Tuesday, December 3, 2024

வெள்ளை ஆடை அணிந்த சனி மூன்று சண்டிகேஸ்வரர் உமாமகேஸ்வரர் கோனேரிராஜபுரம்..

*வெள்ளை ஆடை அணிந்த சனி.. மூன்று சண்டிகேஸ்வரர்..!!*
 அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோனேரிராஜபுரம் என்னும் ஊரில் அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 59 கி.மீ தொலைவில் கோனேரிராஜபுரம் என்னும் ஊர் உள்ளது. கோனேரிராஜபுரத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவர் உமாமகேஸ்வரர், பூமிஸ்வரர், பூமிநாதன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இறைவி தேகசௌந்தரி, அங்களநாயகி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். மண்டபத்தில் வலப்புறம் பிரம்ம லிங்கம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் சன்னதி அமைந்துள்ளது.

இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூன்று சண்டிகேஸ்வரர் காட்சியளிக்கின்றனர்.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும்.
மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

வேறென்ன சிறப்பு?

இத்தல மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. மிக பிரம்மாண்டமாக நடமாடும் இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது மிக சிறப்பம்சமாகும்.

திரிபுரத்தை எரித்த திரிபுரசம்ஹார மூர்த்தி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்தில் துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். திருச்சுற்றில் மூன்று லிங்கங்கள், பைரவர், அக்னீஸ்வரர், சனத்குமாரலிங்கம், சம்பகாரண்யேஸ்வரர், சூரியன், சந்திரன் மற்றும் துர்க்கை உள்ளிட்டோர் காட்சி தருகின்றனர்.

கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.

வைகாசி விசாகம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகியவை இத்தலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

குழந்தை பாக்கியம், திருமண தடை, உடல்நிலை பாதிப்பு, வியாபாரத்தில் பிரச்சனை, படிப்பில் மந்தம், ஞாபக சக்தி குறைவு ஆகியவற்றிற்காக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வீடு கட்டுவதில் சிக்கல் மற்றும் நிலப்பிரச்சனை ஆகியவற்றிற்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். க்ஷ

No comments:

Post a Comment

Followers

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள்

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் ப...