Sunday, January 5, 2025

வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை தஞ்சாவூர்

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், 
திட்டை-613003       தஞ்சாவூர்  மாவட்டம்.   
*மூலவர்:
வசிஷ்டேஸ்வரர்

*தாயார்:
உலகநாயகியம்மை

*தல விருட்சம்:
முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி

*தீர்த்தம்:
சக்கர தீர்த்தம். 

*பாடல் பெற்ற தலம்:
தேவாரம்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர்.   

*பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படாமல்  திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள்.                   
*திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பஞ்சலிங்கத் தலமாக விளங்குகிறது. இங்கு நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் அமைந்து  நடுவில், மூலவராக வசிஷ்டேஸ்வரர் அருள்கிறார்.      

*ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள்  இறைவன் மீதுபடுகிறது.     

*கருவறை விமானத்தின் உட்புறத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது.  இந்த சந்திர காந்தக்கல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழச்செய்கிறது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை  இறைவன் மீது விழுமாறு செய்கிறார்.    
*அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். 

*அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில்         வசிஷ்டேஸ்வரருக்கு  இணையாக உயர்ந்த பீடத்தில்  உள்ளார் . மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை "லோகநாயகி" என்றும், சகல மங்களங்களையும் தருவதால் "மங்களாம்பிகை" என்றும்  அழைக்கிறார்கள்.                           

*கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்’ என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான்.  மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.                

*அம்மன் சந்நிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இங்கு நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள். 

*வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சந்நிதிக்கு இடையே குரு பகவான் ராஜகுருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.             நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குருபகவான்.  மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் "குரு பார்க்க கோடி நன்மை" என்ற பழமொழி ஏற்பட்டது.      நவகிரகங்களில் சுபகாரகராக, நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருக்கும் குருபகவான் வியாழன், என்றும் பிரகஸ்பதி என்றும் வணங்கப்படுபவர்.  
*குரு பகவானை வேண்டினால் ராஜயோகம் கிடைக்கும். மேலும் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும்.  இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.         

*குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன.

(தெற்குப் பிரகாரத்தில் அருள்புரியும் தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தி  "ஞான குரு" ஆவார். நவகிரகத்தில்  உள்ள குரு தேவகுரு ஆவார். இருவரும் வேறு வேறு. குருபெயர்ச்சி அன்று இடம் பெயர்பவர் நவகிரகத்தில் உள்ள குருபகவானே)                         

*தேவர்களை துன்புறுத்திய  மது, கைடவர் என்ற இரு அரக்கர்களை  எதிர்த்து  மகாவிஷ்ணு போர் புரிந்தபோது அவர் தனது  பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார்.  மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட  ‘சக்கர தீர்த்தக்குளம்’ கோயிலின் எதிரே உள்ளது. 

அமைவிடம்: தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளி அக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.     


                              ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் அப்படி என்ன விசேஷம்?

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நட...