Tuesday, March 18, 2025

நிலம், சொத்து வழக்குகளில் லாபம் பெற பூமாதேவி வழிபட்ட பூமிநாதர்..

*பூமாதேவி வழிபட்ட பூமிநாதர் கோவில்*
 சிவனின் வீரம் வெளிப்பட்டதால் வீரவநல்லூர் என்றும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கத்தை பூமித்தாயே உருவாக்கி வழிபட்டதால், இத்தல இறைவன் பூமிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

பூவுலகில் வாழும் உயிர்களை எடுத்துச் செல்லும் எமதர்மனை ஒரு முறை சிவபெருமான் சம்ஹாரம் செய்து விட்டார். இதனால் உலகில் உயிர்கள் அழிவில்லாமல் பூமி பாரம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பூமித் தாயான பூமகள், எமதர்மனை உயிர்ப்பிக்க வழிபாடு செய்தாள். இந்த பெருமைக்குரிய ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் அமைந்திருக்கிறது.

நீண்ட காலமாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த மிருகண்டு முனிவர்- மருத்துவவதி தம்பதியர், சிவபெருமானை வேண்டினர். அதன் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டனர். அவன் பதினாறு வயதில் இறந்து போய்விடுவான் என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர். சிறு வயதிலேயே தங்கள் பிள்ளை உயிரிழந்து விடுவான் என்பதை நினைத்துக் கவலையடைந்த பெற்றோருக்கு, தன்னைச் சிவபெருமான் எப்படியும் காத்தருள்வார் என்று மார்க்கண்டேயன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிறுவனான மார்க்கண்டேயன் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதுடன், சிவபெருமானிடம் முழுமையாகச் சரண்டைந்திருந்தான். அவனுக்குப் பதினாறு வயதான போது, அவனுடைய உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர் கள், சிவபெருமானிடம் ஒன்றியிருக்கும் அவனைத் தனியாகப் பிரித்து, அவன் உயிரைக் கொண்டு செல்ல முடியாது என்று நினைத்துத் திரும்பினர்.

எமதர்மன், மார்க்கண்டேயனின் உயிரைத் தானே எடுத்து வருவதாகச் சொல்லி வந்தான். இறைவனிடம் ஒன்றியிருந்த சிறுவனின் உயிரைப் பறிப்பதற்காகப் பாசக்கயிற்றை வீசினான். அந்தக் கயிறு சிவபெருமானையும் சேர்த்துப் பற்றியது. அதனால் கோப மடைந்த இறைவன், அவனைத் தன் காலால் எட்டி உதைத்தார். இறைவன் தாக்குதலால் நிலை குலைந்த அவன் அங்கிருந்து தென்பகுதியில் வந்து விழுந்தான். செயலற்றுப் போன அவன், ஒரு சாதாரணக் கொடியாக மாறிப் போனான்.

இதனால் எமன் தனது பணியைச் செய்ய முடியாமல் போனது. பூமியில் இருப்பவர்களுக்கு இறப்பு இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து, பூமியின் எடையும் அதிகமாகத் தொடங்கியது. பூமியின் அதிக எடையைத் தாங்க முடியாத பூமித்தாய், எமதர்மன் செயலற்றுக் கிடந்த பகுதிக்கு வந்து, அங்கு ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபாடு செய்யத் தொடங்கினாள்.

அவளின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த இறைவன், அவள் வேண்டு கோளை ஏற்று, எமதர்மனை உயிர்ப்பித்துத் தந்தார். பின்னர் அவர் எமனிடம், ‘இனி சிவகணங்கள் அழைக்கும் உயிர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது. சிவபக்தர்களுக்கு மரண பயம் கொடுத்துத் துன்புறுத்தக் கூடாது’ என்றும் அறிவுரை வழங்கினார். எமனும் அதை ஏற்றுக் கொண்டார்.

சிவபெருமான் எமதர்மனுக்கு உயிர் தந்ததால் இவ்வூருக்குத் ‘தருமநல்லூர்’ என்றும், சிவனின் வீரம் வெளிப்பட்டதால் வீரவ நல்லூர் என்றும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கத்தை பூமித்தாயே உருவாக்கி வழிபட்டதால், இத்தல இறைவன் பூமிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

பாண்டிய மன்னன் அதிவீரவழுதி மாறன் என்பவனை வகுளத்தாமன் என்பவன் போரில் தோற்கடித்தான். தோல்வியுற்ற மன்னன், தனது நாடு, நகரம், மக்கள் என அனைத்தையும் இழந்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனுக்குப் பூமித்தாய் வழிபட்ட சிவலிங்கம் கண்ணில் பட்டது. அவன், அந்த லிங்கத்தின் முன்பாக அமர்ந்து, தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற உதவும்படி வேண்டி வழிபட்டான்.

அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய இறைவன், ‘மன்னா! உன்னிடம் மீத மிருக்கும் சிறு படையைக் கொண்டு மீண்டும் அவனை எதிர்த்துப் போரிடு. அந்தப் போரில் உனக்கு வெற்றி கிடைக்கும். அதன் பின்பு, இங்கு வந்து எனக்குக் கோவில் எழுப்பி வழிபாடுகளைச் செய்க’ என்று அசரீரியாகச் சொன்னார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் மீண்டும் தனது சிறு படையுடன் அவனை எதிர்த்துப் போரிட்டான். இறைவனுடைய திருவருளால் அவனுடைய சிறு படை, எதிர்ப்படையினருக்கு அதிகமானவர்களுடன் பெரும் படையாகத் தோற்றமளித்தது. அந்தப் பெரும்படையை எதிர்த்துப் போட்டியிடப் பயந்த எதிரி, தனது படையுடன் பின்வாங்கி ஓடினான்.

தன் நாட்டைத் திரும்பப் பெற்ற மன்னன் அதிவீரவழுதி மாறன், அதன் பிறகு, இங்கு வந்து இறைவனுக்குப் புதிதாகக் கோவிலைக் கட்டுவித்துச் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வழிபட்டான்.

இக்கோவிலில் இறைவன் பூமிநாதருடன், இறைவியாக மரகதாம்பிகை உடனிருக்கிறார். இந்த ஆலயத்தில் தினசரி வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ஐப்பசி மாதம் நடைபெறும் ‘திருக்கல்யாணம் விழா’ 10 நாட்களும், மார்கழி மாதம் நடைபெறும் ‘திருவாதிரை விழா’ 10 நாட்களும் என்று சிறப்பு விழாக்களாக நடைபெற்று வருகின்றன.

இந்தக் கோவிலில் இருக்கும் இறைவனைப் பூமகள், எமதர்மன் தவிர, இந்திரன், இந்திரனின் அமைச்சரான விசுமுகன், பிரம்மன், கண்ணன், விருகன், கங்கை ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டுப் பயனடைந்திருக்கின்றனர்.

* எமனை உயிர்ப்பித்த இத்தல இறைவனை வழிபடுபவர் களுக்கு, வயதான காலத்தில் வரும் மரண பயமோ அதனால் ஏற்படும் துன்பங்களோ இருக்காது.

* நிலம், சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றியைப் பெற்றிட இத்தலத்து இறைவனை வழிபடலாம்.

* விவசாயம் மற்றும் நிலம் தொடர்புடைய தொழில்களைச் செய்து வருபவர்கள் இங்கு வந்து வழிபட்டால், தங்களது தொழிலில் அதிக லாபத்தினைப் பெறமுடியும்.

திருநெல்வேலி புதியப் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் 28 கிலோ மீட்டர் தொலைவில் வீரவநல்லூர் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து வீரவநல்லூருக்கு நகரப்பேருந்து வசதியும் உள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...