Wednesday, October 9, 2024

சரஸ்வதி பூஜையின் ஒர் சிறப்பு பார்வை....

சரஸ்வதி பூஜை ஒரு சிறப்பு பார்வை
கல்வியை தாயான சரஸ்வதியை உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் குறையாத கல்வி செல்வம் கிடைக்கும்.

சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி தாய்.  

கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம். இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிகுரிய  பாடல்கள் பாடியும் வணங்கலாம் .

புதன் கிழமை காலையில்  கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதி 12 நாமங்களை சொன்னால், கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும். 

மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம்.

சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல், வடை, பாயாசம் செய்து வழிப்படலாம். இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு, பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம்.

படிக்கிற குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அம்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். சகல நலங்கள் பெற சரஸ்வதியை புகழ் பாடி போற்றுவோம்.

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலை ஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய்போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூல மந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி
ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி 
ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி 

ஜம்மு காஷ்மீரில் சரஸ்வதி தேவி சக்தி பீடம் உள்ளது. 18 சக்தி பீடங்களில் முக்கியமான கோவில் இதுவாகும்.

தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் உள்ளது. வர்கல் என்ற கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய பேர் தங்களின் குழந்தைகளின் வித்யாரம்பத்தை அங்கு செய்வார்கள். பாசர் வித்யா சரஸ்வதி கோவில் இது அடிலாபாத் ஜில்லாவில் உள்ளது. நிஜாம்பாத் செல்லும் அனைத்து இரயில்களும் இங்கு நிற்கும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில் வாரங்கால் மாவட்டத்தில் உள்ளது. காளீஸ்வரம் மகா சரஸ்வதி கோவில் சிறப்பு வாய்ந்த கோவில்.

கர்நாடகா சிரிங்கேரி சாரதாதேவி பீடம் உள்ளது. சாரதா தேவி கோவில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய இந்த பீடத்தில் அன்னை சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.

கேரளா கோட்டையம் அருகே பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் உள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் தட்சிண மூகாம்பிகா கோவில் உள்ளது. இது பிரபல சரஸ்வதி கோவில்.

கூத்தனூர் சரஸ்வதி கோவில்

சரஸ்வதிக்கான பிரத்யேகமான தலங்களில் இது முக்கியமானது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர். கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள், சரஸ்வதி. வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக் கிறாள். ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். முதன் முதலாக அட்சராப்பியாசம் என்கிற கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் இங்கு வந்து ஆரம்பிக்கிறார்கள்.

கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். விஜயதசமி, இக்கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா. தேர்வுக்குச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெறவும் மற்றும் பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் கல்விக்கடவுளாம் இச்சரஸ்வதி அம்மனை வழிபட்டு பயனடைகின்றனர்.

வாணியம்பாடி

பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், இத்தல அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளா ணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணை யேந்திய வாணி அருள்கிறாள். வேலூர் - கிருஷ் ணகிரி பாதையில் இத் தலம் அமைந்துள்ளது.

வேதாரண்யம்

வேதாரண்யம் வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். இத்தலத்து நாயகியான உமையம் மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...