Monday, November 4, 2024

சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்

*சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?*
காசியப்ப முனிவர், மாயா என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் என்னும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். இதை தடுக்க சிவபெருமானால் அவதரித்தவர் தான் முருகப்பெருமான்.

முருகப்பெருமான் பார்வதிதேவியிடம் வேலை பெற்று, சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களை காத்தது ஐப்பசி சஷ்டி திதியில் தான்.

அதனால்தான் முருகப்பெருமானுடைய கோயில்களில், கந்தசஷ்டி விழாவின் 6ஆம் நாள் சூரசம்ஹாரம் நடத்துகின்றனர்.

_சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகப்பெருமானின் படைவீடு எது தெரியுமா?_

கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகப்பெருமானின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம். ஆனால் முருகப்பெருமானின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழா நடக்காமல் மிக அமைதியாக இருக்கும்.

அப்படிப்பட்ட முருகப்பெருமானின் படைவீடு தான் திருத்தணி. இக்கோயில் முருகப்பெருமானின் 5ஆம் படைவீடு ஆகும்.

முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோயில்.

தணிகை என்பதன் பொருள் சினம் தணிதல் ஆகும். திருத்தணி முருகப்பெருமான் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.

இதன் காரணமாக தான் இந்த கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவது இல்லை. இருப்பினும் முருகப்பெருமானின் அருளை பெறக்கூடிய கந்தசஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது.

*முருகப்பெருமான் திருக்கல்யாண விழா*

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் முருகப்பெருமான்தெய்வானை திருமண வைபவம் நடைபெறும்.

கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் இன்றளவும் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகப்பெருமானை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகப்பெருமானின் ஒரு உற்சவர் வடிவம்), முருகப்பெருமானின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்வார்.

நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடைபெறும்.

மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் காட்சி தருவார்.

*மஞ்சள் நீராட்டும் வைபவம்*

கிராமங்களில் திருவிழாவின் போது கன்னி பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். அதுபோல தான் திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமானுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடைபெறும்.

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாள் முருகப்பெருமான், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்பொழுது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமானை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

*தெய்வீக திருமணங்கள்*

திருமணம் ஆகாதவர்கள், தெய்வ திருமணங்களை கண்டு வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

குறிப்பாக தெய்வ திருமணங்களை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோயில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்கின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....