🌺விழுப்புரத்திலிருந்து 17கிமீ தொலைவில் இன்று ஏமாப்பூர் என்ற ஊரில் வேதபுரீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயிலானது, பராந்தகன் காலத்தில் இவ்வூரானது திருமுனைப்பாடி நாட்டின் கீழ் "ஏமப்பேறூர்" என்றும் இறைவன் திருவாலந்துறை பரமஸ்வாமிகள் / திருவாலந்துறை ஆழ்வார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் இக்கோயில் மிக செழிப்பாய் திருவிழாக்களோடு சீரும் சிறப்புமாய் இருந்துள்ளது.
🌺 இக்கோயில் பல்லவர்காலத்திலிருந்து பராந்தகனால் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கலாம், காஞ்சிபுரம் கோனார் கோயிலில் உள்ளது போன்ற மகிஷாசூர மர்த்தினி சிற்பம் தோரணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அப்பர் வைப்பு தலமாக பாடிய "ஏமப் பேறூர்" இதுவாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
🌺முதலாம் பராந்தகன், ராஷ்டிரகூட அரசன் கன்னரதேவன், ராஜராஜன், ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் என்று பல்வேறு அரசர்களின் காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
🌺கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது, விமானம் தற்போது கட்டப்பட்டுள்ளது. பொதுவாக பராந்தகன் காலக் கோயில்களில் வேதிகையில் காணப்படும் குறுஞ்சிற்பங்கள் இங்கில்லை, கருவறை பின் கோஷ்டத்திலும் லிங்கோத்பவர் /அர்த்தநாரி/விஷ்ணுவிற்கு பதில் இங்கு உமாசகிதர் ரிஷபத்துடன் உள்ளார். பிக்ஷடனார், தட்சிணாமுர்த்தி,. பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். கருவறையில் துவாரபாலர்கள் பராந்தகன் கால கலை அமைதியில் உள்ளனர். அம்மனுக்கு தனி சன்னதியும், முருகர், சூரியன், விநாயகர், துர்கை என பல்வேறு சிற்பங்களும் உள்ளன. கருவறை லிங்கம் சுயம்பு ஆகும். முன் உள்ள ராஜகோபுரம் அடித்தளத்துடன் முடிக்கப்படாமல் உள்ளது.
🌺இங்கு பராந்தகன் 5 கல்வெட்டு, கன்னரதேவன் 2 கல்வெட்டு, சுந்தர சோழன் 1 கல்வெட்டு, ராஜராஜன் 11 கல்வெட்டு, ராஜேந்திரன் 2 கல்வெட்டு, இரண்டாம் குலோத்துங்கன் 1 கல்வெட்டு, பெயர் குறிப்பிடாத ராஜகேசரி கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
🌺 பராந்தகன் காலத்தில் பசுக்கள்,நொந்தா விளக்கெரிக்க 9 கழஞ்சு பொன் மற்றும் 96 ஆடுகளும், இவ்விறைவனுக்கு பூமாலை க்கு தோட்டம் அமைக்க நிலமும், அம்மாலை ஆறு சாண் நீளம் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
🌺கன்னர தேவன் காலத்தில் நொந்தா விளக்கெரிக்க 96 ஆடும்,45 ஆடும் கொடை அளிக்கப்பட்டுள்ளன.
🌺சுந்தர சோழன் காலத்தில் , கன்னர தேவனின் சிறப்பு பெயரான கீர்த்தி மார்த்தாண்ட மேனியன் எனும் ஒருவன் தன் மகன் மல்லி நம்பி க்காக நொந்தா விளக்கெரிக்க கொடை அளித்துள்ளான்.
🌺ராஜராஜன் கல்வெட்டில் நிலம் இறையிலியாக வழங்கப்பட்டு அதில் வரும் விளைச்சலை கொண்டு சித்திரை திருவிழா, மார்கழி திருவிழாக்கள், திருவேட்டைக்கு பெரும் திருவமுது, விளக்கெரிக்க எண்ணெய் மாலை போன்றவற்றிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
🌺அடுத்ததில், கரியமுது ,தயிரமுது , அடைக்காய் ,வெற்றிலை, திருவமுது படைக்க நிலமும்,விளக்கெரிக்க 96 ஆடும் , மற்றொண்டில் தாதியின் மகள் பரவை நங்கை என்பவள் 96 ஆடும், கார்த்திகை மாத கார்த்திகையன்று விளக்கெரிக்க நாழி நெய் கொடையளித்துள்ளார். மேலும் பலரும் ஆடுகள், நிலம், பசுக்கள் போன்றவற்றை கொடையாக அளித்துள்ளனர்.
🌺ராஜேந்திரன் காலத்தில் திருவாலம் மனைவி கம்பன் எட்டி நொந்தாவிளக்கெரிக்க 96 ஆடும் தானமளித்துள்ளார்.
🌺இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்திலிருந்து 12 வேலி நிலத்தை பிரித்து "அநபாய நல்லூர்" என்று பெயரிட்டு கொடுத்துள்ளான்.
🌺இவ்வாறு செழிப்பும் மதிப்புமாய் திருவிழாக்களோடு கலை கட்டியிருந்த இக்கோயில் தற்போது பக்தர்கள் வருகையின்று களை இழந்து போய் உள்ளது. மேலும் இங்கு நடைபெறும் திருப்பணிகளும் பொருளுதவி இன்றி தடைபட்டு சீரும் சிறப்புமாய் இருந்த இக்கோயிலை மீட்டெடுக்க, நிகழ்காலத்தில் ஒரு ராஜராஜனை எதிர் நோக்கி காத்து கொண்டுள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment