Sunday, April 20, 2025

ஏகவீரி பிடாரி வெற்றியை தரும் திருவலஞ்சுழி அஷ்டபுஜகாளி அம்மன்!

பலருக்கு தெரியாத தகவல் 
தாயின் சத்தி பீடம் கொற்றவை ஏகவீரி பிடாரி  வெற்றியை தரும் திருவலஞ்சுழி அஷ்டபுஜகாளி அம்மன்!
கும்பகோணம் திருவலஞ்சுழி வெள்ளை வினாயகர் கோவிலில் அஷ்டபுஜகாளி அம்பாள் சந்நிதி வடக்கு பகுதியில் உள்ளது.

சோழப்பேரரசர்கள் ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் போர்க்களம் கிளம்பும் முன் இந்த அஷ்டபுஜமாகாளிக்கு வாள்,மற்றும் போர் ஆயுதங்களை வைத்து பூசை நடத்தி உத்தரவு வாங்கிய பின்னரே போர்க்களம் நோக்கிக் கிளம்புவார்களாம்.

இந்த பூசையின் மூலம் போரில் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள்.

இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் கொண்டாடிய தெய்வம் இவள்.

 "ஏகவீரி" என்று அழைக்கப்பட்டதாக அன்றைய கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. 
இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்ற பெயர் மாற்றம் பெற்று கோயிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள்.

பாவம்!இவளின் அருமை பெருமைகள் கோயிலுக்கு வரும் யாருக்கும் தெரிவதில்லை.

எப்போது திருவலஞ்சுழி கோயிலுக்கு சென்றாலும் பூட்டியே இருக்கும் அந்த இரும்புக் கதவின் வழியேதான் இவள் முகத்தை ஏக்கமுடன் பார்க்க முடியும் .

ஏகவீரி பிடாரி. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான காளிகளுள் ஒருவராகக் கொள்ளத்தகும் இவரின் அழகை வர்ணிப்பதற்குக் கம்பரும் கபிலருமே வார்த்தையின்றி தவிப்பார்கள். 

அன்னையின் புன்சிரிப்பைக் கூறுவதா? செவியிலிருக்கும் மனிதக் குழையைக் கூறுவதா? அமர்ந்திருக்கும் ஒய்யாரத்தைக் கூறுவதா? ஆயுதமும் மணியும் ஏந்திய கரங்களைக் கூறுவதா? அல்லது வெறும் கையை விஸ்மயத்தில் வைத்திருக்கும் பாங்கைக் கூறுவதா?.....

இதையெல்லாம் நாம் யோசிக்க ஆரம்பித்தால், எமது யோசனையை முடிப்பதற்குள் நீங்கள் திருவலஞ்சுழி சென்று அம்மையின் தரிசனத்தையே பெற்று விடலாம்.

எனக்கு மட்டும் தான் இந்த அம்மையின் அழகை விவரிப்பதில்  பித்தா என்ற சந்தேகத்தில் நண்பர்களை அழைத்துச் சென்று காட்டிய போது அவர்களும் வாயடைத்து வியந்ததை காண முடிந்தது. 

பார்த்தவுடனேயே சோழர்காலச் சிற்பம் என்று எவரும் கண்டுகொள்ளும் வகையில் இருக்கும் இச்சிற்பத்தை மனதில் வாங்கிக் கொண்டால் எந்த ஒரு சோழர்காலச் சிற்பத்தையும் அடையாளம் கண்டு கொள்வது சுலபம் என்பது அறிஞர் வாக்கு. 

அம்மன் சன்னதிக்குள் இருள் படிந்த ஓர் அறையில் 'அஷ்ட புஜ மஹா காளி' 
என்று பயமுறுத்தும் பெயருடன் இத்தனை காலம் அடைந்திருந்த 
ஏக வீரிப்பிடாரியை அடையாளம் கண்டுகொள்ள, வலஞ்சுழியிலிருக்கும் கல்வெட்டுதான் உதவியது.

கல்வெட்டு குறிப்பிடும் திசையில் அல்லாது வேறொரு இடத்தில் அம்மை இருக்க, இவர்தான் ஏக வீரியா என்ற சந்தேகம் சற்றே எழுந்தது. 

அக்கோயிலில் பணி புரியும் ஒருவர் அம்மை ஆதியில் குடியிருந்த இடத்தைக் கூறவும் அவ்விடமும் கல்வெட்டு குறிப்பிட்ட இடமும் சரியாக பொருந்த, சந்தேக இருள் பகலவனைக் கண்ட பனி போல விலகியது.

ஏகவீரி பிடாரிக் கல்வெட்டைப் பற்றிக் கூறும்போது, இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். 

திருவலஞ்சுழிக் கோயிலின் மேற்குப்புறமுள்ள கருவறையில் இருக்கும் ஏகவீரி பிடாரிக்கு நடைபெறும் அபிஷேகங்களைப் பற்றியும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

ஏகவீரி பிடாரி சாந்திக்கு செய்யும் அர்ச்சனை என்பதைக் கோபமாக இருக்கும் காளியை அமைதிப்படுத்தச் செய்யப்படும் பூஜை எனக்கொள்ளலாம். 

ஆனால் இன்னொரு சொற்றொடர் எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதே ஏகவீரி பிடாரிக்கு 'அவபல அஞ்சனை' என்றொரு பூஜையும் நடத்தப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

இச்சொல் இதுவரை வேறு எந்தக் கல்வெட்டிலும் காணப்படாதது மட்டுமல்ல, கேட்டறியாததும் கூட. இப்பூஜையை நடத்துவதற்கு நிவந்தம் அளித்த பெண்மணி முதலாம் இராஜராஜரின் மாமியார். 

இவர் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர். பெயர் குந்தணன் அமுதவல்லியார். 

ஆக, 'அவபல அஞ்சனை' என்பது தெலுங்குச் சொல்லாக இருக்கலாம் என்பது டாக்டர். கலைக்கோவன் அவர்களின் கருத்து.

இந்தியா என்னும் மாபெரும் நாட்டின் ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு. இம்மாநிலத்தில் ஒரே ஒரு மாவட்டம் தஞ்சை. தஞ்சையில் ஒரு தாலுக்காதான்  குடந்தை. குடந்தையில் ஓர் சிற்றூர்தான் திருவலஞ்சுழி. இச்சிற்றூரில் இருக்கும் கோயில் ஒன்றே அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரமாய் விளங்குமெனில், நமது தேசம் முழுவதும் வெளிவரக் காத்திருக்கும் புதையல்கள்தான் எத்தனை? 

எத்தனை முறை கேட்டாலும் நல்ல இசை அலுப்புத் தட்டாது. அது போல, இதே கருத்தை எத்தனைமுறை கூறினாலும் எங்களுக்கு பிரமிப்பு குறையாது. படிக்கும் வாசகர்களுக்கும் அப்படியே என்று நம்புகிறோம்!

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ராஜராஜ சோழனின் வியக்க வைக்கும் தஞ்சை பெரிய கோயில்

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது  1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்க...