Tuesday, March 18, 2025

ராகு, கேது தோஷ பரிகார தலமாக விளங்கும் நாகநாதசுவாமி பாமணி.

அருள்மிகு அமிர்தநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயில்,  பாமணி 614014,
மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்             

*இது பாடல் பெற்ற தலம்.  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது.           

*ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. இதை அறிந்த 
முனிவர் சுகலர் காசியை விட புனிதமான இடம் இந்த "பாம்பணி" என்று உணர்ந்தார். (பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று.)
ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கி விட்டார்.

*அப்போது அவர் தனது குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் மேயச் சென்ற பசு தன்னை அறியாமலேயே புற்றின் மீது பாலை சுரந்தது. தினமும் அவ்வாறே செய்து வந்தது. 
மேயச் சென்ற பசு ஏன் பாலை கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் திகைத்த முனிவர் ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை பின் தொடர்ந்து சென்றார். புற்றின் மீது பால் சுரப்பதை கண்ட அவர், ஒரு தடியால் பசுவை அடித்தார்.

பசு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்று மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பின்னர் பசு ஓடிச்சென்று தெற்கு திசையில் இருந்த  குளத்தில் விழுந்து இறந்தது.         
உடனே சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் கயிலாய காட்சி கொடுத்து பசுவை உயிர்த்தெழச் செய்தார்.
"உனது பால் அபிஷேகத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று பசுவிடம் கேட்டார்.
அதற்கு பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களும் சிவனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. பரமேஸ்வரனும் மிகவும் மகிழ்ந்து பசு கேட்ட வரத்
வரத்தைக் கொடுத்தார். அன்று முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை பஞ்ச கவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக,
ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்துக்கு உகந்ததாக ஆனது.                சுகல முனிவரும் தன் தவறை உணர்ந்து ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றார்.

*நாகநாதசுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் பக்தர் களுக்கு தரிசனம் தருகிறார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி மூன்று பிரிவாகப் பிளந்த லிங்கம் இப்போது செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.

*புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும்.
 
மாம்பழச்சாறு அபிஷேகம் : திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது 4 மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் 
கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாத சுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம்.      

*சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 

*பச்சை திராட்சை நிவேதனம்: தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். 
அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது "திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக" என்று அசரீரி கேட்டது.
இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு 
நிவேதனம் செய்யப்படுகிறது. 

திருமணத் தடை, புத்திர பாக்கியம், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்த வேறுபாடுகள் நீங்கவும் இத்தல இறைவனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

*இந்தக் கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது. 
கருவறை வாசலின் வலதுபுறம் சுவாமியை வணங்கிய நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் காட்சியளிக்கிறார்.                   
இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு - கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவர்த்தி அடைவர்.

*இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால், இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.

*அம்பாள் திருநாமம் அமிர்தநாயகி.
அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம், கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. 

*சோமாஸ் கந்தர் தைப்பூச தினத்தன்று பாமணி ஆற்றில் தீர்த்தம் கொடுப்பார். இவருக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அபிஷேகம், பூஜைகள் செய்து வணங்கி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரச் செய்து நைவேத்திய பிரசாதத்தை வினியோகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

*மன்னார்குடியில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாமணி ஆற்றின் வடபுறம் கோவில் அமைந்துள்ளது.     மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு              

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவபெருமானுக்கு சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சைவத் தலம்.

சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலமான பிரகஸ்பதி (வியாழன் பகவான்) சிவனை வழிபட்ட தலமாகவும் உள்ள, சிவபெருமான் ந...