Monday, November 11, 2024

திருவாமாத்தூர் அருள்மிகு அபிராமேசுவரர். விழுப்புரம்.

திருவாமாத்தூர் அருள்மிகு முத்தாம்பிகா சமேத அருள்மிகு அபிராமேசுவரர் கோவில்.
பெயர்:
புராண பெயர்(கள்):
கோமாதுபுரம், திருஆமாத்தூர்
(ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது.)

அமைவிடம்:
ஊர்: திருவாமாத்தூர்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோவில் தகவல்கள்
மூலவர்:
அபிராமேஸ்வரர்
இறைவன் திருப்பெயர் அபிராமேசுவரர். அழகியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரையே ஆமாத்தூர் அம்மான் என்று பாடிப் பரவுகிறார் திருஞான சம்பந்தர்.
தாயார்:
முத்தாம்பிகை
தல விருட்சம்:
வன்னி, கொன்றை
தீர்த்தம்:
ஆம்பலம்பூம்பொய்கை(குளம்), தண்ட தீர்த்தம்(கிணறு), பம்பை( ஆறு)

பாடல்:
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
திருஞானசம்மந்தர், 
இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

வழிபட்டோர்:
விநாயகர், முருகன், பார்வதி, நாரதத்தர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு, பராசரர், விஸ்வாமித்ரர், வியாசர், உரோமசர், மதங்க முனி, அஷ்ட வசுக்கள், பிருங்கி முனிவர், இராமர், காமதேனு, சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர் 

கோவில் அமைப்பு:
இத்தலத்தில் கோயில்களை அமைத்திருப்பதில் ஒரு புதுமை உள்ளது. இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனியாக ஒன்றை ஒன்று எதிர் நோக்கிய வண்ணம் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன இங்கே. இறைவன் கிழக்கு நோக்கியவராகவும் இறைவி மேற்கு நோக்கிய வண்ணமும் இருக்கிறார்கள். இறைவன் கோயில் வாயிலில் கோபுரம் இல்லை. அஸ்திவாரம் போட்டது போட்டபடியே நிற்கிறது.  

இந்தக் கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உள்ளன. 
முதல் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் இக்கோயில் கட்டிய அச்சுத தேவராயனுக்கு சிலை இருக்கிறது. 
இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், இராமர், காசி விசுவநாதர், சுப்பிரமணியர் எல்லாம் தனித் தனி சந்நிதிகளில் உள்ளனர்.

கோவில் சிறப்புகள்:
இந்த ஆமாத்தூர் அம்மான் சுயம்பு மூர்த்தி. 
பசுக்கள் வழிபாடு செய்த அடையாளமாகக் குளம்புச் சுவடு லிங்கத்தின் தலையில்பசுவின் குளம்பு வடு உள்ளது.

அன்னையால் வன்னிமரமாக மாற்றப்பட்ட பிருங்கி முனிவர் சாப விமோசனம் அடைந்த தலம் . 

இராமரும் பூஜித்த வரலாறு உண்டு . 

நந்தி, காமதேனு தவமிருந்து கொம்பு பெற்ற தலம்

பசுக்கள் ஆகிய உயிர்களுக்கு(ஆ-பசு), தாயாக இறைவன் அருளும் தலம்.

ஆதிகாலத்தில் 
பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. 
 
இறைவியால் சபிக்கப்பெற்ற பிருங்கி முனிவர் வன்னி மரமாகி, இங்கு சாபநீக்கம் பெற்ற பதி. பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டுமே வழிபடும் வழக்கமுடையவர். உமையம்மை இறைவன் உடலில் இடபாகத்தைப் பெற்ற போதும் வண்டு உரு எடுத்துத் துளைத்துச் சிவனையே வழிபட்டார். அதனால் அவரை உமையம்மை வன்னிமரம் ஆகுமாறு சபித்தார். பின்னர் முனிவர் இறைவியை வழிபட்டு அவர் அருளால் சாபநீக்கம் பெற்றார். ஆகையால் இத்தலத்தின் தலவிருட்சம் வன்னிமரம் ஆயிற்று.

சூரபத்மனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வழிபட்டார்.

இராமர் வழிபட்ட தலம்

தல வரலாறு:
ஒருவன் செய்த பொய் சத்தியத்தின் காரணமாக, ஓர் அம்மனின் திருவுருவத்தில் பாம்பின் வால் அமைந்திருக்கும் சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் நடைபெற்ற தலம்தான் திருவாமாத்தூர் அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில். அந்தக் கோயிலில் இருக்கும் முத்தாம்பிகை சந்நிதிதான், ஒருவன் செய்த பொய் சத்தியத்தின் காரணமாக ஏற்பட்டது. 

தெய்வ நம்பிக்கை மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அரசர்களால் தீர்க்க முடியாத வழக்குகளையும் தீர்ப்பதற்கென்று ஒரு நடைமுறை வைத்திருந்தனர். அதன்படி இறைவனின் ஆலயத்துக்கு வந்து சத்தியம் செய்யச் சொல்வார்கள். சில கோயில்களில் சத்தியம் செய்வதற்கென்று திருவட்டப்பாறை என்று ஒன்று இருக்கும். அந்தத் திருவட்டப்பாறையில் கை வைத்து சத்தியம் செய்துவிட்டால், வழக்கும் முடிவுக்கு வந்துவிடும். அந்தத் திருவட்டப்பாறைக்கு முன்பாக எவரும்  பொய் சத்தியம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை நிலவிய காலம் அது. அப்படியொரு திருவட்டப்பாறை விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் அருள்மிகு அபிராமேஸ்வரர் கோயிலிலும் உள்ளது.

அந்தக் கோயிலில் நாம் தரிசிக்கும் முத்தாம்பிகையின் பின்னணியில் சொல்லப்படும் கதை இது.

அக்காலத்தில் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னரின் முன்பு ஒரு வழக்கு வந்தது. அண்ணன் - தம்பிக்கிடையே சொத்து சம்பந்தமாக இருந்த வழக்கு அது. தம்பிக்குச் சேர வேண்டிய சொத்தைத் தராமல், சொத்துகள் அனைத்தையும் விற்று தங்க நாணயங்களாக மாற்றி அவற்றை ஒரு மூங்கில் தடியில் மறைத்து வைத்துவிட்டான் அண்ணன். நீதி கேட்டு அரசரிடம் சென்றான் தம்பி. அரசர் விசாரித்தபோது, `சொத்துகள் எதுவும் இல்லை' என்று ஒரேயடியாகச் சாதித்துவிட்டான் அண்ணன். அரசருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி அண்ணனிடம், `மறுநாள் காலையில் திருவாமாத்தூர் கோயிலுக்கு வந்து திருவட்டப்பாறை மீது கை வைத்து சத்தியம் செய்யும்படி'க் கூறினார்.

அரசர் கூறியபடியே மறுநாள் தம்பியுடன் கோயிலுக்கு வந்த அண்ணன், தன் கையிலிருந்த தடியை தம்பியின் கையில் கொடுத்துவிட்டு, திருவட்டப்பாறை மீது கைகளை வைத்து, ``எனக்கு உரிய சொத்துகளையும் தம்பிக்கு உரிய சொத்துகளையும் தம்பியிடமே கொடுத்துவிட்டேன்'' என்று பொய் சத்தியம் செய்தான். 

பிறகு, தன் தம்பி கையில் கொடுத்திருந்த தடியை வாங்கிக்கொண்டு திரும்பினான். தன் நண்பர்களிடம், ``பார்த்தீர்களா, திருவட்டப்பாறையாம், சத்தியமாம்! இதோ நான் இப்போது பொய் சத்தியம்தான் செய்துவிட்டேன். எனக்கு என்ன ஆகிவிட்டது?'' என்று எகத்தாளமாகப் பேசினான். 

'அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்று சொல்வார்கள். ஆனால், அந்த அண்ணனின் அகந்தைப் பேச்சு பொறுக்கமாட்டாமல் அன்றே அவனைக் கொல்ல தெய்வம் முடிவு செய்துவிட்டது போலும். ஆம். பொய் சத்தியம் செய்த அண்ணனைக் கொல்ல ஒரு பெரிய  நாகம் புற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்தது. பாம்புக்கு அஞ்சிய அண்ணன், வேகமாக ஓடத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் பாம்பு அவனைத் தீண்டிவிட்டது. அவன் இறந்துவிட்டான். அண்ணன் பொய் சத்தியம் செய்ததை அறியாத தம்பி, இறந்துவிட்ட அண்ணனுக்கு உரிய கிரியைகளைச் செய்துவிட்டு, அண்ணன் வைத்திருந்த தடியை எடுத்தான். அதற்குள் ஏதோ கலகலவென்று சத்தம் கேட்கவே, தடியை உடைத்துப் பார்த்தான். உள்ளே தங்கக் காசுகள் நிறைந்திருந்தன. அப்போதுதான் அவனுக்கு அண்ணனின் வஞ்சக குணமும்,பொய் சத்தியம் செய்ததன் காரணமாகவே அவன் பாம்பு தீண்டி இறக்க நேரிட்டதும் தெரிய வந்தது.

பொய் சத்தியம் செய்த அண்ணனைக் கொல்லத் துரத்திய நாகத்தின் தலைப்பகுதி தும்பூர் தாங்கலில் நாகாத்தம்மன் என்ற பெயரில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். நடுப்பகுதி சற்றுத் தள்ளி உள்ள வயலில் சிறிய கீற்றுக் கொட்டகையில் அருவமாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதிகம். , வால் பகுதி திருவாமாத்தூர் அபிராமேஸ் வரர் கோயிலில் அருளும் ஈஸ்வரன் கழுத்திலும் விழுந்தது. பொய் சத்தியம் செய்தவனைத் தீண்டியதால் தனக்கு ஏற்பட்ட பாவத்தை நீக்கிக்கொண்டு, கோயிலில் உள்ள முத்தாம்பிகையின் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டது. முத்தாம்பிகைக்கு அணிவிக்கும் வெள்ளிக் கவசத்தில் நாகத்தின் வால் பகுதியை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

திருவாமாத்தூர் திருவட்டப்பாறை:

திருவாமாத்தூர் திருவட்டப்பாறையில் சிவபெருமான் லிங்கேஸ்வரர் என்ற பெயரில் அருவமாகக் காட்சி தருகிறார் என்பது ஐதிகம். 

திருவட்டப்பாறையில் அருவமாக இருக்கும் லிங்கேஸ்வரரை தரிசித்தால், தீராத சிக்கல்களும் தீரும். அண்ணன் - தம்பிகளுக்கிடையே இருக்கும் சொத்துப் பிரச்னைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

மிக சக்தி வாய்ந்த 18ம்படி கருப்பண்ணசாமி கோவில்

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி . அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவ...