Saturday, December 21, 2024

கண்ணாயிரமுடையார் திருக்கோயில்,குறுமாணக்குடி,

அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில்,
குறுமாணக்குடி,
கொண்டத்தூர் அஞ்சல்,
தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் 609 117. 
*திருக்கண்ணார்கோயில் இப்போது 
மக்கள் வழக்கில் குறுமாணக்குடி என்று வழங்குகிறது.  

*இறைவன் - கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர்.

*இறைவி - முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை.

*தலமரம் - சரக்கொன்றை.

*தீர்த்தம் - இந்திர தீர்த்தம் 

* இது சம்பந்தரால் பாடல் பெற்றதலம் .            

*மூலவர் கண்ணாயிரமுடையார் சுயம்புத் திருமேனி.   பெயருக்கேற்ப  மூலலிங்கத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.      

*தெற்கு நோக்கிய சந்நிதியில் அ/மி முருகுவளர்கோதை அம்பாள் நின்ற திருக்கோலம். பெயருக்கேற்ற அழகு வடிவம். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும்  வடிக்கப்பட்டுள்ளன.                 

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடுசெய்கிறார்கள். செய்தால் சிறந்த பலன் உண்டு.  

திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது. 

 *தல வரலாறு: 
தேவராஜன் இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு நாள் முனிவர் வெளியே சென்ற சமயம்  முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை நெருங்கினான். அதற்குள் முனிவர் திரும்பி வர இந்திரன் பூனை வடிவமெடுத்தான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு இந்திரனின் உடல் முழுவதும் ஆயிரம் பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். 
தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். 
இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன், சிவனை கோயில்களில் வழிபட்டு சாப விமோசனம் பெறுமாறு வழி கூறினார். 

அக்கோயில்களில் குறுமாணக்குடியும் ஒன்று. இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட அவனது உடலில் இருந்த ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறின. இறைவன் அவற்றை ஏற்றுக்கொண்டார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. 
இதனால் இத்தல இறைவன் கண்ணாயிரமுடையார் ஆனார். 

*மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட திருமால் வாமன அவதாரம் எடுத்தார். 
குறு மாண் (குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி மகாபலியிடம்  மூன்றடி மண் கேட்டார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக மன்னன் வாக்களித்தான். அப்போது வாமனர் திரிவிக்கிரம வடிவெடுத்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்தார். மூன்றாவது அடியாக மகாபலியின் முடி மீது வைத்தார். 
அந்த "குறு மாண்" வடிவில் வந்து திருமால் வழிபட்ட தலம் இக்கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்கு 
 குறுமாணக்குடி என்ற பெயர் வந்தது. 

*திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும். அவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை. அவர்கள்  மும்மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர் என்றும், பதிகப் பாடல்கள் பத்தினாலும் இறைவனை போற்றி வழிபடுபவர்கள் தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர் என்றும்  பாடியுள்ளார்.  

*குறுமாணக்குடி திருக்கண்ணார்கோயில்  மயிலாடுதுறை - சீர்காழி சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 
12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கதிராமங்கலம் எனுமிடத்திலிருந்து வலப்புறமாக சென்று சுமார் மூன்று கிலோமீட்டர்  தொலைவிலுள்ள கோயிலை அடையலாம்.                  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்...

 நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு பற்றிய பதிவுகள்  மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத...