Sunday, December 8, 2024

சேரன்மாதேவி அம்மைநாதர் திருக்கோவில் திருநெல்வேலி..


தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரோமச மகரிஷியால் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் ஒன்றான #திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#சேரன்மகாதேவி என்ற #சேரன்மாதேவி
#அம்மைநாதர்_சுவாமி (அம்மநாதர்,கைலாசநாதர்)
#ஆவுடைநாயகி_அம்மன் 
(கோமதியம்பாள்)
திருக்கோவில் வரலாறு:

 
திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம். இங்கு ஆவுடைநாயகி உடனாய அம்மைநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம். இங்கு ஆவுடைநாயகி உடனாய அம்மைநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது நவ கயிலாயத்தில் ஒன்றாகவும், சந்திரனுக்குரிய தலமாகவும் போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் ‘அம்மைநாதர்’ என்ற பெயரில் இறைவனும், ‘ஆவுடைநாயகி’ என்ற பெயரில் இறைவியும் அருள்பாலித்து வருகிறார்கள். சிவ தரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அங்கு ஒன்பது மலர்களை, நதியில் விட்டார். அந்த ஒன்பது மலர்களும் ஒதுங்கிய கரையினில்தான் நவ கயிலாயங்கள் எனப்படும் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றின் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடத்தில் உரோமச முனிவர், லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதுதான் சேரன்மாதேவி திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.

பிற்காலத்தில் உரோமச முனிவர் வழிபட்ட சிவலிங்கமானது, ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இந்தப் பகுதி யில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, அவர்கள் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். ‘இந்த லிங்கம், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே’ என்று ஆதங்கப்பட்ட அந்த சிவ பக்தைகள், சிவபெரு மானுக்கு கோவில் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் அதற்கான பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமிக்கத் தொடங்கினர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், அடியார் வடிவில் அந்தப் பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அடியவர், “மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்” என்று எழுந்தார்.
சகோதரிகள் பதறிப்போய் அவசர அவசரமாக விளக்கைத் தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து, அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அடியார் உருவத்தில் இருந்த சிவபெருமான், உணவருந்திய பின் தன்னுடைய சுய உருவத்தை, அந்த சகோதரிகளுக்கு காண்பித்து அருளாசி கூறி மறைந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர். அரிசி வியாபாரம் செய்பவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, அரிசி தானம், அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்கிறார்கள். மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சுவாமி: அம்மநாதர் (அம்மைநாதர்,கைலாசநாதர்)

அம்மன் :ஆவுடையம்மை (கோமதியம்பாள்)

திருக்கோவில் விருட்சம்: ஆல மரம்,பலாமரம்

தீர்த்தம்: தாமிரபரணி - வியாச தீர்த்த கட்டம்.

#தல வரலாறு :

உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் இரண்டாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் சேரன்மகாதேவி. உரோமச மகரிஷி இங்கு வந்தபோது அங்கிருந்த ஆலமரத்தின்  அடியில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.  

முன்பொரு காலத்தில் இந்தப் பகுதியில்  இரண்டு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் உரோமச மகரிஷி வணங்கிய சிவாலயத்தை  விரிவுபடுத்த விரும்பினர். ஆனால் அவர்களோ நெல் குத்தும் தொழில் செய்து வந்ததால் கோவில் கட்டுவதற்கான பொருள் ஈட்டுவது கடினமாக இருந்தது. கோவில் கட்டுவதற்காகக் கடினமாக உழைத்தும் சகோதரிகளால் கோவில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்க முடியவில்லை. எனவே அவர்கள் தங்களுக்கு உதவுமாறு சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான், ஒரு நாள் அந்தணர் ரூபம் எடுத்துச் சகோதரிகளிடம் உணவு வேண்டி வந்தார். சகோதரிகள் அவர்கள் சாப்பிட வைத்திருந்த உணவை அந்தணருக்கு அன்புடன் பரிமாறி உபசரித்தார்கள். பசி தீர்ந்த அந்தணர் அவர்களிடம் "வேண்டும் வரம் கேளுங்கள்" என்றார். சகோதரிகளோ அவர்களுக்கென்று ஏதும் கேட்காமல் சிவாலயம் எழுப்பத் தேவையான பொருளுதவி வேண்டும் என்று கேட்டனர். அவர்களின் தன்னலமில்லாத எண்ணத்தைக் கண்டு மகிழ்ந்த, அந்தணர் ரூபத்தில் இருந்த சிவபெருமான், கேட்ட வரத்தைக் கொடுத்தார். அன்று முதல் அவர்கள் இல்லத்தில் செல்வங்கள் பெறுக தொடங்கின. அதனை கொண்டு இந்தத் திருக்கோவிலை கட்டியெழுப்பியதாக இத்தல புராணம் கூறுகிறது. இதனை உணர்த்தும் வகையில் இரண்டு பெண்கள் நெல் குத்துவது போன்ற சிற்பங்கள் இங்குள்ள தூண்களில் காணப்படுகின்றன.

முக்கிய தீர்த்தமான வியாச தீர்த்த கட்டத்தில் மார்கழி மாதம் வளர்பிறை சப்தமியில் அதிகாலையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமும் செய்வதாகவும் இந்த வேலையில் மூழ்கி தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து புண்ணிய நதிகளும் நீராடிய பலன் கிட்டும் என்பது ஐதீகம்

இந்த நதியில் தேவதைகள் கூடும் நேரம் அதிகாலை 3 மணி என கணக்கிடப்படுகிறது. ஆற்றுக் கரையில் ரண விமோசன பாறை என்ற பாறை இருக்கிறது இந்த பாறை கோயிலுக்கும் வியாசர் தீர்த்தத்துக்கும் இடையே உள்ளது. 

இந்த பாறையின் நடுவில் தாமிரபரணையில் 41 நாட்கள் மூழ்கி எழுந்து இறைவனை வழிபட்டால் ஒரு மனிதனுக்கு தீராத உடல் வியாதி மற்றும் வலி இருந்தால் நீங்கிவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஒரு மண்டப தூணில் ரோமச முனிவர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தூணை சுற்றி சிறுகோயில் போல் கட்டி உள்ளனர். தெற்கு நோக்கி இரு பெண்கள் உடல் உலக்கையுடன் நெல் குத்தும் காட்சியும் முறம் கையில் உள்ள காட்சியும் இடம்பெறுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானை கைலாயத்து ஆழ்வார் என்றும் கைலாயம் உடையார் என்றும் பூஜித்து வருகின்றனர்.

 
#சேரன்மகாதேவி பெயர்க் காரணம்:

முற்காலத்தில் இந்தப் பகுதி சேர மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அப்போது இங்கு ஆட்சி செய்த சேர மன்னன் தன்  மகளான மகாதேவியின் பெயரை இந்த பகுதிக்குச் சூட்டியதால் மகாதேவி மங்கலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அது சேரன்மகாதேவியென வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுவாமி அம்மநாதர்:

கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி அம்மநாதர் சுயம்பு லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ சந்தனக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

ஆவுடையம்மை:

கிழக்கு நோக்கிய தனி கருவறையில் ஆவுடையம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும், நின்ற கோலத்தில், புன்சிரிப்புடன் காட்சித் தருகிறாள்.

திருக்கோவில் அமைப்பு:

தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் வயல்வெளிகள் நிறைந்த இயற்கை சூழலில்  அமையப்பெற்றுள்ளது  இந்த கோவில். இங்கு சுவாமிக்கு தனி விமானத்துடனும், அம்மைக்கு தனி விமானத்துடனும் சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. இது தவிர உள்ளே  நந்தி, பலி பீடம், கொடி மரம் போன்றவையும் வரிசையாக உள்ளது. மேலும் பரிவார மூர்த்திகளாக விநாயகர், சுப்பிரமணியர், அதிகார நந்தி, சூரியன், சந்திரன், தக்ஷிணாமூர்த்தி, கஜலக்ஷ்மி, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர்  ஆகியோர்கள் காட்சிதருகிறார்கள். தெற்கு திசை நோயாக்கிய தனி சந்நிதியில் ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட  நடராஜர், சிவகாமி அம்மை, காரைக்கால் அம்மை ஆகியோர் காட்சிதருகிறார்கள்.

திருக்கோவில் சிறப்புக்கள்:

இங்குள்ள மூலவர் லிங்கம்  சுயம்பு திருமேனி ஆகும்.
இங்குள்ள ஈசனை வழிபட்டால் பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிப்பாக நடைபெற வேண்டி அரிசி தானம் மற்றும்  அன்னதானம் செய்து வழிபடுகிறார்கள்.
இங்குள்ள ஆவுடையம்மைக்கு மாதுளம் பழ சாறால் அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.
இங்குள்ள நடராஜர் ஒரே  கல்லில்  வடிக்கப்பட்ட திருமேனி.

இந்தக் கோவிலின் மண்டபத் தூணில், சிவ பூஜை செய்த உரோமச முனிவரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், வடக்குபுறமாக ஒரு தூணில் உள்ளது. இங்குள்ள கோவில் கல்வெட்டுகளில் இந்த ஊர், ‘சேரன்மகாதேவி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளாகும். இந்தக் கோவிலை நந்தனார் தரிசித்திருக்கிறார். அதற்கு அடையாளமாக அவரது சிற்பம், கொடிமரத்தின் கீழ் பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரத்தின் அருகில் நின்று, விலகிய நந்தியையும், சிவபெருமானையும் ஒருசேர தரிசிக்கலாம். 

முக்கிய திருவிழாக்கள்:

மாசி மாத சிவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், ஐப்பசி கந்த ஷஷ்டி,  மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

#அமைவிடம்:

திருநெல்வேலி நகரிலிருந்து சுமார் 22 கி. மீ தொலைவில் உள்ளது சேரன்மகாதேவி அம்மநாதர் கோவில். இங்கு செல்லத் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நிறைய நகரப் பேருந்துகளின் வசதி உள்ளது. சேரன்மகாதேவி ஊருக்குள் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதியின் தென்கரையில் அமையப்பெற்றுள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

ஏகாதசிகளில் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி மகிமை !!

|| வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் || ஏகாதசிகளில் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி மகிமை !! சிவபெருமான் விரதங்களில் மிக உயர்ந்த மற்றும் அதி...