Thursday, March 20, 2025

பேயாழ்வார் தலமான திருமயிலை மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள்

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் உள்ள புகழ்பெற்ற மயிலாப்பூர் என்னும் திருமயிலையில் அவதரித்த 
12 ஆழ்வார்களில் ஒருவரான,
முதலாழ்வாரான 
#பேயாழ்வார் அவதார தலமான 
#திருமயிலை (#மயிலாப்பூர்) (#மயூரபுரி)
#ஆதிகேசவப்பெருமாள் 
#மயூரவல்லி_தாயார் திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்ற மயிலையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கபாலீஸ்வரர் ஆலயமும் ஆதிகேசவர் ஆலயமும் ஆகும்.  அந்த ஆலய தெப்பக் குளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஒரு காலத்தில் அந்த இரண்டு குளங்களிலும் நீர் நிரம்பி வழிந்தது. மக்கள் நீராடுவார்கள். ஆலய விழாக் காலங்களில் அங்கு நடக்கும் தெப்ப உற்சவங்கள் சிறப்பாக இருக்கும்.
தற்போது மயிலாப்பூர்  என்று அழைக்கப்படும்   பகுதியின் அந்த காலப் பெயர் மயூரபுரி  என்று இருந்தது. காரணம் இங்கு மயில்கள் நிறைய இருந்தன. அது மயூரங்கள் (மயில்கள்) நிறைந்து இருந்தப் பகுதி என்பதினால்  மயூரபுரி என்ற  பெயர் பெற்று இருந்தது. 
ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த தொண்டைநாட்டுத் திருத்தலமாகும். மயிலாப்பூர் என்பது முற்காலத்தில் மயூரபுரி, மயூரநகரி என்று அழைக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. திவ்ய தேசங்கள் தவிர இன்னும் பல தலங்கள் ஆழ்வார்கள் அவதாரத் தலமாகவும், ஆச்சார்யர்கள் அவதாரத் தலமாகவும் உள்ளன. அந்த வகையில் மயிலாப்பூர் திரு ஆதிகேசவ பெருமாள் கோவில் பேயாழ்வார் அவதாரத்தலமாக அமைந்துள்ளது.

இக்கோயில் தல புராணத்தின்படி, ஆதிகேசவப் பெருமாள், முனிவர் பிருகுவின் மகளான பார்கவியை மணந்து கொண்டதாகக் கருதப்படுகிறது.

மூலவர் : ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள்
உற்சவர் பெயர் : ஆதிகேசவர்
தாயார் சன்னதி : மயூரவல்லி தாயார்
தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி (சர்வ தீர்த்தம்)
தல விருட்சம் : அரசு மரம்
ஆகமம்: வைகானஸம்
புராண பெயர் : மயூரபுரி
ஊர்: மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு

திரேதாயுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவிணி புஷ்கரணி கரையில் மகரிஷிகள் யாகங்கள் நடத்தினர். அப்போது மது என்ற அசுரன் யாகம் நடக்க விடாமல் தொந்தரவுகள் கொடுத்து வந்தான்.
மகரிஷிகள் தங்களின் யாகத்தை தடுக்கக்கூடிய அசுரனை அழித்து யாகம் நடக்க வழிவகை செய்ய வேண்டும் என மகாவிஷ்ணுவிடம் வேண்டிக் கொண்டனர். அசுரனை அழிப்பதாக ஒப்புக் கொண்ட எம்பெருமான், உங்களின் யாகத்தை தொடரும் படி கூறினார்.

அப்போது யாகத்தை தடுக்க வந்த அசுரனை, யாகத்திலிருந்து மகாவிஷ்ணு தோன்றி அசுரனை அழித்தார். அதன் பின்னர் மகரிஷிகளின் வேண்டுதலை ஏற்று, இந்த ஆலயத்தில், ‘ஆதி கேசவப்பெருமாள்’ என்ற பெயரில் பக்தர்களுக்கு அருளி வருகிறார்.

#புராண வரலாறு:

இந்த ஆலயத்து புராணக் கதைகள்  சில உண்டு. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும்  துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன்  வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகம் நடந்து முடிந்தால்தான்  பிருகு முனிவரை  ஒன்றும் செய்ய முடியாது என்பதினால்  அந்த யாகம் நடந்து கொண்டு இருந்தபோது சில அசுரர்கள் அங்கு வந்து யாகத்தை நடக்க விடாமல் தடுத்து அங்கு கூடி இருந்த முனிவர்களை விரட்டி அடித்தார்கள். பிருகு முனிவரும் தப்பி ஓட வேண்டி இருந்தது.
அங்கிருந்து தப்பி ஓடிய ரிஷி முனிவர்கள் பிருகு முனிவர் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி நடந்தவற்றை அவரிடம் எடுத்து உரைத்தார்கள். விஷ்ணுவும் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, அங்கு மீண்டும் சென்று யாகம் செய்யுமாறும் தானே அங்கு வந்து அவர்களைக் பாதுகாத்து அசுரர்களை அழிப்பதாக உறுதிக் கூற மீண்டும் பிருகு முனிவரும் மற்றவர்களும் இன்று சித்திரக் குளம் உள்ள அதே பகுதியில் வந்து யாகத்தை மீண்டும் துவக்கினார்கள் . மீண்டும் யாகம் துவக்கப்பட்டதை அறிந்த அசுரர்கள் கேசி என்ற அசுரனின் தலைமையில் அங்கு வந்து யாகத்தை தடுக்க முயல, யாக குண்டத்தில் இருந்து தனது மனைவியுடன் வெளிவந்த ஆதியும் அந்தமுமாக இருந்த விஷ்ணுவானவர் அந்த அசுரர்களை வதம் செய்தார்.   அந்த அசுரர்களின் தலைவனான கேசி எனும் அசுரனை கொன்று சவமாக்கியதால் (சவமாக்கியதால்) கேசி+சவம் என்ற பெயருடன் அவர் ஆதி கேசவப் பெருமாளாக அங்கேயே குடி அமர வேண்டும் என  பிருகு  முனிவர் விஷ்ணுவிடம்  வேண்டிக் கொள்ள  இன்னும் சில காலத்தில் ஒரு சாப விமோசனம் பெறுவதற்காக லக்ஷ்மி  பிருகு முனிவரின் மகளாகப் அங்கு வந்துப் பிறந்து  இருக்கும்போது  தானும் அங்கு வந்து அவளை மீண்டும் மணந்து  கொண்டு  அங்கேயே அந்த  முனிவரின் விருப்பத்தின்படி கோவில் கொள்வதாக வாக்கு தந்தார்.

இப்படி இருக்கையில் ஒரு முறை ஒரு சாபத்தினால் விஷ்ணு லஷ்மியை பிரிந்து வாழ வேண்டி இருந்தது. லஷ்மி பிருகு முனிவருக்கு மகளாகப் பிறந்து அவளை மணக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது.  அப்போது பிருகு முனிவர் மயூரபுரி என்ற இடத்தில் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவத்தில் இருந்தார்.  பிருகு முனிவர் குடிலுக்கு அருகில் இருந்த குளத்தில் ஒரு மலர் மீது சிறு குழந்தை வடிவில் லக்ஷ்மி வந்து மிதந்தாள். அங்கு வந்த பிருகு முனிவர் அந்த சிறு குழந்தையை எடுத்து வந்து அதற்கு பார்கவி என்றப்  பெயரை சூட்டி வளர்த்தார். அதே நேரத்தில்  ஒரு முறை  பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள சிவபெருமான் பல இடங்களில் சுற்றி அலைந்து பிச்சை பெற்றுக் கொண்டு அலைந்து  வந்தார். அப்போது இந்த மயிலை பகுதிக்கு  வந்த சிவபெருமானைக்  கண்டதும் பிருகு முனிவராக இருந்த லஷ்மி தேவி அவருக்கு பிச்சை போட சிவபெருமானின் தோஷமும் அங்கேயே விலகியது. லஷ்மியும் தனது சுய உருவத்தை பெற்றாள். அதே நேரத்தில் விஷ்ணுவும் லஷ்மியை தேடி அலைந்தவாறு அங்கு வந்தார். லஷ்மியைக் கண்டார். அனைவரையும் ஒரு சேரக் கண்ட பிருகு முனிவர் அங்கேயே தனது மகளாக வளர்ந்த லஷ்மியை ஒரு தந்தையாக இருந்து விஷ்ணுவிற்கு மணம்  செய்துத் தர விஷ்ணுவும், லஷ்மியும் அங்கு கேசவப் பெருமாள் மற்றும் பார்கவி தேவியாக குடி கொண்டார்கள்.  சிவபெருமானும் அங்கிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு இடத்தில் ஒரு கற்பக மரத்தடியில் தன்னுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையுடன்  மயில் உருவில் தவம் இருந்துகொண்டு இருந்த பார்வதியை மணந்து கொண்டு கபாலீஸ்வரர் ஆலயத்தில் குடி கொண்டது  தனிக் கதை.

லஷ்மி தேவியானவள் பார்கவி, மற்றும் மயூரவல்லி தாயார் போன்ற பெயரையும் கொண்டு ஆதிகேசவர் ஆலயத்தில்  வலப்புறத்தில் தனிச் சன்னதியில் அமர்ந்து இருக்கிறாள். வெள்ளிக்கிழமை தோறும் காலையில்  ஸ்ரீ சூக்த வேத மந்திரத்துடன் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆகவே அந்த நேரத்தில் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும்.  லஷ்மி தேவியே மீண்டும் விஷ்ணுவை இங்கு மணந்து கொண்டதினால் திருமண தோஷம் நீங்க இங்கு வேண்டுதல் செய்வது நிச்சயப் பலனைத் தருமாம். மேலும் விஷ்ணுவின் ஆயுதமான ஒரு வாள் இங்குள்ள தீர்த்தத்தில் பேயாழ்வாராகப் பிறந்தார்.   அப்படியாக அங்கு பிறந்தவரான பேயாழ்வாருக்கு இந்த ஆலயத்தில் லஷ்மி தேவி  ஒரு குருவாக இருந்து  உபதேசம் செய்வதினால் இந்த ஆலயத்திற்கு  வந்து கல்வியில்  சிறந்து விளங்க வேண்டும் என பிராதிப்பதும் நடைமுறைப் பழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக இங்கு வரும்  பக்தர்கள், மயூரவல்லி தாயாருக்கு வில்வ அர்ச்சனை செய்து, 2 சிறிய மணிகளை அவளது பாதத்தில் வைத்து பூஜித்து பின்பு, சன்னதி கதவில் கட்டி வழிபடுகின்றனர். இந்த மணிகள் தம்மை அங்கு வந்து வைத்துள்ள பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அவர்களின் குரலாக ஒலித்தவண்ணமே  இருந்து கொண்டு  தாயாரிடம் பிரார்த்தனை செய்வதாக ஐதீகம் உள்ளது. அவரவர் கோரிக்கைகள் நிறைவேறியப் பின்னர் பக்தர்கள் அங்கு வந்து  மீண்டும் இரண்டு மணிகளைக் கட்டி நேர்த்திக் கடன்களை  நிறைவேற்றுகின்றனர்.

*கோவில் அமைப்பு:

இந்த ஆலயம் ஏழு கலசங்களுடன் ஐந்துநிலை ராஜகோபுரமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தின் உள்ளே நுழையும்போது அங்குள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆழ்வார்கள், தசாவதார காட்சி மற்றும் சில சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டு இந்த கோவிலின் பழமையை பறைசாற்றுகின்றன. பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சன்னிதிகள் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. ராமர் சன்னிதி தெற்குநோக்கியும், அனுமன் சன்னிதி மேற்குநோக்கியும் உள்ளது. பேயாழ்வார் மற்றும் மணவாள மாமுனிகள் சன்னிதிகள் தெற்குநோக்கி காணப்படுகின்றன. திருமழிசைபிரான் சன்னிதி, பேயாழ்வார் சன்னிதிக்கு நேர் எதிராக அமைந்துள்ளது.

ஆதிகேசவபெருமாள் நின்ற திருக்கோலத்தில் தனியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் மயூரவல்லித் தாயார் என்பதாகும். பேயாழ்வாருக்கு உபதேசம் செய்வதற்காக, தாயாரை மயூரபுரியில் அவதரிக்க பெருமாள் உத்தரவிட்டார். அதன்படி தாயார் ஆம்பல் மலரில் இருந்து ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் வெளிப்பட்டார். பின் பேயாழ்வாருக்கு இறை உபதேசம் அருளினார் என்கிறது தல வரலாறு.

இத்தல தாயார், இரு கைகளில் அபய முத்திரை, வரத முத்திரைகளை தாங்கியும், மேலும் இரு கைகளில் தாமரைப் பூவை கொண்டும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். இந்த தாயாரை வணங்கினால் நிறைந்த செல்வம் தேடி வரும். பாவச் சுமை நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும், தாயாருக்கு இரண்டு மணிகளை வாங்கி காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.

தாயாரிடம் உபதேசம் பெற்ற பேயாழ்வார், தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இவரது சன்னிதிக்கு எதிரே அவரது சீடரான திருமழிசை ஆழ்வார் இருக்கிறார். ராமபிரான் சீதை, லட்சுமணருடன் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.

ராவண வதம் முடிந்து சீதையை மீட்ட பின் ராமர் அயோத்தி புறப்பட்டார். அப்போது வழியில் இந்தத் தலத்தில் சில காலம் தங்கியதாக கூறப்படுகிறது. இந்த சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை விபீஷண ஆழ்வார் வணங்கிக் கொண்டு இருப்பதை காணலாம். இந்த ஆலயத்தில் அனைத்து ஆழ்வார்களின் உற்சவ சிலையும் இருப்பது தனித்துவமாக அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு ஓர் நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரோடைக்கு 'கைரவணி' என்ற பெயர் இருந்தது. அதில் அல்லி, தாமரைப் பூக்கள் நிறைந்திருந்தன. அந்த ஓடையில் இருந்த ஒரு அல்லிப்பூவில் இருந்து பேயாழ்வார் அவதரித்தார். அந்த நீரோடையின் ஒரு பாகமே, ஒரு கிணறாக அமைந்து மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நீரோடையின் மறுபாகம் திருவல்லிக்கேணியில் ஒரு தடாகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

திருமாலுடைய திவ்யகுணங்களிலே மூழ்கி, தன்னை மறந்து ஆழ்ந்து போகிறவர்களை 'ஆழ்வார்கள்' என்று அழைத்தனர். இப்படி அவதரித்த ஆழ்வார்களில், பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார் போன்றவர்களை 'முதலாழ்வார்கள்' எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். பேயாழ்வார், மகாவிஷ்ணுவின் நந்தகம் என்னும் வாள் படையின் அம்சம் ஆவார். இவர் எப்போதும் மக்களில் இருந்து தனித்து, இறைவன் சிந்தனையில் மூழ்கி அழுதல், சிரித்தல், தொழுதல், ஆடுதல், பாடுதல் போன்ற செய்கைகளை செய்து கொண்டே இருந்ததால், இவரைக் கண்டவர்கள் பேயன் என்று அழைத்தனர். இதனால் அவர் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பேய் என்ற சொல்லுக்கு பெரியவர் என்னும் பொருள் உண்டு. எனவே அவருக்கு இந்தப் பெயர் வந்ததாகவும் காரணம் சொல்லப்படுகிறது.

ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், பங்குனி மாதம் 10 நாட்கள் நடைபெறும். பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடைபெறும். தாயாருக்கு பிரதி வெள்ளிக்கிழமை வில்வ அர்ச்சனை, ஹோமம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர உற்சவம், நவராத்திரி உற்சவம், தை மாத லட்சார்ச்சனை போன்றவை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாருக்கு 10 நாட்கள் உற்சவ விழா நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சுதர்சன ஹோமம் செய்யப்படுகிறது. ஆண்டாளுக்கு ஆடிப்பூரம், மார்கழி மாத உற்சவம், சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெறுகிறது. தை அமாவாசையொட்டி தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் நடக்கிறது.

#பேயாழ்வாரின் சீடர்:

பேயாழ்வார், ஆதிகேசவ பெருமாளை வைகானச விதிப்படி வழிபட்டு வந்தார். அவர் ஒரு பூந்தோட்டத்தை நிர்மாணித்து, இறைவனுக்கு தேவையான பூ, துளசி போன்றவற்றை வளர்த்து இறைவனுக்கு சேவை செய்து வந்தார். இந்த நிலையில் திருமழிசை தலத்தில் அவதரித்த திருமழிசையாழ்வார், பல மத தெய்வங்களை வழிபட்டு, பல இடங்கள் சுற்றி விட்டு மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் சன்னிதிக்கு வந்தார். அவருக்கு காட்சி தந்த பெருமாள், பேயாழ்வாரைக் கண்டு ஞான உபதேசம் பெற்று வரும்படி பணித்தார்.

திருமழிசையாழ்வார், பூ கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த பேயாழ்வாரை சந்தித்தார். திருமழிசையாழ்வார் வருவதைக்கண்ட பேயாழ்வார், துளசிச்செடியை தலைகீழாக நட்டு வைத்து அதற்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட திருமழிசை ஆழ்வார், 'என்ன பேயரே! இப்படி தலைகீழாக நட்டால் துளசிச் செடி முளைக்குமா?' என்று கேட்டார்.

அதற்கு பேயாழ்வார், 'மற்ற தெய்வங்கள் மூலம் மோட்சம் கிடைக்கும் என்றால், இதுவும் சாத்தியமே' என்றார்.

'இவர் ஒரு பைத்தியம் என்று நினைத்த திருமழிசை ஆழ்வார், மீண்டும் ஆதிகேசவ பெருமாளிடம் வந்து சேர்ந்தார். இப்போதும் பேயாழ்வாரை முறைப்படி சென்று வணங்கு என்று கூறி அனுப்பிவைத்தார் பெருமாள்.

பேயாழ்வாரை மறுபடியும் வந்து சந்தித்த திருமழிசைபிரான், அவரை முறைப்படி வணங்கி, தானும் அவருடன் சேர்ந்து பூ கைங்கர்யத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவரை தனது சீடராக ஏற்று ஞான உபதேசம் வழங்கினார். 'பக்திசாரர்' என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

#சந்திரன் சாபம் நீக்கிய தீர்த்தம்:

கருடபுராணத்தின் 3 மற்றும் 4-வது அத்தியாயங்களிலே வரும் சில ஸ்லோகங்கள் மயிலாப்பூரில் உள்ள தீர்த்தத்தின் மகிமையைக் கூறுகிறது. குருவின் சாபத்திற்கு ஆளான சந்திரன் மிகவும் வேதனையடைந்தான். அந்த சாபம் தீர, மயிலாப்பூர் வந்து ஆதிகேசவ பெருமாளை வணங்கி துதித்தான். இதையடுத்து இறைவன் எல்லாப் புண்ணிய நதிகளையும் மயிலாப்பூரில் கூடும்படி பணித்தார். புண்ணிய நதிகள் கூடிய தீர்த்தத்தில் நீராடிய சந்திரன் சாபம் நீங்கப்பெற்றான். இந்தக் குளத்திற்கு 'சர்வ தீர்த்தம்' என்ற பெயர் உண்டாயிற்று. சந்திரன் சாபம் நீங்கியதால் சந்திர புஷ்கரணி என்ற பெயர் அமைந்தது. பின்பு சித்திரபுஷ்கரணி என்று மாறி தற்போது சித்திரக்குளம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சித்திரக் குளத்தில் தற்போது மழை நீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சித்திரக் குளத்திற்கு வரும் மழைநீர் வடிகால்கள் தூர்ந்து போனதால் சித்திரக் குளத்தில் நீர் இன்றி தெப்பத் திருவிழா நடைபறுவது நின்றது. இருப்பினும் இக்கோயில் தெப்பத் திருவிழா இறுதியாக 2005-ஆம் ஆண்டு மற்றும் 2016-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

*கட்டிட வரலாறு:

இந்தக் கோயிலின் புராணக்கதை, இது துவாபர யுகம் முதல் இருந்து வருவதாகவும், சூரியகுல மன்னர் சுமனகனால் கட்டப்பட்டு பல்லவர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இது ஆதிகேசவ பெருமாள் கோயிலின் தோட்டத்தில் உள்ள மணி கைரவேணி என்ற கிணற்றில் லில்லி மலரில் பிறந்ததாக நம்பப்படும் முதல் ஆழ்வார் பேய்யாழ்வாரின் அவதாரஸ்தலம் ஆகும். கோயிலின் தற்போதைய அமைப்பு 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது அல்ல, மேலும் கோயிலில் கல்வெட்டுகள் போன்ற எந்த பழங்காலமும் கிடைக்கவில்லை. கோயிலின் கல்யாண மண்டபம் 1938 ஆம் ஆண்டு வரதராஜுலு நாயுடுவால் கட்டப்பட்டது.

இந்த கோயிலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், தென்கலை பிரிவைச் சேர்ந்த 12 ஆழ்வார்களும் 22 ஆச்சார்யர்களும் ஒரே சன்னிதியில் உள்ளனர், இதை வேறு எந்த கோயிலிலும் நீங்கள் காண முடியாது.

கோயிலின் ராஜ கோபுரம் 1950 களில் கட்டப்பட்டது மற்றும் ஸ்ரீ பக்தவத்சலம் HRCE அமைச்சராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்டது. இந்த கோயில் தெங்கலை சம்பிரதாயத்தைப் பின்பற்றுகிறது, மேலும் இங்குள்ள சன்னிதி தெரு இன்னும் பழைய உலக அழகைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, இது 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஓடு வேயப்பட்ட வீடுகளுடன் உள்ளது.

சிறப்புச் செய்திகள்  இவை:

(1) சந்திர பாகவான்  இங்கு வந்து இங்குள்ள புனிதக் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாராம்.
(2) அப்போது இந்த குளத்தில் அனைத்து இடங்களிலும் இருந்த புனித நதிகளின் நீரும் வந்து சங்கமிக்க விஷ்ணு பகவான் ஏற்பாடு செய்தாராம். ஆகவே இங்குள்ள தீர்த்தக் குளமும் மிகப் புனிதமானது.
(3) ராவணனை வதம் செய்து சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திப் பட்டினத்திற்கு திரும்பிச் சென்ற ராமபிரான் இங்கு வந்து ஆதிகேசவப் பெருமாளை வணங்கிச் சென்றாராம்.

வழிபாடு
குடும்பத்தில் நிதி தட்டுப்பாடு நீங்கவும், ஐஸ்வர்யம் உண்டாக, எதிரிகளின் தொல்லை குறைய இந்த ஆலயத்தில் விசேஷமாக வேண்டிக் கொள்கின்றனர்.

தங்களுடைய வேண்டுதல் நிறைவேறினால் பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவிக்கின்றனர்.

மணி பிராத்தனை இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாகும்.
இறைவனை மணம் முடிக்க தாயார் புஷ்கரணியில் உள்ள தாமரை மலர் மேல் குழந்தையாக அவதரித்தாள் . பிருகு மஹரிஷியின் மகளாக பிறந்ததால் ‘பார்கவி’ என்ற பெயர் இவருக்கு உண்டு . இவர் இக்கோயிலில் ஸ்வாமியின் வலது புறத்தில் தனி சன்னதியில் வீற்றியிருக்கிறார் . இவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் காலை விசேஷ ஹோமம் மற்றும் மாலை 6 .30 மணி அளவில் ‘ஸ்ரீ சூக்த வேத மந்திரம் ‘ சொல்லி வில்வ இலையால் அர்ச்சனை செய்கிறார்கள் , அப்போது இரண்டு மணிகளை தாயாரின் கால்களில் வைத்து திருமண தடை ,கல்வி ,உடல் நலம் ஆகியவற்றிற்காக வேண்டி அவைகளை இக்கோயிலின் கதவில் கட்டிவிடுகிறார்கள் ,அவைகள் எப்போதும் ஒலித்து பக்த்தர்களுக்காக தாயாரிடம் பிராத்தனை செய்வதாக ஐதீகம்.
அவர்கள் குறைகள் தீர்ந்தவுடன் மேலும் இரண்டு மணிகளை கட்டிவிடுகிறார்கள் . இவ் பிராத்தனையில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பு ஆகும் .

இக்கோயில் காலையில் 7 மணி முதல் 11 வரையும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். கோயில் உற்சவர் ஏகாதசி, திருவோணம், பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் உற்சவ மூர்த்தி ஆதிகேசவப் பெருமாள், பூதேவி, மயூரவல்லித் தாயார்களுடன் கோயிலைச் சுற்றி பவனி வருவார். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் மயூரவல்லித் தாயாரும், பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் தாயாரும், புனர்பூசம் நட்சத்திரத்தன்று இராமரும், குறிப்பிட்ட ஆழ்வாரின் பிறந்தநாட்களில் மட்டும் அந்த ஆழ்வார் மட்டும் பல்லக்கில் பவனி வருவார். பங்குனி மாதத்தில் இக்கோயிலில் பிரம்மோற்சவம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் சித்திரக் குளத்தில் தெப்பத் திருவிழா 5 நாட்கள் நடைபெறும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்.. பிரம்மன் வழிபட்ட தலம்..!! அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!    *இந்த கோயில் எங்க...