பட்டுக்கோட்டை நாடியம்மன்
பங்குனி மாதத்தில் இந்த அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா தொடங்குகிறது. இது சித்திரை மாதத்திலும் தொடர்ந்து வரகரிசி மாலையுடன் உத்ஸவம் முடிவடைகிறது. திருவிழா காலங்களில் அம்மன் தனது ஆலயத்தை விட்டுக் குடிபெயர்ந்து பெரிய கடைத்தெருவின் நடுவிலுள்ள மண்டகப்படி எனும் மண்டபத்தில் குடியேறி, விடையேற்றி விழா முடிந்த பிறகுதான் ஆலயம் திரும்புகிறாள். திருவிழா அனைத்து நாட்களிலும் இரவில் அம்மன் நகர்வலம் வருகிறாள். அந்தக் காலத்தில் நாதசுர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை முதல் அனைத்து பெரிய வித்வான்களும் இரவில் அம்மன் புறப்பாட்டின்போது நடந்து வந்தே விடிய விடிய நாதசுரம் வாசித்த வரலாறு உண்டு. ஆங்காங்கே இவர்களுக்கு பெஞ்சுகளைக் கொண்டு மேடை அமைக்கப்பட்டு தொடர்ந்து பலமணி நேரம் வாசிப்பதும் உண்டு. வெண்ணைத்தாழி, தேரோட்டம் முதலான விசேஷங்களும் திருவிழா நாட்களில் உண்டு. வெண்ணைத்தாழியின் போது அம்மன் ஸ்ரீ கிருஷ்ணனைப் போல, வெண்ணைப் பானையை அணைத்துக் கொண்ட கோலத்தில் வீதிவலம் வருகையில், அவ்வூரிலுள்ளோர் வேண்டுதலையொட்டி அம்மனுக்குப் பட்டுத் துணிகளை வாங்கி அணிவிப்பார்கள். தினமும் மாலை வேளைகளில் மண்டகப்படி மண்டபத்தில் இன்னிசை விருந்தும் நடைபெறும்.
அம்மனின் ஐம்பொன் உற்சவ விக்கிரகம் கோட்டை சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருவிழா காலங்களில் மட்டும் மண்டகப்படிக்குக் கொண்டு வரப்படும். இந்த அம்மனின் விழாவையொட்டி, அம்மன் விக்கிரகம் கோட்டை பெருமாள் கோயிலுக்குச் சென்று சீர்வரிசை பெற்று வரும் நிகழ்ச்சியும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சியையும், பெருமாள் தங்கைக்குச் சீர்வரிசை செய்யும் காட்சியும் நம் நினைவுக்கு வரும்.
நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவளாக இந்த அம்மன் விளங்குவதால், பக்தர்கள் இவளை வணங்காமல் இவ்வூரில் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. இவ்வூரில் வாழும் மக்கள் ஆண்டுதோறும், இவ்வாலயத் திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள், நாடி வந்தவர்களை காக்கும் நாடியம்மன் மக்களுக்கு நல்லருள் வழங்கி பாதுகாத்து வரவேண்டுமென்று நாமும்
மூலவர்:
இக்கோயிலில் மூலவராக நாடியம்மன் உள்ளார். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மன் உள்ளது.
ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருவிழாக் காலத்தில் பதுமைகள் பூச்சொரியும் நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறும்.
வரலாறு :
மன்னர் சரபோசி வேட்டையாட வந்தபோது ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவரைத் தொடர்ந்து சென்றபோது அப்பெண் ஒரு புதரில் மாயமாக மறைய அங்கு இரண்டரையடி உயரத்தில் கற்சிலையைக் கண்டதாகவும், கோட்டை சிவன் கோயில் குருமார்களை அழைத்து அங்கேயே அம்மனுக்கு ஒரு கோயில் அமைத்ததாகக் கூறுவர்.
மேலும் கோவில் பின்புறம் ஸ்ரீ வீரனார் கோவில் உள்ளது.
அமைவிடம் :
இக்கோயில் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment