Sunday, November 3, 2024

மார்க்கசகாயசுவாமி திருக்கோயில், மூவலூர் மயிலாடுதுறை...

அருள்மிகு மார்க்கசகாயசுவாமி திருக்கோயில், 
மூவலூர்- 609806, மயிலாடுதுறை மாவட்டம்.   
*இறைவன்: மார்க்கசகாயேசுவரர்.  

*அம்பாள்: செளந்தரநாயகி, மங்களாம்பிகை    

*தீர்த்தம்: சந்திர புஷ்கரணி, துர்கா புஷ்கரணி, உபமன்யு முனிவர் வழிபட்ட ‘உபமன்யு கூபம்’ எனும் கிணறு, காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்தகட்டம் என தீர்த்தங்கள் நிறைந்த தலமாக மூவலூர் திகழ்கின்றது.  

*தலமரம்: புன்னை             

*வழிபட்டோர்: அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். 

*இது ஓர் வைப்புத்தலமாகும். 
அப்பர் அருளிய தேவாரப்பாடலில் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.                     

*தலபுராணம் : வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுளம் கொண்ட ஈசன், பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா, ருத்திரன் மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது.
மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.    

*ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி, தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. 

*மூவரும் வழிபட்ட தலம் என்பதால் இது 'மூவரூர்' என அழைக்கப்பட்டு இதுவே மருவி 'மூவலூர்' என்றாகி இருக்கிறது. 

*இத்தலத்து இறைவன் மார்க்க சகாயேசுவரர் அழகிய  ஒளிவீசும் வடிவில் அருள் வழங்குகின்றார். 

*இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.                     

*இரண்டு அம்மன்கள் : இவ்வாலயத்தில் செளந்திர நாயகியுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனி சன்னதி அமைந்துள்ளன.  அமாவாசை தோறும் செளந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது               

*இது மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம்.        

மகிஷாசுரன் தன் தவ வலிமை யால்,  ‘ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான்.   அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்கு செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம் அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூறுகிறது. 
*இச்சம்பவம் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த ஐதீகம் இன்றும் இந்த ஆலயத்தில் விழாவாக நடைபெறுகிறது.    

*ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.

*கல்வெட்டுகள் : இத்தலத்தில் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. 

*மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள்.

ஸ்ரீ பால தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை அருளிய வரலாறு பற்றிய பதிவுகள்  கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள...