Thursday, February 27, 2025

தமிழ்நாடு இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள்.

தமிழ்நாட்டின் பிரபலமான இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :*
• காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாஹாளேஸ்வரர் திருக்கோயிலில் இராகுவும் கேதுவும் மனித உருவில் காட்சிதருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் இராகு காலத்தில் இத்தலத்தில் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.

• புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேரையூர் எனும் ஊரில் மூலவர் நாகநாதர் அம்பாள் பிரகதாம்பாள் எழுந்தருளியுள்ளார்கள். பேரையூர் சென்று அருள்மிகு நாகநாத சுவாமியை தரிசித்தால் இரண்டு கிரகங்களின் தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

• சென்னை திருப்பதி மார்க்கத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தி. இது புகழ்பெற்ற இராகு கேது தலமாகும். இத்தலத்தில் இராகு கேது பரிகார பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

• மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம். இங்கு வண்டார்பூங்குழலி சமேத பாம்புரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இராகுவும் கேதுவும் ஓருடலாக அமைந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்ட காரணத்தினால் இத்தலம் இராகு கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது.

• திருவாரூர் நாகை மார்க்கத்தில் கீழ்வேளுருக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் திருக்கண்ணங்குடி என்ற தலத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இது ஒரு இராகு கேது பரிகாரத் தலமாகும்.

• திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த மன்னார்குடிக்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாமணி தலத்தில் சுயம்புலிங்கமாக அருள்கிறார் நாகநாதர். இறைவி அமிர்தநாயகி. மனிதமுகம் பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இத்தலத்தில் ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷம், இராகு கேது தோஷம் அகலும் என்பது ஐதீகம்.

• கும்பகோணம் நகரத்தில் மையப்பகுதியில் நாகேஸ்வரம் சன்னிதி தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரர் திருக்கோயில். இத்தலம் இராகு தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்து நாகேஸ்வர சுவாமியை வழிபட்டால் இராகு தோஷம் நீங்கப்பெறலாம்.

• நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்களாச்சேரி என்ற ஊரில் அமைந்துள்ளது நாகநாத சுவாமி திருக்கோயில். இத்தலம் திருக்கடையூருக்கு தென்மேற்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் திகழ்கிறார்.

• நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயம். அஷ்டநாகங்களில் ஒருவரான ஆதிசேஷன் மஹாசிவராத்திரி அன்று இத்தலத்தின் ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. நாகதோஷங்கள் அகல இத்தலத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

தமிழ்நாடு இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள்.

தமிழ்நாட்டின் பிரபலமான இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :* • காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குப் ...