வடுகூர் (திருவாண்டார் கோயில்)
வடுகூர் (திருவாண்டார் கோயில்)
ஆண்டார்கோயில்
இப்பெயர் பிற்கால வழக்கில் ஆண்டார் கோயில் என்றாகி இன்று மக்கள் வழக்கில் "திருவாண்டார் கோயில்" என்று வழங்குகிறது. புதுச்சேரி மாநில எல்லைக்குட்பட்டது.
விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி கோலியனூர், கண்டமங்கலம்) பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனார் தாண்டி, புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள 'திருவாண்டார் கோயிலை' அடையலாம். ஊரின் தொடக்கத்திலேயே இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் எதிரில் சாலையோரத்திலேயே கோயிலும் உள்ளது.
தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அஷ்டபைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டதலமாதலின் வடுகர் வழிபட்டது வடுகூர் என்று பெயர் பெற்றது. ஆண்டவனார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர்.
கோயிற் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று - ஆண்டார் கோயில்' என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று.
இறைவன் - வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர் நாதர்.
இறைவி - திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.
தலமரம் - வன்னி.
தீர்த்தம் - வாமதேவ தீர்த்தம்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
இறைவனின் அறுபத்து நான்கு (அஷ்டாஷ்ட) வடிவங்களுள் வடுகக்கோலமும் ஒன்றாகும். அஷ்டபைரவ மூர்த்தங்களுள் வடுக பைரவக் கோலமும் அடங்கும். அவையாவன - 1. அசிதாங்க பைரவர் 2. ருருபைரவர் 3. சண்டபைரவர் 4. குரோத பைரவர் 5. உன்மத்த பைரவர் 6. கபால பைரவர் 7. பீஷணபைரவர் 8. சம்ஹார பைரவர்.
சம்ஹார பைரவரே வடுகபைரவர் என்றழைக்கப்படுபவராவார். இக்கோயில் சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி விமானம் தஞ்சைக் கோயிலமைப்பிலுள்ளது. கோயில் தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அழகிய சுற்றுமதில்கள். கிழக்கு நோக்கிய கோயில்.
முகப்பு வாயிலைக் கடந்ததும் இடப்பால் நால்வர் சந்நதியுள்ளது. பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். தலமரம் வன்னி உள்ளது. ஆறுமுகர் திருவுருவம் மிகவும் அழகானது. உள்நுழைந்ததும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது - நின்ற திருக்« £லம். நேரே மூலவர் சந்நிதி. துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்று சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்கலாம். நாடொறும் இருகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. இதுதவிர, ஞாயிறு தோறும் அன்பர்களின் உபயமாகப் பைரவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.
"பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி
ஏலுஞ்சுடு நீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற் சோலைக் கூட மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே."
(சம்பந்தர்)
-"நேசதுற
வேற்றா வடுகூர் இதயத்தினார்க் கென்றுந்
தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே"
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. வடுகீஸ்வரர் திருக்கோயில்
திருவாண்டார் கோயில் - அஞ்சல்
(வழி) கண்டமங்கலம் - 605 102.
(புதுவை மாநிலம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment