Sunday, May 25, 2025

அமாவாசையும்.. கிருத்திகையும்.. இணைந்த நன்னாள்.

 அமாவாசையும்.. கிருத்திகையும்.. இணைந்த நன்னாள்.. இந்நாளில் அப்படி என்ன சிறப்பு?..
✨அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்வதும், அவர்களுக்குப் படையலிடுவதும் நம் குலத்தைக் காக்கும். குடும்பத்தை மேம்படுத்தும். சந்ததியைச் சிறக்கச் செய்யும் என்கிறது சாஸ்திரம்.

✨முன்னோர் வழிபாடு என்பதும், குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

✨இறந்த தாய், தந்தைக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், இறந்த தேதி மற்றும் திதி போன்றவற்றை மறந்தவர்கள் அமாவாசை நாளில் அவர்களை நினைத்து வணங்கலாம்.

✨வைகாசி மாத அமாவாசையுடன் முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவதால் அன்றைய தினத்தில் முன்னோர்களை வழிபடுவது, குலதெய்வத்தை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது அளவற்ற மன மகிழ்ச்சியை தரும். 

விரதம் இருப்பது எப்படி?

✨அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

✨அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.

✨முன்னோர்களுக்கு படைத்த உணவுகளை காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்.

✨முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

✨அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானம் செய்வதும் புண்ணியத்தைத் தரும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் :

✨நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது. அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ணிய கால தர்ப்பணம், வருஷ சிரார்த்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

காகத்துக்கு முக்கியத்துவம் :

✨அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

✨காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

குலதெய்வ வழிபாடு :

✨அன்று மாலையில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி, குலதெய்வப் படத்துக்கு பூக்கள் வைத்து அலங்கரித்து, குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு, புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்களப் பொருட்கள் வைத்து வணங்க வேண்டும். அந்தப் புடவை முதலான மங்களப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்க வேண்டும். 

✨இவ்வாறு செய்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கள காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும், சந்தோஷமும் குடிகொள்ளும்.

முருகன் வழிபாடு:

✨பொதுவாக முருகனை வழிபடுவதற்கு உரிய சிறந்த மாதங்களாக வைகாசி, கார்த்திகை மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. 

✨இந்த வைகாசி மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. 

✨கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது கிருத்திகை விரதம் ஆகும்.

✨சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். இந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் 6 பேர் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.

✨முருகனை கார்த்திகை பெண்கள் வளர்த்த காரணத்தால் அவர்களின் பெயரிலேயே கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், அவர்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு வரம் அளித்தார்.

✨இந்நாளில் முருகப்பெருமானை வணங்கினால் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி பணம், புகழ், செல்வாக்கு என அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும்.

ஏழைகளுக்கு தானம் :

✨அமாவாசை நாளில் ஏழைகள், இல்லாதோர் அல்லது இயலாதோர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய, நாம் செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

✨அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஆலந்துறை நாதர்,திருப்புள்ளமங்கை,பசுபதி கோயில் தஞ்சை.

அருள்மிகு ஆலந்துறை நாதர் திருக்கோயில், திருப்புள்ளமங்கை, பசுபதி கோயில் அஞ்சல், தஞ்சை மாவட்டம் PIN - 614 206.  *மூலவர்: ஆலந்துறைந...