நினைத்தவுடன் அருளும் நரசிங்கபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்*
சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், சுமார் 1400 வருடங்கள் பழமையான வைணவ ஸ்தலங்களில், அவசியம் தரிசிக்க வேண்டியது நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு லக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயிலாகும். நரசிம்மர் பெயரையே தாங்கி நிற்கும் ஒப்பற்ற திருத்தலம் இது. இவரிடம் வேண்டிக்கொண்டால், உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார் என்பது ஐதீகம். எனவே “நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்” என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருத்தமாகும்.
இக்கோயிலில் மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை இடது தொடை மீது அமரவைத்து, தனது இடது கையால் தாயாரை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்சித் தருவது சிறப்பாகும்.
தாயார் மகாலட்சுமி நேரடியாக பக்தர்களையே பார்க்கும் அம்சமாக அமைந்திருப்பது, இத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பு. இதனால் இந்த லட்சுமி நரசிம்மருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு.
இந்த கோயில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு சிதிலம் அடைந்து, பிறகு சோழர்கள் காலத்திலும், விஜயநகர அரசர்கள் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கோயிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறன் கொண்டு திகழ்கிறது. இந்த கோயில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையும் விஜயநகரப் பேரரசுகால கட்டிடக் கலையும் கொண்டுள்ளது. விஜயநகர அரசர்கள் காலத்தில் இக்கோயில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் நரசிம்மர், பல்லவர் காலத்திய சிற்பம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இக்கோயிலில், பதினான்கு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் முதலாம் குலோத்துங்கன் காலத்திய இரண்டு கல்வெட்டுகளில், ராமர், சீதை உற்ஸவ மூர்த்திகள் இந்தக் கோயிலுக்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. ராமருக்கு உற்சவம் நடத்திய அந்த மன்னன் சில தானங்களை அளித்த செய்திகளையும் அந்தக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. “பிரகலாதர்” உற்சவர் சிலையை உருவாக்கிய விதம் பற்றிய ஆவணங்கள் கூறும் ஒரு கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றினையும் விவரிக்கின்றது.
சந்திரகிரி இராஜ்ஜியத்தின், ஜெயங்கொண்ட சோழமண்டல எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றின் அருகில்,தெற்குப் பகுதியில் நரசநாயகர்புரம் எனும் கிராமம் அமைந்துள்ளதாகவும், அவ்வூரில் உள்ள கோயிலில் ‘கடவுளின் அவதாரம்’ எனப் பெயரிடப்பட்டு ‘புரந்தர நரசிங்க பெருமாள்’ எனும் மூலவர் வீற்றிருந்தார் என மற்றொரு கல்வெட்டில் உள்ளது. அந்த ‘நரசநாயகர்புரம்’ பின் நரசிங்கபுரம் என பெயர் மாற்றமானதாக தெரிகின்றது.
ஐந்து நிலை கொண்ட ஏழு கலசங்களோடு கூடிய கிழக்கு நோக்கிய அழகிய ராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளன. அதனை கடந்து உள்ளே சென்றால், முதலில் பதினாறு நாகங்களைத் தன் உடலில் தரித்துக் கொண்டிருக்கும் கருடாழ்வாரை தரிசிக்கலாம். அடுத்து, கோயில் முன் மண்டபத்தைக் கடந்து, கருவறையில் நரசிம்மரைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் பன்னிரெண்டு ஆழ்வார்கள் தரிசனம் தருகின்றனர்.
கருவறையில் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் சிரித்த முகத்துடன் கம்பீரமான தோற்றம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். எல்லா லக்ஷ்மி நரசிம்மர் கோயில்களில், லக்ஷ்மி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இங்கே மகாலக்ஷ்மி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி நரசிம்மரை அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். இவரை தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் இருபது தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. இங்கு இராமருக்கும் தனி ஸந்நிதி உள்ளது.
மரகதவல்லித் தாயார் ஸந்நிதி, பிரகாரத்தில் தனியே உள்ளது. ஐந்து அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான முகத்துடன் அருள்பாலிக்கிறார்.
நாகதோஷ பரிகார ஸ்தலம்:
இங்கு நான்கு அடி உயரத்தில், பதினாறு நாகங்களை அணிகலனாக கொண்ட கருடாழ்வார் அருள்புரிகின்றார். இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
*பிரார்த்தனை ஸ்தலம்*
சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம், துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அந்திப் பொழுதில் அவதரித்தவரானதால், இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், பிணி, திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இங்கு மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை முப்பத்திரண்டு முறை வலம் வந்தால் திருமணத் தடை நீங்கும். *நினைத்த காரியம் கைகூடும்..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment