Sunday, December 29, 2024

சீதா தேவியால் சிரஞ்சீவி’ என்ற ஆசி பெற்றவர் அனுமன்..

அனுமன் ஜெயந்தி. 
⚛️அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தையும் அனுமன் ஒன்றாக அமையப் பெற்றவர். சீதா தேவியால் ‘சிரஞ்சீவி’ என்ற ஆசி பெற்றவர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப் படுகிறது. அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர்.

⚛️தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தியாக அனைத்து அனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர்.

🔯“இராமா” என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். இவர் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதும் நம்பிக்கையாகும்.

⚛️அனுமன் பெயர் காரணம்:

🔯சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்க் காரணம் உண்டு.

⚛️அனுமனுக்கு வேறு பெயர்கள்:

தமிழ்நாட்டில் அனுமன், அனுமார், ஆஞ்சநேயர் என்றும், கர்நாடகத்தில் அனுமந்தய்யா என்றும் ஆந்திரத்தில் ஆஞ்சநேயலு, சஞ்சீவய்யா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். மகாராஷ்டிரத்தில் மாருதி, மஹாவீர் என்றும், உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் இடங்களில் பஜ்ரங்பலி என்றும் அழைக்கப்படுகிறார்.

🔯அனுமன் ஜெயந்தி விரதம்:

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து இராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் இராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். வசதி இருந்தால் வடை மாலை சாத்தியும், வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வழிபடலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யலாம்.

🔯அன்று வீட்டில் ஆஞ்சநேயர் படம் வைத்து அஷ்டோத்திரங்கள் சொல்லி பூஜை செய்து, வெண்ணெய், உளுந்துவடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம். அன்று துளசிதாசரின் அனுமன் சாலிஸா, சுந்தரகாண்டம் பாராயணம் செய்தும், ஸ்ரீராம நாமம் ஜெபித்தும், அனுமன் காயத்ரி சொல்லியும் அவரது அருளைப் பெறலாம். ஸ்ரீராமஜெயம் என எழுதுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.

⚛️அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் நலம் பெருகும்.

🔯அனுமன் காயத்ரி:

⚛️‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்நோ
ஹனுமன் ப்ரசோதயாத்’
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.

🔯அனுமனுக்கு மாலை அணிவிப்பதின் பலன்:

🔯அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ஶ்ரீ இராம பிரான் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.

🔯அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதால் நாம் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.

🔯அனுமனுக்கு வடை மாலை அணிவித்து தானம் செய்தால் கிரக தோஷம் நீங்கி செல்வ பாக்கியம் பெறலாம்.

🔯அனுமனுக்கு எலுமிச்சம்பழம் மாலை சாத்துவதால் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறலாம்.

🔯வெண்ணெய் சாத்துதல்:

🔯இராம, இராவண யுத்தத்தின் போது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு செல்லும் போது இராவணனின் சரமாரியாய் தொடுக்கப்பட்ட அம்பால் அனுமான் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் வந்துள்ளது. வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உள்ளதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்பதும் ஐதீகம்.

🔯சனி பகவான் பாதிப்பு நீங்க:

🔯எல்லோரையும் விதிப்படி கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை அனுமன் கலங்கச் செய்தார்.

🔯இராம பிரான் சீதாபிராட்டியாரை மீட்க இராவணனுடன் போரிடுவதற்காக இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது சனி பகவான் அனுமனிடம் வந்து “உன்னை நான் விதிப்படி இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார். அதற்கு அனுமனும் “கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்வது தவறு, வேண்டுமென்றால் எனது தலை மேல் உட்கார்ந்து கொள்” என்றார். சனி பகவானும் தலை மேல் ஏறி அமர்ந்தார். அனுமன் கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றி தனது பணியினை தொடர்ந்தார். பாரம் தாங்க முடியாத சனிபகவான் அலறினார். “சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். இரண்டரை மணி நேரம் கழித்து தலையிலிருந்து இறங்கிய சனிபகவான் அனுமனிடம் இனி “இராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் தொடுவதில்லை” என கூறிவிட்டு சனிபகவான் அகன்றார்.

🔯அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வர பகவானின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

🔯அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:

🔯ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார். அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டும் எவரிடம் இருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டே... “ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்” என்றார் அன்பர். “வாயு புத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள். “ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார். பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?” என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர். பெரியவா ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பதில் சொல்ல ஆரம்பித்தார்...

🔯“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று அந்தக் குழந்தைக்கு சந்திரனை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள், அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். குழந்தைகளின் அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், இராமதூதனான அனுமனுக்கு பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயுபுத்திரன் ஆன அவர் வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. ராகு பகவான் அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த பந்தயத்தில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

🔯இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை என்றும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். உளுந்துப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் தயாரித்த வடைகளை மாலை ஆக்கி அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது. இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து வடைகள் செய்து அவைகளை பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் உண்டு. வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு தயாராகி வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்கிறார்கள். இனிப்பு விரும்பிகள் ஆன அவர்கள் உளுந்து மற்றும் சர்க்கரையால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள். எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி வளைந்த உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு சிரித்தார் மஹா பெரியவா. பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

⚛️அனுமன் ஜெயந்தி நன்னாளில் இராமநாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கெல்லாம் அனுமன் வந்து அருள் புரிவார். எனவே அவரை இராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள் பெறுவோம்

ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம்🙏🙏🙏

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரியனார் திருக்கோவில் திருமங்கலக்குடி. சூரிய பகவானுக்கு உகந்த 108 போற்றி

 அருள்மிகு சூரியனார் திருக்கோவில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர் நவகிரக தலங்களில் (Navagraha temples) முதன்மையானதாக கருதப்படுவது அர...