Monday, February 17, 2025

காவிரி ஆற்றில் பெட்டியில் மிதந்து வந்தஅன்னை காளி.


காவிரி ஆற்றில் பெட்டியில் மிதந்து வந்து அன்னை காளி
குடிகொண்ட இடமான, 
வருடத்தில் ஒருமுறை மட்டுமே பெட்டிக்குள் இருந்து வெளியே வந்து காட்சி தரும் தலமான
#தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 
#கும்பகோணம் அருகில் உள்ள #கொரநாட்டுக்கருப்பூர் (#திருப்பாடலவனம்)
சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 
#பெட்டி_காளியம்மன்
(#சுந்தர_மஹா_காளியம்மன்) 
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 
கொரநாட்டுக் கருப்பூர் `திருப்பாடலவனம்' என்றே முன்னர் அழைக்கப்பட்டது. பாதிரி வனமாக இருந்ததால் இது பாடலவனம் என்றானது. கும்பகோணத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கொரநாட்டு கருப்பூர். இங்கேதான் அபிராமியம்மை சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. 
பிரம்மன் இங்கே சிவலிங்கப் பூஜை செய்து, தோஷம் நீங்கிச் சிவனருள் பெற்றார். குபேரனும் இங்கு வழிபட்டே செல்வத்துக்கு அதிபதியானார். இந்திரன் இங்கு தவமிருந்து சிவ-பார்வதி தரிசனம் பெற்றான். இதனால் இந்தக் கோயில் தீர்த்தக்குளத்தின் படித்துறையில் இந்திரன் மற்றும் ஐராவத யானையின் விக்கிரகத் திருமேனியை இன்றைக்கும் காணலாம்.

"பெட்டியில் நீ வந்தாய்; பொய்யாத காளியம்மா
வெட்டி கெலித்து வரும் யமனையும்தான் நீ ஜெயிச்ச

கோத்தமுத்து நீயிறக்கும் கொம்பனைய மாரிமுத்தே

மாரியென்றால் மழைபொழியும்; தேவியென்றால் தேன்சொரியும்

காளி நீ என்றால் கஷ்டமெல்லாம் விலகிவிடும்

தாயே மனம்பொறுத்து தயவாகக் காருமம்மா

தயிர்ப் பள்ளயம் போட்டுன்னை தயவாகக் கும்பிடுறோம்!"

கொரநாட்டுக்கருப்பூர் என்னுமிடத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலாகும்.
இவ்வூரில் தலவிருட்சமான பாதிரி மரங்கள் அதிகமாக இருந்ததால் திருப்பாடலவனம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. 

கொரநாட்டுக் கருப்பூர் கிராமத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் அமைந்துள்ளன. சுந்தரேசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயமாகும். இந்த சிவாலயத்தினை திருப்பாடலவனம் சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைப்பர். புராணக் காலத்தில் கொரநாட்டுக் கருப்பூர் என்ற இவ்வூர் திருப்பாடலவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இக்கோயில் வளாகத்தில் மூலவர் கருவறைக்கு இடப்புறம் உள்ள பகுதியில் பெட்டி காளியம்மன் கோயில் என்றழைக்கப்படும் சுந்தரமகாகாளியின் சன்னதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

மறக்கருணையோடு தீவினைகளையும், தீய சக்திகளையெல்லாம் சுட்டெரிக்கும், இந்த அம்பிகை, அறக் கருணையோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறாள்.

இந்த அம்பிகை இந்தத் தலத்தில் குடியேறிய கதை சிலிர்ப்பானது.
‘‘சுந்தரரால் பாடப் பெற்ற வைப்புத் தலம் இது; புராணப் பெயர் ‘திருப்பாடலவனம்’. முற்காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது. இப்போதும் கோயிலின் தல விருட்சம் பாதிரி மரம்தான். மிகப் பழைமையான கோயில். குபேரன், சூரியன், சுரதன் போன்றோர் வந்து வழிபட்ட தலம் இது.

ராஜகோபுர வாயிலில் இடம்பெற்றிருக்கும் சங்கநிதி, பதும நிதி சிலைகள், கோயிலுக்கே எதிரேயுள்ள பிரம்மதீர்த்தத்தில் குபேரன் தன் படைகளுடன் வந்து, தீர்த்தமாடியதைச் சித்திரிக்கும் சிற்பம் ஆகியன குபேரன் இங்கே வழிபட்டதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்தக் கோயிலை, மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புனரமைத்துக் கட்டியதாகச் சொல்கிறார்கள். ஐந்துநிலை ராஜகோபுரம் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் திகழும் ஆலயத்தில் அனைத்து பரிவார தெய்வங்களையும் அதிகார நந்தியையும் தரிசிக்கலாம். மூலவர் ஸ்ரீசுந்தரேஸ்வரர், அம்பிகை ஸ்ரீஅபிராமி ஆகியோரது சந்நிதிகளுக்கு இடையே ஈசான பாகத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீபெட்டிக் காளியம்மன் சந்நிதி. காளிதேவியின் சிரம் வடக்கு நோக்கி இருக்குமாறு பெட்டி வைக்கப்பட்டுள்ளது!

பெட்டிக்குள் இருப்பதால், பெட்டிக் காளியம்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் இருப்பதால், ‘சுந்தர மகா காளியம்மன்’ என்பதே இந்த அம்மனின் திருப்பெயர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், ஊரின் தென்புறம் உள்ள காவிரி ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டி, இங்கே கருப்பூரில் கரை ஒதுங்கியது. திறந்து பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டன. பெட்டிக்குள்ளே எட்டுக் கரங்கள் கொண்ட அஷ்ட புஜ காளியின் திருவடிவம்... அதுவும் தலை முதல் இடுப்பு வரை உள்ள உருவம் படுத்த நிலையில் இருந்தது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்றெல்லாம் எண்ணி மக்கள் குழம்பிய வேளையில், அங்கிருந்த சிறு பெண்ணின் மேல் சாமி வந்தது. காளிதேவியின் மகிமைகளைக் கூறியதுடன், அவளை எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்றும் அருள்வாக்கு சொன்னாள் அந்தச் சிறுமி.

மலையாளமும் தமிழும் கலந்து, அந்தச் சிறுமி கூறிய அருள்வாக்குப் படி, பெட்டியை ஓர் ஓலைக் குடிசைக்குள் வைத்து, தயிர்சாதம் பள்ளயம் (படையல்) போட்டு வணங்கி வந்தனர் மக்கள். இந்த நிலையில், திடீரென ஒருநாள் அந்தக் குடிசை தீப்பற்றி எரிந்தது. அம்மன் இருந்த பெட்டியைக் காப்பாற்றிய மக்கள், மேற்கொண்டு அந்தப் பெட்டியை எங்கே வைப்பது என்று குழம்பியபோது, ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனையின்படி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இப்போதிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டது.

அன்றுமுதல், இந்தக் காளிதேவிக்கு பள்ளயம் போட்டு, பூஜைகள் செய்து வருகிறோம். சர்க்கரைப் பொங்கல், உப்பு இல்லாத தயிர் சாதம் ஆகியவற்றை மட்டுமே அம்மனுக்குப் படைப்போம். உப்பு சேர்த்த எந்தப் பொருளையும் நைவேத்தியம் செய்வது இல்லை. பெட்டியைத் திறப்பதற்கு முன்னர், உக்கிரக் காளியைக் குளிர்விக்கும் பொருட்டு, குளிர்ச்சி தரும் தயிர் பள்ளயம் போடப்படுகிறது. பசுந்தயிர் கலந்த சாதத்தில் வெங்காயம் நறுக்கிச் சேர்த்து பள்ளயம் போடப்படும்.

பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சந்நிதியில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மட்டுமே வழங்கப்படும். வழக்கமாக அம்மன் சந்நிதிகளில் தரப்படுவது போன்று குங்குமம், புஷ்பம், எலுமிச்சம்பழம் ஆகியன இங்கே வழங்கப்படுவது இல்லை.’’

அதேபோல வேறுசில கட்டுப்பாடுகளும் உண்டு இந்தக் காளியைத் தரிசிப்பதற்கு. கர்ப்பிணிகள், எண்ணெய் ஸ்நானம் செய்தவர்கள், முகச்சவரம் செய்தவர்கள் ஆகியோர் காளியைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், படையல் பூஜை செய்யப்பட்ட பிறகு பெட்டி திறக்கப் படுகிறது. மற்ற நாள்களில் நித்தியப்படி நடக்கும் நான்கு கால பூஜைகளின் போதும்கூட பெட்டி திறக்கப்படுவதில்லை.

தல வரலாறு:

இக்காளியைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் வெள்ளம் வந்தபோது ஒரு பெட்டி கரையில் ஒதுங்கியது. அதில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு காளியின் பாதி சிலைப்பகுதி இருந்தது. அச்சிலையை என்ன செய்வது என ஊர் மக்கள் சிந்தித்தபோது ஒரு சிறுமி மேல் அருள் வந்து தான் திருப்பாடலவனம் வந்ததைப் பற்றியும், தன்னை எப்படிப் பூஜை செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூறியது. பின்னர் மக்கள் காளியை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி, ஒரு ஓலைக் குடிசையில் வைத்து பூஜை செய்தனர். அந்தக் குடிசை ஒரு நாள் திடீரென தீப்பிடித்த போது மக்கள் அந்தப் பெட்டியைக் காப்பாற்றி, பின்னர் சிவன் கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு நடத்தத் தொடங்கினர். 

காளியின் உருவ அமைப்பு:

இடுப்புக்கு மேல் உருவத்துடன் எட்டு கரங்கள் கொண்ட இக்காளியின் வலது நான்கு கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளியும், இடது நான்கு கரங்களில் பாசம், கேடயம், மணி மற்றும் கபாலமும் ஏந்தியும் காணப்படுகின்றன.கண்களில் சற்றே கோபத்துடனும், இரண்டு சிறிய கோரைப் பற்களுடன் காணப்படுகிறது.  காளியின் கோபம் தணிவதற்காக நெற்றியில் புனுகு, சவ்வாது, விபூதி, சந்தனம் ஆகியவற்றைப் பூசுகின்றனர். காளிக்குச் சாத்தப்படும் பூ, குங்குமம் போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் காளியின் பெட்டிக்குப் படையலிட்டுப் பூஜைகள் செய்யப்படுகின்றன. 

பல்லக்கு வீதியுலா:

பல்லக்குத் திருவிழா நடப்பதற்கு முன்பாக பள்ளய நைவேத்யம் எனப்படுகின்ற ஒன்பது இலைகளில் அன்னம் முதலியன வைத்துப் படைத்தல் நடைபெறும். பின்னர் பெட்டியைத் திறப்பர். திருவிழாக் காலங்களில் மட்டுமே பெட்டியை திறக்கின்றனர். காளி, பெட்டியில் இருந்தபடியே பல்லக்கில் உலா வருவாள். இதனைக் காண அருகிலுள்ள ஊர்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவர். காளியின் உத்தரவு பெற்றபின்னர்தான் காளியம்மனின் பல்லக்கு வீதியுலா நடத்தப்படும் என்பது தொன் நம்பிக்கை. அதன்படி, காளியம்மனின் உத்தரவு கிடைக்கப்பெற்று, 29.5.2015 வெள்ளிக்கிழமை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பல்லக்கு வீதியுலா நடத்தப்பட்டது. 2.30 மணியளவில் வீதியுலா தொடங்கியது. உலாவின்போது காளி முன்னோக்கியும், பின்னோக்கியும் ஓடும். அதற்கேற்றவாறு பல்லக்கைத் தூக்கிச் செல்லும் இளைஞர்களும் காளியின் விருப்பப்படி ஓடி காளியை மனம் குளிர வைத்தனர். 

ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் திருவிழா நேரங்களில் மட்டும் காளியை வெளியே எடுக்கிறார்கள். அலங்கரித்த காளி அம்மனை பல்லக்கில் வைத்து, சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்போதும் காளியின் உத்தரவு கிடைத்தபிறகே பல்லக்கு ஊர்வலம் நடக்கும். மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளின் வழியே அம்ம னின் பல்லக்கு முன்னும் பின்னுமாக ஆடியபடி உலா வருவது, காணக் கண்கொள்ளாத காட்சி! ‘பெட்டிக் காளியம்மன் பல்லக்குத் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுப்பட்டு ஊர்க் காரர்களும் திரளாக வந்திருந்து காளியைக் கண்ணாரக் கண்டு நெஞ்சார வணங்கிச் செல்கின்றனர்.

திருமணத் தடை, குழந்தைப்பேறின்மை, தீராக் கடன், சொத்துப் பிரச்னை போன்ற கஷ்டங்களைத் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ் கிறாள் பெட்டிக்காளியம்மன். பிரச்னையால் தவிக்கும் பக்தர்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து பெட்டிக்காளியம்மனைத் தரிசித்துச் சென்றால், விரைவில் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். ராகு கால வேளையில் இந்த அம்மனைத் தரிசித்து வழிபட்டால் ராகு - கேது தோஷம் உட்பட சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

வலப்புறத்து திருக்கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளி திகழ, இடப்புறத்தின் கரங்களில் பாசம், கேடயம், கபாலம் மற்றும் மணி ஏந்தியபடி, ஆக்ரோஷத்துடன் திகழ்கிறாள் இந்த அஷ்டபுஜ காளி அன்னை. என்றாலும், அபயம் என்று வந்தவர் களை ஆதரித்து அரவணைக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள். நாமும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று சிவ-சக்தியின் அருளோடு காளியம்மையின் திருவருளையும் பெற்றுவருவோம்.

கும்பகோணத்தி லிருந்து சென்னை செல்லும் சாலையில், கும்பகோணத்தி லிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர்.

நடை திறக்கும் நேரம்: 

காலை 6 முதல் மதியம் 12 மணி வரை; மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சோழீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை மாவட்டம் ஈரோடு..

*அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்* *புராண பெயர்(கள்):* வாகைப்பெருந்துறை *பெயர்:* சோழீஸ்வரர் திருக்கோயில் *ஊர்:* பெருந்துறை *மாவ...