அறுபடை_வீடுகள் பற்றிய முழு வரலாறு:
சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கும் கூட அறுபடை வீடுகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அறுபடை வீடு என்றாலே, நமக்கு முருகப்பெருமான் தான் நினைவுக்கு வருவார். ஆனால் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கும் கூட அறுபடை வீடுகள் உள்ளன. அவை: ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை.
இந்த அறுபடை வீடுகளிலும் ஐயப்பன் பல்வேறு ரூபங்களில் காட்சி தருகிறார். ஐயப்பனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்குவது சபரிமலை என்றாலும், சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள், மற்ற 5 தலங்களுக்கும் சென்று வழிபட்ட பிறகே சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பதே வழக்கம்.
கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே அதில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக இருப்பது முருகனும் ஐயப்பனும் தான். ஐயப்பன் மற்றும் கார்த்திகேயனாகிய முருகன் இருவரும் அவதரித்த மாதம் கார்த்திகை தான். இதனால் கார்த்திகையில் ஐயப்பன் மற்றும் முருகனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து, யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது.
1.ஆரியங்காவு :
கேரள மாநிலத்திற்கும், தமிழகத்திற்குமான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ஆரியங்காவு. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஊர். இங்குள்ள ஆலயத்தில் அரசராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஐயப்பன். இவருடன் புஷ்கலை தேவி இருப்பது விசேஷம். இவரை சாஸ்தாவான ஐயப்பன் திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்துவார்கள். மதம் கொண்ட யானையை அடக்கிய அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு இறைவன் காட்சி தருகிறார். இதனால் அவருக்கு ‘மதகஜ வாகன ரூபன்’ என்ற பெயரும் உண்டு.
2.அச்சன்கோவில் :
கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம். ஐயப்பன் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் விக்கிரகம் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் மட்டும், விக்கிரகம் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் இத்தலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகின்றனர். இவரை ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறப்புமிக்க தலம் இதுவாகும்.
3.குளத்துப்புழா :
கேரளாவில் குளத்துப்புழா என்ற இடத்திலும் ஐயப்பன் அருளாட்சி செய்கிறார். இங்கு அவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இதனால் அவரை ‘பால சாஸ்தா’ என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் கருவறை சிறுவர்கள் நுழையும் அளவிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு விஜயதசமி தினத்தன்று ‘வித்யாரம்பம்’ என்னும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. அன்று பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தரப்படும். குழந்தை வரம் வேண்டுவோரும் வழிபட ஏற்ற தலம் இது.
4.எருமேலி :
எருமைத் தலையைக் கொண்ட மகிஷியை, ஐயப்பன் வதம் செய்த தலம் இது என்று கூறுகிறார்கள். இதனால் எருமைக்கொல்லி என அழைக்கப்பட்ட இந்த இடம், நாளடைவில் மருவி ‘எருமேலி’ என்றானது. மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவளது உடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாகவே, பக்தர்கள் இன்றளவும் எருமேலியில் இருந்து நடனம் ஆடியபடியே சபரிமலைக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த நடனத்திற்கு ‘பேட்டைத் துள்ளல்’ என்று பெயர். இந்த ஆலயத்திற்கு அருகில் வாபரின் பள்ளிவாசல் இருக்கிறது. இங்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
5.பந்தளம் :
பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் அரண்மனை இருக்கும் இடமாகும். இங்கு பந்தள மன்னன் ராஜசேகரனால் கட்டப்பட்ட ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும், திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டிருக்கின்றன. செங்கனூர் ரெயில் நிலையத்தின் அருகில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.
6.சபரிமலை :
கேரளாவில் உள்ள இங்குதான் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்பன், தன்னை நாடிவரும் பக்தர்கள் யோக சின் முத்திரையுடன், குத்துகாலிட்டு அமர்ந்தபடி அருள்புரிந்து வருகிறார். பதினெட்டு படிகளை ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடி மரம். ஐயப்பனின் சன்னிதி வாசலில் ‘தத்வமஸி’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே உள்ளாய்’ என்பது பொருள். உனக்குள்ளேயே இறைவன் இருக்கிறான். 41 நாட்கள் இருக்கும் விரதத்தை நாளும் நீ மேற்கொண்டால், நீயும் கடவுளே என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம்.
*அச்சன் கோயில் தர்மசாஸ்தா:
அச்சன்கோவில் தர்மசாஸ்தா பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. அச்சன்கோவிலில் அமைந்த சாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே அய்யப்பன் வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். இவரை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ள கோவிலாகும். பரசுராமர் நிறுவிய ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. தமிழக பக்தர்கள் அதிகளவில் கூடுமிடங்களில் இதுவும் ஒன்று. இது நிறுவப்பட்ட ஆண்டு கொல்ல வருடம் 1106 மகரம் 12ம் நாள்.
தனு மாதத்தின் முதல் பத்து நாட்கள் மண்டலபூஜை நடைபெறும். மகர மாதத்தில் ரேவதிபூஜையும் நிகழும். மண்டலபூஜையில் தேரோட்டமும் ரேவதிபூஜையில் புஷ்பாபிஷேகவும் முதன்மையான சடங்குகள். மூன்றாம் உற்சவத்தில், சிறிய தேரில் வர்ண ஆடை ஆபரணங்கள் அணிந்து, வாளும் பரிசயும் கையிலேந்தியுள்ள அய்யப்பனின் விக்ரகம் வரும். இதை மணிகண்டமுத்தய்யசுவாமியின் எழுந்தருளல் என்பர். ஒன்பதாம் உற்சவத்தின் போது, சக்கரங்கள் கொண்ட பெரிய ரதத்தில் எழுந்தருளுவார்.
*ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில்:
ஆரியங்காவு ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இக்கோவில் கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்து சமயக் கடவுளான ஐயப்பன் இக்கோவிலின் முதன்மைக் கடவுள் ஆவார். சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார்.
தனு மாதத்தில் (மார்கழி) ஐயப்பன் - புஷ்கலா தேவி கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். ஆர்யங்காவு கோயில், கேரளம் – தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது எனவே அம்பலத்தினுள் மலையாள ஆச்சாரங்களும், உற்சவத்தின்போது தமிழ் ஆச்சாரங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
தமிழக மாநிலத்தில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் உள்ள இக்கோவில், கொல்லத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது.திருவனந்தபுரம்-தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கிமீ தூரத்தில் உள்ளது.
ஆரியங்காவு ஐயப்பன் கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. இங்கு சடங்குகளும் பூசைகளும் தமிழ்நாட்டுக் கோவில் முறையில் நடைபெறுகின்றன. கருவறையில் பார்வதி, லிங்க வடிவில் சிவன், ஐயப்பனின் உருவச் சிலைகள் உள்ளன. நடுவில் பாலகனாக ஐயப்பனும் அவருக்கு இடப்புறம் அம்மனும் வலப்புறம் சிவனும் அமைந்துள்ளனர். பரசுராமரால் உருவாக்கப்பட்டத் தலங்களில் இதுவும் ஒன்று என்ற தொன்நம்பிக்கை உள்ளது.
பரசுராமர் கிழக்கு மலை தொடர்ச்சியில் கேரளத்தில் நான்கு இடங்களில் நான்கு தர்மசாஸ்தா கோவில்களை நிறுவினார் என்பது ஐதீகம். அவற்றில் குளத்துபுழையில் பாலகனாக "பிரமச்சார்ய நிலை"யிலும், ஆரியன்காவில் திருமண கோலத்தில் "கிரகஸ்தாஸ்ரம" நிலையிலும், அச்சன்கோவிலில் "வானப்பிரஸ்த" நிலையிலும் சபரிமலையில் "சந்நியாசி" கோலத்திலும் உள்ளார். அதன்படி சாஸ்தாவின் நான்கு முக்கிய கோவில்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று. இங்கு தர்மசாஸ்தா, சௌராட்டிர குலப் பெண்ணான புஷ்கலா தேவியுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.
மதுரையிலிருந்து திருவிதாங்கூர் மன்னருக்கு துணி நெய்துதரும் சௌராஷ்டிர இன வியாபாரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணிவிற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் கூட்டிச் சென்றார். ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காடு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்யப் பயப்பட்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.
திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்குத் தான் செய்யக்கூடிய நன்றிக்கடனாக தன்னிடம் இருந்த பட்டு அங்கவஸ்திரத்தை அந்த வேடனுக்கு வழங்கினார். வேடனும் அந்த பட்டு அங்கவஸ்திரத்தை தன்னுடைய கழுத்தில் தோளில் அணிந்து கொண்டு,இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இப்போது நான் எப்படி இருக்கிறேன்? என்று அந்த வியாபாரியிடம் கேட்டான் அந்த வேடன். கட்டுமஸ்தான உடம்பு,திமிறிய தோள்கள்,ராஜ தேஜஸுடன் மந்தகாச புன்னகையுடன் கூடிய வேடனின் முகத்தை கண்ட வியாபாரி,உனக்கு என்னப்பா குறை,மாப்பிள்ளை போல இருக்கிறாய் என்று மனதார கூறினார். அதைக் கேட்ட வேடன் அப்படியானால் உன்னுடைய மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?என்று கேட்டான். அதனால் என்னப்பா, என் உயிரை காப்பாற்றியதன் மூலம் என் குலத்தையே காப்பாற்றிய என் குல தெய்வம் நீ...! உன் விருப்படியே என் மகளை உனக்கே மணம் முடித்து தருகிறேன் என்று வாக்களித்தார்.
ஆரியன்காடு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவில் கருவறையில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலையைக் கரம்பற்றியதாக மரபுவழிச் செய்தி கூறுகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. அவ்விழாவிற்கு இப்பொழுதும் மதுரையில் வாழும் சௌராஷ்டிர இனத்தவர் சீர் எடுத்து வரும் வழக்கம் உள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் கடைசி பாண்டியர்களின் இறுதியில் வடகரை ஆதிக்கத்திற்கு உட்பட்ட "சொக்கம்பட்டி ஜமீன்" சார்பில் ஆலய திருப்பணி நடைபெற்றதற்கான சான்றுகள் இங்கு காணப்படுகின்றன.
கோயிலினுள் ஆண்கள் மட்டுமே நுழைய அனுமதி உள்ளது. பத்து முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் நுழையக் கூடாது.
இத்தலம்,"மூர்த்தி", "தலம்", "தீர்த்தம்' என்ற மூவகையிலும் பெருமை வாய்ந்த திருக்கோவில் என்று கூறப்படுகிறது. "மூர்த்தி" என்ற வகையில், ஒரு திருக்கோவிலின் கருவரையில் தாபிக்கப்படும் தெய்வ (பிராண) பிரதிட்டைகள் அதாவது மூல விக்கிரகங்கள் அந்த திருக்கோவிலின் தல புராணத்தை விளக்கும் வகையில் அமையும். அந்த வகையில் இக்கோயிலில் தர்மசாஸ்தா "மதகஜ வாஹன ரூபனாக" அதாவது மதம் பிடித்த யானை அடக்கி, வேட வடிவில் மாப்பிள்ளை கோலத்தில் புஷ்கலா தேவியோடு இங்கு திருமண காட்சி தருகிறார்.
"தலம்" என்ற வகையில் ஆரியன் திரிந்த காடு "ஆரியன்காவு" என்ற பெயர் பெற்ற ஸ்தலமாக இது விளங்குகின்றது.
"தீர்த்தம்" என்ற வகையில் சாஸ்தா குடி கொண்டுள்ள குளத்துப்புழை, அச்சன்கோவில், பாம்பை ஆகிய இடங்களில் புனிதமான ஆறுகள் இருப்பது போல ஆரியன்காவு திருக்கோவிலின் சன்னதியிலும் "கருப்பா நதி" சல சலத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.
சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண தினத்தன்று "சப்பர புறப்பாடு" நடைபெற்று மாலை மாற்றும் நடைபெறுகிறது.
திருக்கோயிலுக்கு உள்ளே மலையாள தாந்தீரிக முறைப்படியும், வெளிப்பிரகரத்தில் நடைபெறும் திருக்கல்யாணம், "பாண்டியன் முடிப்பு" @ நிச்சயதார்த்த வைபவம், சப்பர புறப்பாடு ஆகியவை தமிழ் நாட்டு ஆச்சார முறைப்படியும் நடைபெறுகிறது.
சௌராஷ்டிர குல மக்கள் "சம்பந்தி" முறையில் இந்த திருக்கல்யாண வைபவத்தில் மணமகள் புஷ்கலா தேவி சார்பில் கலந்து கொள்கிறார்கள்.
தேவஸ்வம் போர்டாரல் மூன்று நாள் "சம்பந்தி விருந்தும்" அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஐயப்பனின் பரவலாக அறியப்பட்ட கோவில்களில் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. குளத்துப்புழா, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள் ஆகும். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று, ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம். சபரிமலையைப் போன்றே இங்கும் பூசைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.
*குளத்துப்புழா ஐயப்பன் கோயில்:
குளத்துப்புழை ஐயப்பன் கோவில்(அ) குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது. இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.
இக்கோவில் அமைந்துள்ள குளத்துப்புழா எனும் சிற்றூர், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலையில் செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர். உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி.
சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன.
மச்சக் கன்னி புராணக் கதை:
கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.
மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக ஒரு நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இக்கோவிலில் ஐயப்பன் பாலகனாக அமைந்துள்ளதால், சிறுவர்களின் கல்விக்கு உகந்த இடமான இங்கு விஜய தசமி மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் இங்கு நடைபெறும் வித்யாரம்பம் சிறப்பானது. ஏப்ரல்/மே மாதத்தில் நடைபெறும் விஷு மகோத்சவம் இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா ஆகும். பரவலாக அறியப்பட்ட ஐயப்பனின் கோவில்களில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஒன்றாக உள்ளது. ஆரியங்காவு, அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், சபரிமலை ஆகியவை ஐயப்பனின் பிற முக்கியமான கோவில்கள். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவு, குளத்துப்புழா சென்று ஐயப்பனை வழிபட்டபின் பந்தளம் சென்று பின் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம்.திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள குறிப்பன்குளம் சிற்றூரில் குளத்து புழை தர்ம சாஸ்தா கோவில் மற்றும் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள குளத்தூர் ஐயன் கோவில் இந்தக் கோவிலில் இருந்து பிடிமண் மற்றும் நீர் எடுத்துவந்து கட்டப்பட்டது.இன்றைக்கும் இந்தக் கோவில் திருவிழாவின் போது குளத்துபுழா சென்று நீர் எடுத்து திரும்புவது வழக்கம்.
குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார்.
பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
*புலி வாகனனாக ஐயப்பன் காட்சி தரும் பந்தளம் ஐயப்பன் கோவில்:
பந்தள அரண்மனை, அச்சன்கோவில் ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. ஐயப்பன் வளர்ந்து, 12 ஆண்டுகள் வாழ்ந்தது இந்த பந்தளத்தில் தான். பந்தள ராஜாவின் குடும்ப கோவில் இங்குள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் பந்தள அரண்மனையில் தான், ஐயப்பனுக்கு மகரஜோதி அன்று அணிவிக்கப்படும் ஐயப்பனின் திருவாபரண பெட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பந்தளம் வலியகோயிக்கல் கோயில் என்பது பந்தளம் அரச குடும்பத்தினரின் குடும்பக் கோவிலாகும். பத்தனம்திட்டை மாவட்டத்தில் பந்தளம் என்னும் இடத்தில் அரண்மனை வளாகத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஐயப்பன் இங்குள்ள முக்கியமான கடவுள். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்கின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கவேண்டிய திருவாபரணங்கள் இங்கு இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகின்றன. மகரவிளக்குக் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு ஐயப்ப தரிசனம் செய்ய வருகிறார்கள்.
தல வரலாறு :
சிவ - விஷ்ணு ஐக்கியத்தில் பிறந்த ஐயப்பனை, பந்தள மன்னன் ராஜசேகரன் காட்டில் வேட்டையாட செல்லும் போது பம்பா நதிகரையில் கண்டெடுக்கிறார். கழுத்தில் மணியுடன் இருந்த குழந்தை என்பதனால் மணிகண்டன் என பெயரிட்டு வளர்த்தார். குருகுலத்தில் கல்வி முடித்த மணிகண்டனுக்கு பட்டத்து இளவரசனாக முடி சூடினார் ராஜசேகரன்.
இதனை விரும்பாத அமைச்சரும், ராணியும் சதி திட்டம் தீட்டி, ராணிக்கு ஏற்பட்ட வயிற்று வலியை குணப்படுத்த புலிப்பால் கொண்டு வரும் படி ஐயப்பனுக்கு ஆணையிட்டனர். காட்டிற்கு சென்ற ஐயப்பன், அரக்கி மகிஷியை வதம் செய்து புலி கூட்டத்துடன் நாடு திரும்பினார். இதை கண்ட மக்கள் அய்யனே, அப்பனே என துதித்தனர். இதனால் ஐயப்பன் என அழைக்கப்பட்டவர், அரச வாழ்வை துறந்து சபரிமலைக்கு சென்று தவக் கோலத்தில் அமர்ந்தார்.
பந்தளத்தின் சிறப்பு:
பந்தள அரண்மனை, அச்சன்கோவில் ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. ஐயப்பன் வளர்ந்து, 12 ஆண்டுகள் வாழ்ந்தது இந்த பந்தளத்தில் உள்ள அரண்மனையில் தான். பந்தள ராஜாவின் குடும்ப கோவில் இங்குள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் பந்தள அரண்மனையில் தான், ஐயப்பனுக்கு மகரஜோதி அன்று அணிவிக்கப்படும் ஐயப்பனின் திருவாபரண பெட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஐயப்ப ரூபம்:
பந்தளத்தில் அமைந்துள்ள கோவிலின் கருவறையில் புலியுடன் நிற்பது போல் காட்சி தருகிறார் மணிகண்டன். மணிகண்டன் வளர்ந்த பந்தள அரண்மனையில் அவர் படித்து பயன்படுத்திய ஓலைகள் இன்னும் அங்கு உள்ளன. அங்குள்ள குளமானது ஐயப்பன் நீராடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த குளத்தின் நீர் எப்போதும் வெதுவெதுப்பாக, இதமாக இருக்கும் என்பது தனிச்சிறப்பு.
வழிகாட்டும் கருடன்
கருடன் வட்டமிடும் அதிசயம்:
சபரிமலை ஐயப்பனின் திருமேனிக்கு அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியன ஒரு பெட்டியிலும், மாளிகை புறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் தை முதல் நாள் பிற்பகலில் சபரிபீடம் வந்தடையும். பந்தள அரண்மனை துவங்கி, சபரிமலை வரை திருவாபரண பெட்டி வரும் போது கருடன் வட்டமிட்டபடி தொடர்ந்து வரும் அதிசய நிகழ்வு இன்றவும் நடக்கிறது.
கோவில் அமைப்பு:
கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களில் பந்தளம் ஐயப்பன் கோவிலும் ஒன்று. சுமார் 3 ஏக்கரில் அமைந்துள்ள இக்கோவில் கேரளா முறைப்படி அமைக்கப்பட்டதாகும். இதன் கூரைகள் பித்தளை உலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. சாஸ்தாவின் சன்னதிக்கு தென் மேற்கு திசையில் மாளிகைபுறத்தம்மனுக்கும் சன்னதி உள்ளது. மற்ற முக்கிய கோவில்களில் நடத்தப்படும் அனைத்து விழாக்களும் இங்கும் கொண்டாடப்படுகிறது. சபரிமலையை போல் இங்கும் சர்க்கரை பாயாசம், அரவணை, உன்னி அப்பம் ஆகியன பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை இக்கோவில் திறந்திருக்கும். திருவிழாக்கள், விசேஷ நாட்கள், பக்தர்கள் அதிகம் வரும் நாட்கள் போன்ற நாட்களில் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
விழாக்கள்:
மகர விளக்கு, ஓணம், விஷூ ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர விருச்சிகம் மற்றும் தனுர் மாதங்களில் 41 நாட்கள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடத்தப்படுகிறது.
பந்தளத்திற்கு எப்படி செல்வது?
சபரிமலையில் இருந்து 88 கி.மீ., தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது பந்தளம். செங்கனூரில் இருந்து 10.கி.மீ., தூரம் சென்றால் பந்தளத்தை அடைந்து விடலாம்.
*காரையாறு சொரிமுத்து ஐய்யனார் கோயில்:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தின் வரலாற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
தல வரலாறு:
இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்... தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர். அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.
இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார். இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.
அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர். இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.
அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.
முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.
நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆடி அமாவாசை திருவிழா :
அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது.
செருப்பு காணிக்கை: குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.
மணி விழுங்கி மரம் :
இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.
*சபரிமலை:
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரகதக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
ஐயப்பன் பிறந்த வரலாறு :
தண்டகாருன்ய வனத்து மகரிஷிகளின் ஆணவத்தை போக்கி, அவர்களை நல்வழிபடுத்துவதற்காக சிவ பெருமான் பிச்சாடனராகவும், நாராயணர் மோகினியாகவும் அவதாரம் எடுத்தனர். அதே சமயம் பிரம்ம தேவரை நோக்கி தவம் இருந்த மகிஷி என்ற அரக்கி, சிவ-விஷ்ணு ஐக்கியத்தில், சக்தியில் உருவான குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என வரம் பெற்றாள். வரம் கிடைத்ததும் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்த துவங்கினாள்.
மணிகண்டன் அவதாரம்:
இதற்கிடையில் சிவ - விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து ஆனந்த மயமாக தோன்றிய குழந்தை, கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் உதித்தது. அப்போது காட்டுக்கு வேட்டைக்கு வந்த பந்தள மன்னன், குழந்தை இல்லாத தனக்கு கிடைத்த வரமாக நினைத்து குழந்தையை எடுத்துச் சென்ற வளர்த்தார். கண்டத்தில் (கழுத்தில்) மணியுடன் பிறந்த குழந்தை என்பதனால் மணிகண்டன் என பெயர் சூட்டி வளர்த்தார். பகவான் வருகையின் பலனாக பந்தள ராஜாவின் மனைவியும் கருவுற்று, ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். பந்தள மன்னன், மணிகண்டனுக்கு முடி சூட நினைத்தார். இதனால் மணிகண்டனை ஒழித்து கட்ட எண்ணிய ராணியும், அமைச்சரும் பல சதி வேலைகள் செய்தனர்.
ராணிக்கு ஏற்பட்டுள்ள நோயை போக்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என மணிகண்டனை காட்டுக்கு அனுப்புகின்றனர். மணிகண்டனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள், அவரிடம் முறையிட்டனர். மணிகண்டனும் மகிஷியை வதம் செய்து, தேவர்களை காப்பாற்றினார். சாபத்தால் அரக்கியாக இருந்த மகிஷி, அழகிய பெண்ணாக மாறி, மணிகண்டனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் தான் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதாக கூறிய மணிகண்டன், சபரிமலையில் தனக்கு அமைய கோவிலுக்கு அருகிலேயே மாளிகைபுறத்து அம்மனாக வீற்றிருந்து அருள்புரிய அருளினார்.
தேவர்கள் புலிகளாக மாறி வர, புலி மீது பவனி வந்த மணிகண்டனிடம் ராணியும், அமைச்சரும் மன்னிப்பு கேட்டனர். பந்தள மன்னனாக மறுத்த மணிகண்டன், சுவாமி ஐயப்பனாக 18 படிகள் அமைத்து, தவக்கோலத்தில் காட்சி செய்ய துவங்கினார்.
ஐயப்ப விரத விதிமுறைகள் :
ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடை அணிவார்கள். சபரிமலை செல்ல நினைப்பவர்கள் துளசி மணி மாலை மற்றும் ருத்ராட்ச மாலையை குருசாமி கையால் அணிவார்கள். இந்த மாலை 54, 108 என்ற கணக்கில் அமைந்திருக்க வேண்டும். 41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்கு செல்வார்கள்.
சபரிமலை யாத்திரையில் முக்கியமானது இருமுடி கட்டுவது. ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு செலுத்துவதற்காக எடுத்துச் செல்லும் பச்சரிசி, நெய் தேங்காய் போன்றவற்றை ஒரு முடியாகவும், வழியில் தங்களுக்கான உணவை மற்றொரு முடியாகவும் கட்டி எடுத்துச் செல்வார்கள். இதனை பாவம் ஒரு முடி, புண்ணியம் ஒரு முடி என்றும் சொல்வார்கள். சிவனின் அம்சமான தேங்காயில், மகாவிஷ்ணுவின் அம்சமான நெய்யை நிறப்பி ஒரு முடியில் வைத்து பாவ, புண்ணியங்களை சுமந்து சென்று இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
தத்துவமசி சொல்லும் தத்துவம்
மகா வாக்கியம் :
ஐயப்பன் கோவிலில் 18 படிகளுக்கு மேல், தத்துவமசி என்ற மகா வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. இதை தத்-துவம்-அஸி என பிரித்து படிக்க வேண்டும். " நீ எதை தேடி வந்தாயோ அது உன்னிடமே உள்ளது" என்பது தான் இதன் பொருள். ஐயப்பன் என்ற சொல்லுக்கு நான் உனக்குள் இருக்கிறேன் என்பது தான் பொருள். அனைத்து ஆன்மாவோடு கலந்துள்ள இறைவனை உணர்ந்து, இறை நிலைக்கு மனிதன் உயர வேண்டும் என்ற மகா தத்துவத்தை உணர்த்துவது தான் ஐயப்ப விரத மற்றும் வழிபாட்டின் முக்கிய அம்சமாகும்.
சபரிமலை பிரசாதம் :
நீண்ட நாட்களானாலும் கெட்டு போகக் கூடாது என ஐயப்பனுக்காக பந்தள மன்னன் எடுத்துச் சென்ற அரவனை பாயசம், உன்னி அப்பம் போன்றவைகளே தற்போது வரை சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் ஆக கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரவனை பாயசம் என்பது பச்சரிசி, வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படுவதாகவும். பக்தர்கள் இருமுடியில் கொண்டு செல்லும் தேங்காயில் உள்ள நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து, ஐயனின் திருமேனி தீண்டிய நெய்யினை பிரசாதமாக பக்தர்களுக்கு தருகிறார்கள். இந்த நெய்யான ஒரு ஆண்டு ஆனாலும் கூட அதே நறுமணம் மாறாமல் கெட்டு போகாமல் இருக்கும். இந்த நெய்யினை ஒரு மண்டலம் சாப்பிட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.
சபரிமலை 18 படி விளக்கம்:
தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளிலும் 18 தேவதைகள் அருள் செய்கின்றன. இந்த 18 படிகளும் வாழ்க்கை மற்றும் 18 வகையான குணங்களை குறிப்பதாகவும், இவற்றில் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை சேர வேண்டும் என்பதே 18 படிகளின் தத்துவம். 18 படிகளில் ஏறும் போது, 18 படிகளை கடந்த ஐயப்பனை தரிசிக்கும் போதும் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 18 படிகள் உணர்த்தும் தத்துவம்.
முதல் படி - பிறப்பு நிலையற்றது
இரண்டாம் படி - சாங்கிய யோகம்
மூன்றாம் படி - கர்ம யோகம்
நான்காம் படி - ஞான யோகம்
ஐந்தாம் படி - சன்னியாசி யோகம்
ஆறாம் படி - தியான யோகம்
ஏழாம் படி - ஞான விஞ்ஞான யோகம்
எட்டாம் படி - அட்சர பிரம்ம யோகம்
ஒன்பதாம் படி - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
பத்தாம் படி - விபூதி யோகம்
பதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம்
பன்னிரெண்டாம் படி - பக்தி யோகம்
பதிமூன்றாம் படி - சேஷத்ர விபாக யோகம்
பதினான்காம் படி - குணத்ரய விபாக யோகம்
பதினைந்தாம் படி - புருஷோத்தம யோகம்
பதினாறாம் படி - தைவாசுரஸம்பத் விபாக யோகம்
பதினேழாம் படி - ச்ராத்தாதரய விபாக போகும்
பதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்
ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டல கால விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து ஒவ்வொரு படிகள் மீது ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.
மகரஜோதி :
ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி அன்று, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனின் ஆபணங்களில் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அணிவிக்கப்படும். அப்படி நகைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும் போதும் பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவமாக ஐயப்பன் காட்சி தருவார். இந்த மகரஜோதியை காண்பது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியது. ஐயப்ப வழிபாட்டில் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவது மகரஜோதி தரிசனத்தை தான்.
ஐயப்ப வழிபாட்டின் தோற்றம் :
கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பந்தள தேசத்தின் மன்னனின் மகனாக ஐயப்பன் வளர்ந்த காரணத்தால் ஆரம்பத்தில் சபரிமலை யாத்திரை என்பதும், ஐயப்ப வழிபாடு என்பதும் கேரள மாநிலத்தவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு வழிபாட்டு முறையாக இருந்தது. 60 ஆண்டுகளுக்கு முன் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவர் 'ஸ்ரீ ஐயப்பன்' என்ற தலைப்பில் ஐயப்பனின் வரலாற்றையும், வழிபாட்டு முறை பற்றியும் நாடகமாக போட்டு கேரளாவை தாண்டி பிற மாநிலத்தவர்களும் ஐயப்பன் பற்றி தெரிந்து கொள்ள செய்தார்.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்திருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜைக்காக கோவில் காலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.
விழாக்கள் :
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. தை மாதம் மகர சங்கராந்தி அன்று நடக்கும் மகரஜோதி தரிசனம், சித்திரை விஷூ போன்ற விழாக்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக சபரிமலையில் குவிகிறார்கள்.
*எருமேலி தர்மசாஸ்தா கோயில்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி தர்மசாஸ்தா கோவில், ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது. ஐயப்ப பக்தர்களின் முக்கியமான சந்திப்பு இடமாக இது திகழ்கிறது. பேட்டா தர்மசாஸ்தா கோவில் என்றும் இதனை அழைக்கிறார்கள்.
கோவில் வரலாறு:
மணிமாலா நதிக்கரையில் எருமேலி நகரம் அமைந்துள்ளது. எருமேலி என்பது எருமகொல்லி என்ற சொல்லில் இருந்த வந்ததாகும். சுவாமி ஐயப்பன், அரக்கி மஹிஷியை இந்த இடத்தில் தான் வதம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. மஹிஷ் என்றால் எருமை என்பதாகும். மலையாளத்தில் இதற்கு எருமா என்று பொருள். இதனால் ஐயப்ப பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலங்களில் இக்கோவில் முக்கிய இடம்பிடித்துள்ளது. இதை சாஸ்தாவின் விசுக்தி சக்ர கோவில் என்றும் சொல்வார்கள்.
சபரிமலையில் தரிசனத்திற்காக 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள்
வில், அம்புடன் காட்சி தரும் ஐயப்பன்:
புலிப்பால் கொண்டு வருவதற்காக காட்டுக்கு வில், அம்புடன் புறப்பட்ட ஐயப்பனிடம் தேவர்கள், தாங்கள் அரக்கி மஹிஷியால் அனுபவித்து வரும் துன்பங்களை சொல்லி முறையிட்டனர். இதனால் உடனடியாக சென்று மஹிஷியை வதம் செய்து, தேவர்களின் துயரை போக்கினார் ஐயப்பன். மஹிஷியை வதம் செய்ய வில், அம்புடன் வந்த காரணத்தால் இங்கு தர்மசாஸ்வாக வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பன் கையில் வில், அம்பு ஏந்திய கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்.
எருமேலி நகரில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த கோவில் வல்லியம்பலம் என்றும், மற்றொன்று கொச்சம்பலம் (மலையாளத்தில் அம்பலம் என்பது கோவிலை குறிக்கும்)என்று அழைக்கப்படுகிறது . இரண்டு கோவில்களும் 0.5 கி.மீ க்குள் அமைந்துள்ளன. சபரிமலை யாத்திரையின் போது புகழ்பெற்ற எருமெலி பேட்டத்துள்ளல் சடங்கானது வல்லியம்பலம் மற்றும் கொச்சம்பலம் அருகே துவங்குகிறது. இந்தக் கோவிலுக்கு அருகில்தான் எருமேலி 'வாவர் மசூதி' அமைந்துள்ளது. இந்தக் கோவிலை ஒட்டிய பகுதியில்தான் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் யாத்ரீகர்களுக்கு தங்குமிடம், உணவு, நீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எருமேலி பேட்டத்துள்ளல்:
சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்த போது தேவர்களும், இப்பகுதியில் வசித்த மலைவாழ் மக்களும் ஆடிப்பாடி அதனை கொண்டாடி உள்ளனர். இதனை நினைவு கூறும் விதமாகவே எருமேலியில் பேட்டை துள்ளல் ஆடுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மண்டல சீசனில் பக்தர்கள் தினந்தோறும் பேட்டை துள்ளல் ஆடினாலும், மகர ஜோதிக்கு முன் நடத்தப்படும் பேட்டை துள்ளல் நிகழ்வே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐயப்பன் சாமிகள் உடலில் பல விதமான வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டு நடனம் ஆடுவர்.
புத்தன் வீடு:
எருமேலியில் மகினுியை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாரிய இடத்திற்கு புத்தன் வீடு என்று பெயர். இங்கு மகிஷியை வதம் செய்ய ஐயப்பன் பயன்படுத்திய வாள் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment