மூலவர் : ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
அம்மன் : சினேகவல்லி, அம்பாயி அம்மை
தல விருட்சம் : வில்வம்
புராண பெயர் : திருஆடானை
ஊர் : திருவாடானை
மாவட்டம் : இ ராமநாதபுரம்
ஸ்தல வரலாறு :
வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், “”வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,”என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி தினமும்.
இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை “அஜகஜக்ஷத்திரம்’ ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார். இதுவே காலப்போக்கில் “திரு’ எனும் அடைமொழியோடு “திருவாடானை’ என ஆனது.
கோயில் சிறப்புகள் :
இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தில் இருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது.
இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
ஆட்டுத் தலையும் யானை உடலுமாகச் சபிக்கப்பெற்ற வருணன் மகன் வாருணி, சாபம் நீங்கப் பெற்ற பதி.
நீலமணியை லிங்கமாக ஸ்தாபித்து, சூரியன் பேறு பெற்றான்.
சூரியன், தானே மிகுந்த ஒளி உடைவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக, நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீலமணியால் ஆவுடையார் மற்றும் லிங்கம் ஸ்தாபித்து, ரத்தினமயமான லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால், இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி கொடுக்கிறார்.
சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில், 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிராகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில், மூலவர் மற்றும் அம்பாள் மீது சூரிய ஒளி விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தின் தீர்த்தங்கள் க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவை.
இத்தல முருகப்பெருமான் ஓரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது.
பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்’ பாடியுள்ளார்.
ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.
அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்’ என்றார். அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.
கோயில் கோபுரம் மிக உயரமானதாகும். 9 நிலை 130 அடி.
திருவிழா:
வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள்,
ஆடிப்பூரத்திருவிழா 15 நாள்,
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், தி
ருவாடானை-623407.
இராமநாதபுரம் மாவட்டம்.
அமைவிடம் :
மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 100 கிலோமீட்டர் தொலைவில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடைய முடியும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment