Saturday, March 22, 2025

சிவபெருமான் மலையாகவும் தேவி நதியாகவும் அருள்பாலிக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 
ஒரேயொரு தேவாரப் பாடல் பெற்ற திருமுறைத் தலம் என்ற சிறப்பினைப் பெற்ற 
துளுவ நாட்டுத் தலமான
#திருக்கோகர்ணம்
துளுவ நாடான கர்நாடக மாநிலத்தில் உள்ள 
ஒரேயொரு தேவாரப் பாடல் பெற்ற திருமுறை 
துளுவ நாட்டுத் தலமான,
51 சக்தி பீடங்களில் "கர்ண சக்தி" பீடமான,
இராவணன் ஈசனிடம் தவமிருந்து பெற்ற ஆத்ம (பிராண) லிங்கம் அமையப் பெற்ற தலமான, 
கர்நாடக மாநிலத்தில் உள்ள 6 முக்தி தலங்களில் ஒன்றாக விளங்கும் 
#உத்தர_கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள
மேற்கு கடற்கரையில் 
அமையப்பெற்ற 
 #திருக்கோகர்ணம்
#மகாபலேஸ்வரர்
(#பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்,
மகாபலநாதர்)
#கோகர்ணேஸ்வரி என்ற 
#தாமிரகெளரி_அம்மன் 
(பத்ரகர்ணி)

திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் உள்ள தலமாகும். இந்த கோவில் கர்நாடக மாநிலத்தில் உத்தர கனடா என்னும் மாவட்டத்தில் உள்ள கோகர்ணம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 6 முக்தி ஸ்தலங்களுள் ஒன்றான இந்த கோவிலில் ஒரு ஆத்ம லிங்கம் உள்ளது. இந்த லிங்கமானது ராவணனால் கைலாய மலையில் இருந்து எடுத்துவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது.  இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. ("கோ" = பசு, "கர்ணம்" = காது

இந்த கோவிலை மயூரசர்மா என்ற அரசன் கட்டி உள்ளார். 
அம்மனின் சக்தி பீடங்கள் வரிசையில், திருக்கோகர்ணம் தலத்தில் தேவியின் காது விழுந்ததாகக் கூறப்படுகிறது. பூமாதேவியின் காது வழியாக சிவபெருமான் வெளிப்பட்டு கோயில் கொண்ட தலமாக (கர்ண சக்தி பீடம்) திருக்கோகர்ணம் கருதப்படுகிறது.

மூலவர்:- மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மன்  :-கோகர்ணேஸ்வரி, தாமிரகெளரி
தலமரம்:- வில்வம்
தீர்த்தம் :- கோடி தீர்த்தம்

*வழிபட்டவர்கள் :- 
இராவணன், பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், நாகராஜன்.

தேவாரம் பாடியவர்கள்;-  சம்பந்தர், அப்பர்

தேவாரப் பதிகம்:

"பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
        பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலிகாண்
       கட்டங்கன் காண்கையிற் கபால  மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான்காண்
      ஆடினான் காண்பாணியாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
      மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே
                                                                                 - - அப்பர் தேவாரம்

#புராண வரலாறு:

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள திருக்கோகர்ண தலத்துக்கு வந்து, கோகர்ணேஸ்வரரையும் கோகர்ண நாயகியையும் வழிபட்டால் கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட்ட பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. சிறப்புமிக்க நதிகளையும் தீர்த்தங்களையும் கொண்டதாக இத்தலம் விளங்குகிறது.

இங்கு சிவபெருமான் மலையாகவும், பார்வதி தேவி நதியாகவும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் முன்புறம் நதியும் அதற்கடுத்து மலையும் இருப்பதால், இத்தலத்தில் கிரிவலம் செய்ய முடியாது. கோகர்ணம் தலத்தின் வரலாறு விபீஷணன் ரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை, விநாயகர் தடுத்ததைப் போன்று உள்ளது.

கோகர்ணம் தலத்தில் உள்ள பிராணலிங்கத்தின் பெருமைகளைக் கேள்விப்பட்டதும், அதை இலங்கை கொண்டு செல்ல வேண்டும் என்று ராவணன் விருப்பம் கொண்டான். தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கயிலை மலைக்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினான்.

ராவணனின் தவத்தின் நோக்கத்தை உணர்ந்த நாரத முனிவர், தேவலோகம் சென்று இந்திரனிடம் இதைத் தெரிவித்தார். மேலும், பிராணலிங்கத்தை ராவணன் இலங்கைக்கு இடம் மாற்றினால் தேவர்களின் பலம் குறையும் என்று எச்சரித்தார். உடனே, இந்திரன் கயிலை மலைக்கு விரைந்தான்.

அந்த நேரத்துக்குள், சிவபெருமான் ராவணனின் தவத்தில் மகிழ்ந்து, அவன் வேண்டிய வரத்தை அளிக்கிறார். பிராணலிங்கத்தை ராவணனிடம் அளித்த சிவபெருமான், நடந்தேதான் இலங்கை செல்ல வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் பிராணலிங்கத்தை கீழே வைக்கக் கூடாது என்றும் கூறுகிறார்.

பிராணலிங்கத்துடன் இலங்கை திரும்பிக் கொண்டிருக்கும் ராவணனைத் தடுத்து நிறுத்த எண்ணினார் திருமால். உடனே விநாயகப் பெருமானை அழைத்த திருமால், ராவணன் சந்தியாவந்தனம் செய்யும் நேரத்தில் அவன் முன்னர் நிற்கப் பணிக்கிறார். மேலும், சில ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

திருமால் தன் கரத்தை பூமிக்கும் வானத்துக்கும் இடையே நிறுத்தினார். மாலை வேளைபோல் சற்றே இருள் சூழ்ந்ததும், சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று ராவணன் நினைத்தான். அப்போது, யாரிடமாவது பிராணலிங்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ராவணன், சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு விநாயகப் பெருமான் நின்றிருந்ததைப் பார்த்து, அவரை அழைத்து, சிறிது நேரம் பிராணலிங்கத்தை வைத்துக் கொள்ளும்படி கூறுகிறார்.

பிராணலிங்கத்தைப் பெற்றுக்கொண்ட விநாயகர், “காலம் தாழ்த்தாது திரும்பி வரவேண்டும். பாரம் தாங்காது தான் தவித்தால், மூன்று முறை கூப்பிடுவேன். அப்படியும் வரவில்லை என்றால், பிராணலிங்கத்தை கீழே வைத்து விடுவேன்” என்றும் கூறினார்.

ராவணன் அங்கிருந்து சென்றதும், தேவர்கள், மூவுலகின் பாரத்தை பிராணலிங்கத்தின் மீது செலுத்தினர். பிராணலிங்கத்தின் பாரத்தை தாங்க முடியாமல் விநாயகப் பெருமான், ராவணனை மூன்று முறை அழைத்தார். ஆனால், ராவணன் வரவில்லை. உடனே பிராணலிங்கத்தை கீழே வைத்துவிடுகிறார் விநாயகர். பிராணலிங்கம் நன்றாக ஊன்றி நிலைத்துவிட்டது. திரும்பி வந்த ராவணன், பிராணலிங்கத்தை கீழே வைத்ததற்காக விநாயகரின் தலையில் குட்டினான்.

எவ்வளவு முயன்றும் லிங்கத்தைத் தூக்க முடியாததால், அப்படியே விட்டுவிட்டு இலங்கை திரும்புகிறான் ராவணன். தேவர்கள் தேவ சிற்பியை அழைத்து அவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபட்டனர். தன் பலம் முழுவதும் செலுத்தி ராவணன் பிராணலிங்கத்தைத் தூக்க முயன்றதால், லிங்கம் பசுவின் (கோ) காதுகளை (கர்ணம்) போல் குழைத்து நீண்டது. பசுவின் காது போல் அமைந்த லிங்கம் என்பதால், இத்தலம் ‘கோகர்ணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சிவபெருமான் மகாபலேஸ்வரர் (கோகர்ணேஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறார். ராவணனின் பலம் முழுதும் இங்கு உபயோகப்படுத்தப்பட்டும், இங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால் மகாபலநாதர் என்ற பெயர் பெற்றார் சிவன். அவர் அருகிலேயே விநாயகப் பெருமான் அருள்பாலிக்கிறார். நதிவடிவில் அம்பிகை அருள்பாலிப்பதால் தாமிர கௌரி என்று அழைக்கப்படுகிறார். அவரே கோகர்ண நாயகியாக இங்கு வீற்றிருக்கிறார்.

#கோகர்ண நாயகி

கலியுகத் தொடக்கத்தில் அனைத்து உலகங்களும் நீரால் சூழப்பட்டிருந்தன. பிரம்மதேவர் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க வேண்டியிருப்பதால், சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார். அப்போது உருத்திரன், பிரம்மதேவரின் நெற்றியில் தோன்றினார். படைப்புத் தொழிலைச் செய்ய உருத்திரனிடம், பிரம்மதேவர் வேண்டுகிறார்.

அதையேற்று பாதாள உலகத்தில் இருந்து படைப்புத் தொழிலைத் தொடங்குகிறார் உருத்திரன். அனைத்து படைப்புகளும் தூய்மையானதாக இருக்கின்றன. உலக நடைமுறைக்கு இது ஏற்றதல்ல என்பதால், சத்வ, ரஜோ, தமோ குணங்கள் கலந்த உயிர்களைப் படைக்கிறார் பிரம்மதேவர்.

சத்வ குணம் என்பது அருள், தவம், வாய்மை, மேன்மை, ஐம்புலன் அடக்கம் முதலியனவாகும். ரஜோ குணம் என்பது மன ஊக்கம், ஞானம், தர்மம், தானம், கல்வி, கேள்வி, ஆராய்ச்சி முதலியன. தமோ குணம் என்பது கோபம், களவு, கொலை, வஞ்சகம், பொய், நீதிவழு, ஒழுக்கவழு, மறதி, நெடுந்துயில், பேருண்டி, சோம்பல் முதலியனவாகும். தன்னுடைய படைப்புகளுக்கு முற்றிலும் மாறான படைப்புகளைப் பிரம்மதேவர் படைப்பதால் கோபம் கொண்ட சிவபெருமான், பூமியைப் பிளந்துகொண்டு மேலே வருவதற்கு முயன்றார். அப்போது பூமாதேவி, தன்னை வருத்தாமல், தன் காதுவழியே வெளியே வருமாறு சிவபெருமானை வேண்டினார்.

அதன்படி சிவபெருமான், கட்டை விரல் அளவில் உடலைச் சிறிதாக்கிக் கொண்டு, பூமாதேவியின் காது வழியே (கோ – கர்ணம்) வெளிவந்தார். ஆகவே இத்தலம் (காது துவார தலம்) கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் கோகர்ணேஸ்வரர் என்றும், இறைவி கோகர்ண நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பிரம்மதேவரின் நெற்றியில் சிவபெருமானை தோன்றச் செய்ததும், தன் காது வழியாக உருத்திரனை வரவழைத்ததும் தேவிதான். பிரம்மதேவர், சிவபெருமான், திருமால் ஆகியோரின் செயல்களும் ஆதிசக்தியின் ஆணைக்கு இணங்கவே இருக்கும். மூவரையும் படைத்தது ஆதிசக்தியே. இத்தலத்தில் கோகர்ண நாயகியாகவும் பத்ரகர்ணிகையாகவும் அருள்பாலிக்கிறார் சக்தி.

#கோகர்ணம்:

கோ - பசு, கர்ணம் - காது. சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களும் உண்டு.

 இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சித்தந்து வேண்டுவன யாது, என வினவினார். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராணலிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது; இச்சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து செல்லவேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரவில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிட்டை செய்துவிட்டால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவிவிட்டு, ஒரு சிறுவன் போல அவன்முன் தோன்றி நின்றார். இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். 

சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்றுமுறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். பெருமான் பசுவின் காதுபோலக் குழைந்து காட்டினார். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்த அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார்.

இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார். 

தல வரலாறு:

இந்தக் கோவிலுக்கு இரண்டு மூன்று தல வரலாறு இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவில் அமையக் காரணமாக இருந்த  விபீசணன் போல, இந்தக் கோவில் அமைய இராவணன். இரண்டு கதையிலும் விநாயகரும் வருகிறார். 

திருக்கோகர்ணத்தில் உள்ள ஆத்மலிங்கமானது இலங்கை வேந்தன் இராவணன்  இலங்கையை அழியாமல் காக்க  சிவனை நினைத்து  கடுந்தவம் இருந்து கைலையில் சிவபெருமானிடம் பெற்றுவந்தது என்பார்கள்.  சிவபெருமான் கீழே வைக்க கூடாது இலங்கை செல்லும் வரையில் என்று சொல்லிக் கொடுக்கிறார்.

இராவணன் மாலை நேரத்தில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பதால்    அங்கு பக்கத்தில் இருந்த  மாடு மேய்க்கும் சிறுவனிடம் லிங்கத்தைக் கொடுத்து "கீழே வைக்காமல் கையில் வைத்துக் கொள் , சிறிது நேரத்தில்  வருகிறேன் "என்று சொல்கிறார். சிறுவனாக வந்த கணபதி சிறிது நேரம் தான் கையில் வைத்து இருப்பேன் அதற்குள் வரவில்லை என்றால் கீழே வைத்து விடுவேனென்று நிபந்தனை விதிக்கிறார்.

குறிப்பிட்ட நேரம் கடந்துவிட்டதால்  சிறுவன் கீழே வைத்து விடுகிறான். இராவணன் கீழே வைத்து விட்ட சிவலிங்கத்தை  எடுக்கும்போது  சிவலிங்கம் பசுவின் காது போல் குழைந்ததாம் அதனால் சிவனுக்குக் கோகர்ணேஸ்வரர் என்று பெயர். லிங்க அமைப்பாய் இல்லாமல்  திருகிய தோற்றத்தில் பசுவின் காது போல் இருக்கும். 

தன்  முழு பலத்தைக் காட்டியும் எடுக்க முடியாமல்  இராவணன் இங்கேயே விட்டுச் சென்றதால் இங்கு உள்ள சிவனுக்கு மகாபலேஸ்வரர்  என்ற பெயரும், பசுவின் காது போல் லிங்கம் இருப்பதால் கோகர்ணம் என்றும் அழைக்கப்படுகிறது. (கோ என்றால்- பசு ; கர்ணம் என்றால் காது.)

*மஹா கணபதி கோவில்:

சிறுவனாக வந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்த   கணபதிக்குக் கோவில் இருக்கிறது, நின்ற வடிவில் இருக்கிறார்.

கோவிலுக்கு முன்பு அவரை வணங்கிய பின் தான் மகாபலேஸ்வரரை வணங்கக் கோவில் உள் போகிறோம்.

சாளக்கிரம பீடத்தில் சொர்ணரேகையுடன் வெள்ளை கலரில் உள்ளங்கை அளவு பள்ளம் உள்ளது அதில் சிறியஅளவு  சிவலிங்கத்தின் தலைப்பகுதி தெரியும்.

நாமே அபிஷேகப் பொருட்கள் கொண்டு சென்று செய்யலாம். 

ஆவுடையாரின் மேல் தெரியும் துளையில் நம் கையை நீட்டச் சொல்வார் குருக்கள்   கை வழியே பால் விடுவார் .நம் கையில்  மலர்கள் காசு வைத்துக் கொண்டு   உள்ளே போட்டு விட்டுக் கையை வைத்துக் காது போன்ற அமைப்பைத் தொட்டு வணங்கலாம். 

உள்ளே இருக்கும் ஆத்மலிங்கத்திற்கு 40 வருடத்திற்கு ஒரு முறைதான்  பீடத்தை அகற்றி  பூஜை செய்வார்களாம், பக்தர்களுக்கும் தரிசனம் உண்டாம். 

தல சிறப்பு:

இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.
 
இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கியிருப்பதைக் காணலாம்.
 

இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டி நீராடி மலர்சூட்டி வழிபடலாம்.
 

கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது; கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.
 
மூலத்தானம் சிறிய அளவுடையது; நடுவிலுள்ள சதுரமேயில் வட்டமான பீடமுள்ளது, இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது; இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவிலுள்ள வெள்ளை நிறமான உள்ளங்கையளவுள்ள பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. தொட்டுப்பார்த்து உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.

"துவிபுஜ" விநாயகர் - இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்கின்றனர்.

 இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன; அவற்றுள் கோகர்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடிதீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையவை; இவற்றுள்ளும் சிறப்புடையது கோடி தீர்த்தமாகும்.

இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபட வேண்டும்.

*கோயில் அமைப்பு:

அம்மையும் அப்பனும் இணைந்ததே சிவலிங்க வடிவம் என்பதால், அம்மையின் சக்தியுடன் இணைந்த லிங்கத்தை, அசைக்க முடியாமல் ராவணன் தோல்வியுற்றான். மகாபலநாதரும் கோகர்ண நாயகியும் இங்குள்ள சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அருகே, திவிபுஜ விநாயகர் தனிக்கோயில் கொண்டு, கம்பீரமான உருவத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மஹா காசி, மஹாபலகர விஸ்வநாதர், கோடித் தீர்த்தம், கங்கை சமுத்திரம் ஆகியவை இத்தலத்தில் அமைந்திருப்பதால் புண்ணிய பூமியாக இத்தலம் கருதப்படுகிறது. தாமிர கௌரி தீர்த்தம், காயத்ரி நதி, சத சிருங்க பர்வதம், உமா மகேஸ்வர பர்வதம் முதலியவற்றை இத்தலம் கொண்டுள்ளது.

தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு அன்னை செயல்பட்டதால், அசுர சக்தி வெற்றி பெறுதல் என்பது இயலாத ஒன்றாகியது. அம்மையும் அப்பனும் பிரிக்க முடியாதவர்கள் என்பதால், அப்பனின் பெருமைகள் அனைத்தும் அம்மைக்குப் பொருந்தும். அம்மையின் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் சிவபெருமானுக்கும் பொருந்தும்.

*சத சிருங்க பர்வதம்:

கயிலாயத்தில் சிவபெருமானும், இந்திர நீல பர்வதத்தில் திருமாலும், சத சிருங்க பர்வதத்தில் பிரம்மதேவரும் இருக்கும் இடங்களாகும். துர்முகன் என்ற நாகத்தை, கருடன் கொத்தி எடுத்துக்கொண்டு வந்தபோது, சத சிருங்க பர்வதத்தில் நாகம் நழுவி விழுந்தது. இதுதான் சமயம் என்று நினைத்த நாகம், சத சிருங்க பர்வதத்தில் ஒளிந்து கொண்டது. கருடன் எங்கு தேடியும் நாகம் கிடைக்கவே இல்லை.

அதனால் சத சிருங்க பர்வதத்தை, கருடன் தூக்க முயன்றது. பிரம்மதேவர் பர்வதத்தை நன்றாக ஊன்றினார். தடுமாறிய கருடன், உதவிக்கு அகத்திய முனிவரை அழைத்தது. கருடனுக்கு உதவும் நோக்கோடு, அகத்தியர் பர்வதத்தைப் பெயர்த்துக் கடலில் வைத்தார். அம்மலையில் இருந்து இரண்டு கோடித் தீர்த்தங்கள் உருவாகின. தனது இருப்பிடமான சத சிருங்க பர்வதம், கோகர்ணத்தில் அமைந்தது குறித்து பிரம்மதேவர் மகிழ்ச்சி அடைந்தார். இரண்டு கோடித் தீர்த்தங்களில் ஒன்று காயத்ரி நதியாக மாறி, கடலில் சேர்ந்தது. மற்றொன்று கீழ்ப்பக்கமாக வந்து கோடித் தீர்த்தக் குளமாக மாறியது.

கோடித் தீர்த்தக் கரையில் அகத்தியர் ஆசிரமம் அமைந்துள்ளது. அதனருகே அகத்தியர் தீர்த்தம், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வாசுதேவர் கோயில், கருட தீர்த்தம், கருட மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

#தாமிர கௌரி:

கோகர்ணேஸ்வரர் சந்நிதிக்கு வடகிழக்கு மூலையில் தாமிர கௌரி சந்நிதி அமைந்துள்ளது. பிரம்மதேவர் நிஷ்டையில் இருந்தபோது, அவரது வலது கையில் நதி உருவில் ஒரு பெண் தோன்றினார். பிரம்மதேவரின் ஆலோசனைக்கிணங்க, அப்பெண் சிவபெருமானை நாடி கோகர்ணத்துக்கு வந்தார். வைலாஹிகம் என்ற மலையில் இறைவன் அவரை மணம் புரிந்தார். தாமிர நதியாக உருவான அப்பெண் தாமிர கௌரி என்ற பெயரைப் பெற்றார்.

கௌரி, பார்வதி, கோகர்ண நாயகி, பத்ரகர்ணிகை ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் தேவி, அனைவருக்கும் அன்னையாக இருந்து அருளைப் பொழிகிறார். கோகர்ணம், பிதுர்க்கடன்களை முடிக்க சிறந்த இடமாகும்.

கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப்பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது - பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர் கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

மூலத்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை - அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.

பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுர மர்த்தினி சந்நிதிகள். விநாயகர், யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்தில் "துவிபுஜ" விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர்முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் மதிலுக்கு வெளியே வடபால் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்வடிவில் ஆதிககோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் உள்ள கோகர்ப்பக்குகை கண்டுகளிக்கத்தக்கது. இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் கோகார்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடி தீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் முதலியவை சிறப்புடையன. இவற்றுள்ளும் கோடி தீர்த்தம் மிக்க சிறப்புடையது.

*திருவிழாக்கள்:

இங்குள்ள லிங்க ஸ்தாபிதம், ஈஸ்வர ஆண்டு துலா மாதம் கார்த்திகை சித்தப்பிரதியாகம், ஆதி வாரம், விசாக நட்சத்திரம், மீன லக்னம் ஆகியவை கூடிய நேரத்தில் நடைபெற்றதால், ஒவ்வொரு வருடமும் கார்த்திகை சுத்தத்தில் சிறப்பு தீபாலங்கார சேவை நடைபெறும். கார்த்திகை பவுர்ணமியில் திரிபுர தகன விழா நடைபெறும். மாசி மாத சிவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறும். முதல்நாளில் தேர்த் திருவிழாவும், 8-ம் நாள் பிரம்மோற்சவமும் நடைபெறும்.

காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்.

ஸ்ரீபதஞ்சலி ஸ்ரீவியாக்ரபாதர் அதிஷ்டானம். திருப்பட்டூர் வியாக்ரபாதர் பிருந்தாவனம்.  காசிக்கு நிகரான திருப்பட்டூர்! ஸ்ரீஆதிசேஷனின்...