Monday, February 24, 2025

மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகள் பலன்கள்.

 மஹா சிவராத்திரி நான்கு கால பூஜைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் 
சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது மிகவும் முக்கியமானது. அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரையானது, மூன்றாம் ஜாமம். அதைத் தொடர்ந்து காலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

*முதல் ஜாமம்*

முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

*இரண்டாம் ஜாமம்*

இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது கோடி புண்ணியம் தரவல்லது. 

இந்த இரண்டாம் ஜாம வேளையில், யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

*மூன்றாம் ஜாமம்*

மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். 


மஹா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி..’ எனும் பதிகத்தையும் பாராயணம் செய்யலாம். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

*நான்காம் ஜாமம்*

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...