Saturday, November 23, 2024

உலகிலேயே சயனக்கோலத்தில் உள்ள சிவன் கோயில் சுருட்டபள்ளி..

உலகிலேயே வேறு எங்கும் காண முடியாத சிவபெருமான் உமையம்மை மடியில் 
சயனக்கோலத்தில் (பள்ளிக்கொண்ட நிலையில்)
காட்சி தரும் ஒரே தலமான, 
வால்மீகி முனிவர் வழிபட்ட தலங்களில் ஒன்றான, 
பிரதோஷ வழிபாடு நிகழ காரணமான தலமான 
ஆந்திர மாநிலத்தில் உள்ள 
#சுருட்டப்பள்ளி
#ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர்_சர்வமங்களாம்பிகை 
#வால்மீகிஸ்வரர்_மரகதாம்பிகை
திருக்கோவில் வரலாறு :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. இங்கு பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்தத் திருத்தலம். பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரும்பான்மையான மூர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது, இந்தக் கோவிலின் முக்கிய அம்சமாகும்.*

இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். பரந்தாமனை போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இது என்பது சிறப்பாகும்.

 *இறைவர்  :
பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்
*இறைவியார் : சர்வமங்களாம்பிகை,
மரகதாம்பிகை
தல மரம் :வில்வம்
தீர்த்தம் : -
வழிபட்டோர் : வால்மீகி முனிவர் , தேவர்கள்

*புராண வரலாறு:

இந்திரன் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டான். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவனிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.

ஈஸ்வரன் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். பரமேஸ்வரன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, ஈசனின் கண்டத்தை (கழுத்தை) பிடித்தாள் உமாதேவி. இதனால் விஷம் கண்டத்திலேயே நின்று விட்டது. அதனால் தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று அழைக்கிறோம்.

விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் பார்வதி தேவி ‘சர்வமங்களா’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.

தல வரலாறு:

பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான்.முதல் முதலில் பிரதோஷ வழிபாடு இங்குதான் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது.

எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.

சயனித்த கோலத்தில், சிவபெருமான் பள்ளி கொண்ட ஈஸ்வரராக காட்சி அளிப்பது உலகத்திலேயே சுருட்டப்பள்ளி ஷேத்திரத்தில்தான்.

இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள்.

வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தலம் ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பள்ளிகொண்டீஸ்வரரை சுற்றி பிருகு முனிவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கவுதமர், தும்புரர், வசிஷ்டர், விசுவாமித்திரர், வால்மீகி, தேவேந்திரனோடு விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் அருட்காட்சி புரிகிறார்கள்.

3 நிலை கொண்ட ராஜகோபுரத்தின் எதிரே, சுமார் 5 அடி உயர பீடத்தில் 5 அடி உயர நந்தீஸ்வரர் உள்ளார். இந்த கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது. அதற்கு பதிலாக சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் அன்னை மரகதாம்பிகை சிம்ம வாகினியாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் வலது பக்கத்தில் கற்பக விருட்சம், இடது பக்கத்தில் காமதேனு பசு காணப்படுகிறது.

*ஏகபாத திரிமூர்த்தி :

மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்களின் திருவுருவச்சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளது. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிப்பது அரிய ஒன்றாகும். தான் ஒருவராய் படைத்தல், காத்தல் தொழில் புரிபவராக பிரம்மா, விஷ்ணுவை தன்னிடத்தே கொண்ட சிவவடிவமே ‘ஏகபாத திரிமூர்த்தி’ ஆவார். பிரம்மா நான்கு முகங்களுடன் அன்ன வாகனத்துடனும், சிவன் நந்தியுடனும், விஷ்ணு கருடாழ்வாருடனும் ஒரே கல்லில் மிக அழகான சிற்பமாக காட்சி அளிக்கிறார்கள்.

வரசித்தி விநாயகர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை தணிப்பதற்காக, சிவன் தனது கையில் அக்னியுடனும், மூன்று தலை, மூன்று கால்கள், மூன்று கைகளுடன் எடுத்த அவதாரமே ஜுரஹரமூர்த்தி. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். ராஜயோகத்தை தரும் ராஜமாதங்கி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது.

அதிகார நந்தி :

பிரம்மாவுக்கு கீழே தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சப்த கன்னிமார்கள் 7 பேரும் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்கு பிரதோஷ மூர்த்தி வண்ணப்படமாக தனி சன்னிதியில் உள்ளார். இந்த சன்னிதியின் வெளிப்புறத்தில் வேணுகோபாலசுவாமி தனது கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். மற்றொரு பக்கம் வேறெங்கும் காண முடியாத வகையில், நந்தீஸ்வரர் கைகூப்பிய நிலையில் அதிகார நந்தியாக அருள்கிறார்.*

கிழக்கு பக்கத்தில் ஒரு சன்னிதியில் சீதாதேவி, ராமர், லட்சுமணன் அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் பரதன், சத்ருக்னர், ஆஞ்சநேயர் உள்ளனர். இதை கடந்து சென்றால் ராமலிங்கேஸ்வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் வால்மீகிஸ்வரர் சிலை உள்ளது.*

பல கோவிலில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். ஆனால் இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவியுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அற்புதம் ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

*கோவில் வரலாறு:

சர்வேஸ்வரன் சயனித்த ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரராக, திருக்கோல காட்சி தரும் புண்ணியம் பெற்ற ஸ்தலம் தான் சுருட்டப்பள்ளி. விஷத்தை சாப்பிட்ட பகவான் சுருண்டு மயக்க நிலையில் படுத்ததால்தான் சுருட்டப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தேவர்கள் வாசம் செய்யும் ஊர் ஆகையால் சுருளு பள்ளி, சுருளு: தேவர்கள் பள்ளி, ஊர் என பெயர் பெற்றதாக கூறலாம்.

மகாவிஷ்ணு நிற்பார்-இருப்பார்-கிடப்பார் என்பதை பல தலங்களில் பார்ப்போம். அவர் சயன திருக்கோலத்தை இருபத்தி ஏழு புண்ணிய தலங்களில் காணலாம். ஆனால் சயனித்த கோலத்தில், சிவபெருமான் பள்ளி கொண்ட ஈஸ்வரராக காட்சி அளிப்பது உலகத்திலேயே சுருட்டப்பள்ளி ஷேத்திரத்தில்தான்.

கைலாயத்தில் கூட இக்காட்சியை காண தேவர்கள் பரமனை தரிசிக்க இக்கோவிலுக்கு ஓடோடி வருகின்றனர். தர்மத்தின் ரூபமான நத்தி தேவர் அவர்களை எதிர்நோக்கி அவசரப்படாதீர்கள் பரமசிவன் மயக்கத்தில் இருக்கிறார். மயக்கம் தெளிந்ததும் நீங்கள் தரிசிக்கலாம் என்று தடுத்து நிறுத்துகிறார்.

சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்தவுடன் தேவர்களை அழைத்து சிவதரிசனம் செய்ய அனுமதிக்கிறார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், தேவாதி தேவர்கள், சந்திரன், சூர்யர், நாரதர், தும்புரு, குபேரன், சப்த ரிஷிக்கள் சேர்ந்து தரிசித்து பரமனை வணங்குகிறார்கள். எல்லோரையும் பார்த்த சிவபெருமான் ஆனந்தத்துடன் அன்று மாலை கூத்தாடுகிறார்.

அதுதான் ஆனந்த தாண்டவம். இப்படி தரிசித்த அனைவரையும் ஆசீர்வதித்த நன்நாள் கிருஷ்ணபட்ச திரியோதசி ஸ்திரவாரம் (சனிக்கிழமை) இதுதான் மகாபிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷம் கொண்டாடுவதற்கு இதுவே காரணம். (ஆதாரம் ஸ்கந்த புராணம் உத்திரகாண்ட ரகசியம்).

துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரனுக்கு பதவி பறிபோகிறது. அப்பதவியை பெற அமுதத்தை உண்டு பலம் பெற வேண்டும். அதற்கு பாற்கடலை கடைந்து அதைப் பெறுமாறு தேவகுரு பிரகஸ்பதி ஆணையிடுகிறார். தேவர்களும், அசுரர்களும் மந்தரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற பாம்மை கயிறாகவும், கொண்டு பாற்கடலை கடைந்தனர்.

பல நாட்கள், கயிறாக விளங்கிய வாசுகி பாம்பு கொடிய வியத்தை கக்க... அந்த விஷம் கடலோடு கலந்து காலகூட விஷமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் பயங்கரமாக துரத்தியது. பயந்து நடுங்கிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காக்க வேண்டி கைலாச நாதரான ஸ்ரீபரமேஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து தஞ்சம் அடைந்தனர்.

பரமேஸ்வரரின் ஆணைப்படி நந்தி தேவரும், சுந்தரரரும் எடுத்து வர ஒரு நாவல் பழம் போல அந்த காலகூட விஷத்தை உருட்டி ஈசன் உட்கொண்டார். பரமேஸ்வரன் அதை உட்கொண்டால் அவன் உள்ளே இருக்கும் பல கோடி உயிர்களும் அழிந்து விடும் என்பதை உணர்ந்த அன்னை பராசக்தி தன் தளிர்க் கரங்களினால் ஈசனின் கண்டத்தைப் பற்றி விஷத்தை அங்கேயே தங்கச் செய்கிறாள்.

விஷம் உண்ட கழுத்தை உடைய ஈசன் திருநீலகண்டரானார். நீலகண்டரான பரமேஸ்வரன் விஷத்தை உண்டதால் ஏற்பட்ட சிரமத்தைத் தணித்து கொள்வதற்காக, சற்று சயனிக்க விரும்பி அமைதியான இடத்தை தேடி சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை அடைந்தார்.

அமைதி சூழ்ந்த, மரங்கள் நிறைந்த, புங்கை மரங்களும், பூஞ்செடிகளும் நிறைந்த சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை தேர்வு செய்து அன்னை சர்வ மங்களம்பிகையின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார்.

சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், "பள்ளி கொண்டீஸ்வரர்' எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோவில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய சிறிய கோபுரம். மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் ஆலய நுழைவு வாயில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்களும் இறைவனின் திருமந்திரமான ஐந்து எழுத்துக்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

உள்ளே நுழைந்ததும் எதிரில் முதன் முதலின் நாம் காண்பது அம்பிகையின் சன்னதி. இங்கு ஈஸ்வரனும், அம்பிகையும், ஒரே கோவிலில் தனித்தனியான சன்னதிகளில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். பள்ளிகொண்டீஸ்வரரின் சன்னதி தனித்த திருக்கோவிலாக அமைந்துள்ளது.

அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்களாக, திருஉருவங்களை காணலாம். இத்தலத்திற்கு வந்து இறைவன், இறைவியை வணங்குபவர்களுக்கு அம்மையப்பர், அன்னமும், சொர்ணமும் அளித்து வாழ்வை வளமாக்குவார் என்பது இதன் தத்துவம்.

அம்பிகை இறைவனுக்கு வலது புறத்தில் கோவில் கொண்டுள்ளது தனி சிறப்பு அநேக கோவில்கள் அம்பிகை இறைவனுக்கு இடது புறத்தில் கோவில் கொண்டுள்ளதை காணலாம். வலது புறத்தில் அம்மன் கோவில் கொண்டுள்ளதால் இத்தலத்தை திருக்கல்யாண ஷேத்திரம் என கூறுவர். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இதன் பொருள்.

அம்பிகையின் கருவறைக்குள் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கக்கூடிய, நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க கூடிய காமதேனுவும், கற்பக விருட்சமும் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கிறார்.

சிவ பெருமான் சயன கோலத்தில் இருக்கும் பள்ளிகொண்டேஸ்வரரின் கருவறை அமைப்பு வித்தியாசமானது. ஆலகால விஷத்தை உண்டு அசதியில் உறங்கும் பரமேஸ்வரனையும், அவருடைய தலைமாட்டில் வீற்றிருக்கும் பரமேஸ்வரியான சர்வமங்களாம்பிகையும் தரிசிக்கலாம்.

அவர்களை சூழ்ந்து நின்றிருக்கும் சந்திரன், சூரியன், நாரதர், தும்புரு, குபேரன், பிரம்மா, விஷ்ணு மற்றும் சப்த ரிஷிகளையும் கண்டு வணங்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் மூலக்கருவறையில் தெற்கே தலை வைத்து மல்லாந்த வண்ணம் நெடுந்துயில் கொண்டிருக்கிறார் பள்ளிகொண்டீஸ்வரர்.

இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள். அன்னையின் குளிர்ந்த திருவடி ஈசனின் திருமேனியை சற்றே தொடுகிற மாதிரி அம்பாள் வீற்றிருக்கிறாள். இப்பொழுது தான் அன்னைக்கு பரம திருப்தி.

ஏனென்றால், உயிர்கள் எல்லாம் அயர்ந்து உறங்குகின்ற வேளையில், உலகம் முழுவதும் ஒழுங்காக இயங்க சதாசர்வ காலமும் நடனமாடிக்கொண்டு இருந்தவருக்கு சற்ற ஓய்வு கிடைத்ததே என மகிழ்ந்தாள். பள்ளி கொண்டீஸ்வரரை வணங்கும் போது, அவன் திருவடி தரிசனத்தை மனத்தின் உள்ளே நிறுத்தி வைத்து தியானிக்க வேண்டும். அவனை உட்கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் பலன் கிடைக்கும். இந்த ஒரே எண்ணத்தோடு பள்ளி கொண்டீஸ்வர பெருமானின் திருவடி தாமரைகளை போற்றி பணிந்து வணங்கி, அவன் திருமுக தரிசனத்தை நம்முள் வாங்கிக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாண் கிடையாக படுத்திருக்கும் மூலவருக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான் உண்டு.

மற்ற அபிஷேகங்கள் கிடையாது. இந்த சன்னதிக்குள் இன்னொரு விசேஷம் உண்டு. சிவன் என்பதால் வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.

பெருமாளின் திருவடி நிலைக்கு தான் சடாரி என்று சொல்லுவார்கள். அந்த பெருமானே நம் தலையில் திருவடி வைத்து ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

*சிறப்புக்கள் :

இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்

பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

*பிரதோஷ வழிபாடு :

இந்த கோவிலில் பிரதோஷ கால வழிபாடு பிரசித்தி பெற்றது. மேலும் திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.

 
அமைவிடம் :

பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் ஆகும்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் சுருட்டப்பள்ளியில் நின்று செல்லும். நாம் பஸ்சைவிட்டு இறங்கினாலே, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலின் கோபுரம் நம்மை வரவேற்கும்…

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...