Saturday, November 16, 2024

கடைமுடிநாதர் திருக்கோயில் சிவன் கோயில் கீழையூர்...

அருள்மிகு அபிராமி உடனுறை கடைமுடிநாதர் திருக்கோயில், 
சிவன் கோயில் வீதி, கீழையூர்-609304 
*மூலவர்         :      கடைமுடிநாதர்

*அம்மன்         :   அபிராமி

*தல விருட்சம்  :   கிளுவை

*தீர்த்தம்         :      கருணாதீர்த்தம்.   

*வழிபட்டோர்:
 பிரமன், கண்வமகரிஷி ஆகியோர் 

*பாடல் பெற்ற தலம்: திருஞானசம்பந்தர்  பாடியுள்ளார்.
*புராண பெயர்  :      திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர்

*இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்திசம்ரட்சணேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். கடைமுடிநாதர் என்ற பெயரினால் நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும்,  அந்திசம்ரட்சணேசுவரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்று நமக்குத் தெளிவாக புலப்படுத்துகிறார்.                          

*இங்கு இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது.
 சிவன் சுயம்பு மூர்த்தியாக சற்று உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் பதினாறு பட்டைகளுடன் சோடஷ லிங்க அமைப்பில் இருக்கிறார்.

*ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டார்.  மகிழ்ந்த சிவன் அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார்.           பிரம்மா தனக்கு விமோசனம் கேட்டபோது தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார்.          பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
 
 *அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.   இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள்.  திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர்.                       

*கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமகான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு வளங்குகிறது.             

*இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும் வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். *இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருக்கிறார். 

*நவகிரகங்கள் எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாக அமைந்திருக்கின்றன. 

*இத்தலத்தில் காவிரி நதி வடக்கு முகமாக வந்து மேற்கு நோக்கி ஓடுகிறது. 

*மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. இத்தலம் தொலைவில் உள்ளது.                                      


ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...