Wednesday, November 6, 2024

சக்திவேல் வாங்கும் நிகழ்வு மற்றும் சிங்காரவேலருக்கு வியர்க்கும் அதிசயம்..


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்றான 
#சிக்கல்_சிங்காரவேலர் #அன்னை_வேல்நெடுங்கண்ணியிடம் 
#சக்திவேல்_வாங்கும்_நிகழ்வு மற்றும் #சிங்காரவேலருக்கு #அதிசயமாக_வியர்க்கும்_நிகழ்வு_இன்று:
"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்:

முருகன் என்றால் இளமை மாறாதவன், அழகன் என்று பொருள். "சிங்காரம்' என்ற சொல்லும் அழகையே குறிக்கிறது. சிக்கல் தலத்தின் அழகன் சிக்கலுக்குப் பெருமை சேர்ப்பவன்.

முருகனின் அவதாரமே சூரபத்மன் என்ற கொடிய அரக்கனை வதைப்பதற்காக ஏற்பட்டது என்பார்கள். இறைவன், முருகப்பெருமானைச் சூரபத்மனை வதம் செய்து வருமாறு பணிக்கிறார்.

போருக்குக் கிளம்பும் முன் அன்னை உமா தேவியிடம் ஆசி வேண்டியபோது, தேவி தமது சக்தியை வேலாக வடித்து புதல்வனிடம் அளித்து வெற்றிவாகை சூடி வருமாறு ஆசி வழங்குகிறார்.

முருகப் பெருமான் உமாதேவியரிடமிருந்து சக்தி வேல் பெற்ற தலமாகத் திகழ்கிறது சிக்கல். அதனாலேயே இத்தலத்திற்குச் சிறப்பு அதிகம். "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது வழி வழி வந்த செவி வழிச் செய்தியாகும்.

அழகிய சிக்கல் சிங்கார வேலவ

சமரிடை மெத்த பொங்காரமாய் வரும்

அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமானே'

என்பார் திருப்புகழில் அருணகிரியார்.

"செல்வச் சிக்கல்' என்று அருணகிரியாரால் பாடப்பட்ட சிக்கல் சிறிய ஊர்தான் என்றாலும் சிறப்புமிக்கது. கம்பீரமாகக் காட்சி கொடுக்கும் ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் சிக்கலின் அழகுக்குச் சிறப்பு சேர்க்கிறது. ராஜகோபுர வாயிலை அடுத்து கிருத்திகை நட்சத்திர தினத்தன்று சிங்கார வேலருக்கு இந்த மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கட்டுமலைமேல் இறைவன் வெண்ணெய்பிரான் சந்நிதியும் ஆறுமுகங்களுடன் திருக்கரத்தில் வேல் ஏந்த, வள்ளி, தெய்வயானை சகிதம் அருள்பாலிக்கும் சிங்கார வேலரின் சந்நிதியும் உள்ளன.

மாலையிலிருந்து இறங்கி வந்ததும் இத்தலத்து நாயகி அன்னை வேலொண் கண்ணி சந்நிதியைப் பார்க்கலாம். முருகனுக்கு வேல் கொடுத்து ஆசி வழங்கிய அன்னை இவர்.

கந்த சஷ்டி திருவிழா இந்த ஆலயத்தின் சிறப்புத் திருவிழாவாகும். மேலும் கந்தசஷ்டி முதல் நாளன்று, "வேல் வாங்கும் விழா' இத்தலத்தின் சிறப்பு நிகழ்ச்சியாகும். அச்சமயம் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்து வரும் பக்தர்களும் பெருந்திரளாகக் கூடுவர்.

முருகப்பெருமான் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின்போது முருகப்பெருமானின் பஞ்சலோக திருவுருவச் சிலையிலிருந்து முத்து முத்தாக வியர்வை பெருகும். துடைக்கத் துடைக்க வியர்வை பெருவதை நாம் கண்கூடாகக் காணலாம்.

சிக்கலில் எழுந்தருளியுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

வசிட்ட முனிவர் பிரம்ம ரிஷி என்ற பட்டம் பெற்றவர். திருமறைக்காட்டிற்கு அருகில் எட்டு சிவத்தலங்களுக்கு மத்தியில் எட்டி மரங்கள் மிகுந்த காட்டில் கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

இறைவன் காமதேனு பசுவை முனிவரின் வசதிக்காக அனுப்பி வைத்தார். பசுவின் பாலிலிருந்து கிடைத்த வெண்ணெயை லிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டார் முனிவர். வழிபாடு முடிந்ததும் அந்த லிங்கத்தை எடுக்க முயன்றபோது எடுக்கமுடியாதபடி கையில் சிக்கிக் கொண்டதாம். அதனால்தான் இததலத்திற்கு "சிக்கல்' என்று பெயர் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.

கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் சிவபெருமானுக்கு எழுபது கோயில் கட்டினான் என்பது வரலாறு. இந்த கோயில்களில் எல்லாம் இறைவன் சந்நிதி யானை செல்ல முடியாதவாறு கட்டுமலை மீதோ அல்லது படி இறங்கி அடித்தளத்திலோ அமைந்திருக்கும் என்பது தனிச் சிறப்பு.

சிக்கல் தலத்தில் உள்ள வெண்ணெய்

பிரான் திருக்கோயிலும் இம்மன்னன் எழுப்பிய ஆலயமே!

கட்டுமலை உச்சிக்குச் சில படிகள் ஏறித்தான் செல்லவேண்டும். கீழ்படிக்கு அருகில் சுந்தர விநாயகர் சந்நிதி உள்ளது. இந்த விநாயகரை வணங்கி மேலே ஏறினால் அழகான மண்டபத்தை அடையலாம். உள்ளே அருள்மிகு வெண்ணெய்பிரான் சந்நிதி அமைந்த தேவக்கோட்டம் இருக்கிறது. இந்த மணிடபத்தில்தசான் வள்ளி, தெய்வயானை சமேத சிங்கார வேலன் (உற்சவ மூர்த்தி) சந்நிதி அமைந்துள்ளது.

நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.

இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் போது இன்றைக்கும் முருகனுக்கு வியர்க்கிறது என்பது அதிசயம்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு பெற்ற ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் முருகன் சிங்காரவேலவர், வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் உற்சவம் முக்கிய நிகழ்ச்சியாகும்.

என் நெஞ்சே!..
சேல் கொண்ட கண்ணியர் சிற்றிடை தேடித் தொலையாமல் 
மால் கொண்டு மங்கையர் பூங்குழல் நோக்கித் திரியாமல்
வேல் வாங்கி நின்ற வீரனின் பூங்கழல் நோக்கு!..

வேல்நெடுங்கண்ணி அம்பிகையிடம்
முருகன் வேல் வாங்காது இருந்திருந்தால்
வெள்ளிமலையெனக் கால் கொண்டு நிற்கும்
ஐராவத ஆனையின் மீதிருக்கும் வானவர்கோன்
மனைவியின் கழுத்து நூல் வாங்கப்பட்டிருக்கும்!..

அப்படியேதும் நேர்ந்து விடாமல்
கந்தன் கடம்பன் கார்த்திகேயன் கார்மயில் வாகனன்
அமராவதியின் காவலனாகி அருட்செயல் புரிந்தான்!..

அறுமுகனாகிய அவனையே நோக்கு...
அருட்திரளாகிய அவனையே வாழ்த்து..
அதுவே நன்று.. சாலநன்று!..

- என்று புகழ்ந்துரைக்கின்றார் அருணகிரி நாதர்..

#சிக்கல் வந்த கதை:

தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த மல்லிகை வனம் என்னும் சிக்கல் தலத்திற்கு வந்து, மேற்குப் பக்கம் உள்ள தீர்த்தத்தில் தன் பாவம் தீர வேண்டுமென நினைத்து நீராடியது. காமதேனு முழுகி எழுந்த போது அதனுள் இருந்த ஆத்ம சக்தி பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அந்த குளமே இன்று "தேனு தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகிறது அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து
வெண்ணெயைத் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது எடுக்க இயலாமல் அந்த வெண்ணெய் லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்றும் காமதேனு நீராடிய தீர்த்தம் பாற்குளம் என்றும் விளங்குகிறது. இறைவன் வெண்ணெய்யப்பர், நவநீதேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சம்பந்தர். இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் தானமாகப் பெற திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து நவநீதேஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் இத்தலப் பெருமாள் "கோல வாமனப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருளுகின்றார்.

பிரசித்தி பெற்ற சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார். அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராகும். அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என பெயர் மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு:
முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார். சிவபெருமான் நேரில் தோன்றி, "போரில் வெற்றி உனக்கே சித்திக்கும்' என வரம் தந்ததோடு, "உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார். ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்' என ஆசி வழங்கினார்.

அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார். அந்த வேலைக் கொண்டு சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன். குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் "வேல்நெடுங்கண்ணி அம்மன்' என்னும் திருநாமம் பெற்றார்.

அன்னையிடம் வாங்கிய வேல் கொண்டு சூரசம்ஹாரத்தை நிகழ்த்தி போரில் வெற்றி பெற்றார் முருகப்பெருமான் என்கிறது கந்த புராணம். சூரசம்ஹாரம் முடிந்து சிக்கலில் சிங்கார வேலருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் எட்டுக்குடி திருத்தலமும் திருவாரூருக்கு அருகில் சுமார் 10 கி.மீ. தொலைவில் எண்கண் திருத்தலமும் அமைந்துள்ளன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...