ந்த இத்திருக்கோயில் தற்போது இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளது. கடந்த 1949ம் ஆண்டில் ஒரு கும்பாபிேஷகம் நடந்ததாக கல்வெட்டுக் குறிப்பு உள்ளது. அதையடுத்து 50 ஆண்டுகள் கழித்து, 2001ம் ஆண்டு திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிேஷகம் சிறப்புற நடைபெற்றது. 23 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தற்போது திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிேஷகம் நடத்த திருவருள் கூட்டியுள்ளது.

முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய
நெரிந்த வாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
தெரிந்து முன்னையில் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு
புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங் கு பெருவர். 

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...