Thursday, June 12, 2025

நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக இருக்கும் திருமழபாடி வைத்யநாதசுவாமி கோவில்.

திருமழபாடி :
மழபாடியை மறந்தனையோ என்று அவ்வூரின் சிவபெருமான் சுந்தரரைக் கேட்க மழபாடியுள் மாணிக்கமே என்று அவர் அங்கு வந்து இவரைப்  பாடிய  சிறப்பு பெற்றது திருமழப்பாடி. தேவாரப் பாடல்களிலேயே மிகவும் புகழ்பெற்ற  10 பாடல்களில் ஒன்றான 'பொன்னார் மேனியனே'புலித்தோலை  அரைக்கசைத்து' என்ற பாடலை இங்குதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடினார். அந்தப் பாடலில் வருவதுதான், மழபாடியுள்  மாணிக்கமே எனும் வரி. 

  கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவில்களையெல்லாம்  கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரரான  சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலங்களை  தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு அங்கே தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி "மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ" என்று வினவி மறைந்தாராம்.அதன் பின் சுந்தரர் மழபாடிக்கு வந்து 
" பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே" என்று பாடியிருக்கிறார்.

    பொன்னார் மேனியனே எனும் வரி எனக்கு பொன்னியின் செல்வன் மூலம் தான் அறிமுகம் என்பதையும் சொல்லிவிட வேண்டும் இல்லையா? பொக்கிஷ அறை  வழியாக நிலவறைச் சிறைக்குள் போகும் மனிதர்கள் எல்லாம்,அந்தப் பொக்கிஷ அறையுள் குவிந்து கிடைக்கும் பொன்னைக் கண்டு அதனை உடமையாக்கிக் கொள்ள சித்தங்கொள்ள, நமது சேந்தன் அமுதன் மட்டும் அதனைக் கண்டவுடன்  'பொன்னை  ஒத்த  மேனியனான  சிவபெருமானை எண்ணி அந்தப் பதிகத்தை நிலவறைச்  சிறையில் பாடி கொண்டிருப்பதாக  எழுதியிருப்பார் கல்கி.அபாரமான கற்பனை அது.

இதனாலெல்லாம் திருமழபாடி சென்று பார்க்க வேண்டும் என்பதென்  நீண்ட நாள் ஆசை. 2021ல் அரியலூர் வந்திருந்தபோது,லாக் டவுன் அறிவிக்கப்பட்டு கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால், திருமழபாடி வந்து பார்க்க முடியாமல் போய்விட்டது.அதனால் சென்ற வாரம் அரியலூர் சென்றிருந்தபோது தவற விடாமல் சென்று பார்த்து விட்டேன். உண்மையில், திருமழபாடி தஞ்சையிலிருந்தும் அரியலூரிலிருந்தும் ஒரே தூரம்தான். திருவையாற்றில் இருந்து வெறும் 16 கி.மீ தான். ஆனால் நான் ஏனோ இது அரியலூருக்குத்தான் மிக அருகில் உள்ளது  என்றெண்ணியிருந்தேன். ஊர்,அரியலூர் மாவட்டத்தில் இருப்பதால், என்பதால் அப்படி என் மனதில் பதிந்து விட்டதுபோல.

இந்த மழப்பாடி ஈசனை சுந்தரர் காலத்துக்கு முன்பே திருஞானசம்பந்தர் கண்டு "காச்சிலாத பொன்னோக்கும் கனகவயிரத்தின் ஆச்சிலதா பளிங்கினன் மழப்பாடி வள்ளல்" என்று போற்றியுள்ளார். திருநாவுக்கரசரோ "மரு சுடரின் மாணிக்கக்குன்று கண்டாய் மழப்பாடி மண்ணும் மணாளன் தானே " என்று மழப்பாடி ஈசனை போற்றியுள்ளார்.

      பரந்து விரிந்து கிடக்கும் (சுத்தமாக தண்ணீர் இல்லாமல்) கொள்ளிடத்தின் மேற்குக் கரையில்,just across the road  இருக்கிறது திருமழப்பாடி வைத்யநாதசுவாமி கோவில்.சுயம்பு மூர்த்தி,வைரத்தூண்  நாதர்,வஜ்ரஸ்தம்பேஸ்வரர் என்ற பெயரும் சுவாமிக்கு உண்டு.அம்பாள்கள் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை.தேவாரத்தலங்களில் 54 வது தலம்.நந்தி தேவருக்கு திருமணம் இங்கே நடைபெற்றதாக ஐதீகம்.அவர் திருவையாற்றில் இருந்து இங்கே மணமுடிக்க வருகையில்,இக்கோவிலின் மூலவரான வைத்யநாதசுவாமியே  அவரை எதிர்கொண்டு அழைத்து சிறப்பித்ததாகவும் ஐதீகம்.நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக இருப்பதையும் இங்கே காணலாம். கோவிலின் தல விருட்சம் பனை மரம்.ஓங்கி வளர்ந்து நிமிர்ந்த பனை மரமொன்று உள்ளே அழகாக நிற்கிறது.

 கிழக்கு நோக்கி ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரம் இரண்டு திருசுற்றுகள். கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்திய ஆலயம். ஆதித்தசோழன் காலம் தொடங்கி பல்வேறு சோழ அரசர்களின் கல்வெட்டு சாசனங்கள் சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள்,ஹொய்சள  அரசர்கள், கோனேரிராயன் காலத்து மற்றும் விஜய நகர நாயக்க மன்னர்கள் கல்வெட்டுகளை இந்த கோவிலில் உள்ளன. சோழர் கல்வெட்டுகளில் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும் ராஜேந்திர சிம்ம வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி என்றும் இவ்வூர் குறிப்பிடப்பெற்றுள்ளது. 

இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித்தர் சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது இவ்வூர் கண்டராதித்தம் என்ற பெயரோடு மழபாடியோடு இணைந்து இருக்கின்றது. இங்குள்ள ஏரி ,செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற பெயரால் சோழர்கள் வெட்டுவிக்கப் பெற்றதோடு எந்த ஏரியில் பிரிந்து செல்லும் வாய்க்காலுக்கு ராஜராஜன் வாய்க்கால், குலமாணிக்க வாய்க்கால், சுந்தரசோழன் வாய்க்கால் உத்தமசோழன் வாய்க்கால் என்ற பெயரில் இருந்தமையும் குலோத்துங்கச் சோழப் பெருவழி என்ற நெடுஞசாலை இவ்வூர் வழி சென்றமையும் சோழமாதேவி வீதி, கண்டராதித்தர் வீதி என்ற இரண்டு வீதிகள் இருந்ததையும் கல்வெட்டுகள்  சொல்கின்றன.

 இத்திருக்கோவிலில் மிக முக்கியமான  சிறப்புடைய கல்வெட்டு முதலாம் ராஜேந்திர சோழனின் 14ஆம் ஆண்டு 70 ஆம் நாளில் வெட்டுவிக்கப்பெற்ற சாசனம். ராஜராஜ சோழனின் காலத்தில் சிதைந்த திருமழபாடி கோவிலை புதுப்பிக்க விரும்பி ஓர் ஆணை பிறப்பித்திருக்கிறான்  அதன்படி கோவில் விமானத்தை பிரித்து மீண்டும் கற்றளியாக புதுப்பிக்கவேண்டி இருப்பதால் விமானத்தில் உள்ள கல்வெட்டு சாசனங்களை படியெடுத்து புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும். புதிய கற்கோவில் எடுத்த பிறகு மீண்டும் அக்கல்வெட்டுகளை அங்கு பொறிக்கவேண்டும் என்பதேயாகும். திருமழபாடி கோயில் திருப்பணியை மன்னன் ராஜேந்திர சோழன் கி.பி 1026 இல் நிறைவுசெய்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றன.

 புத்தகத்தில் பதிவு செய்யப்பெற்ற பழைய கல்வெட்டு செய்திகளை நகல்களை தன்னுடைய தண்டநாயகர்(சேனாதிபதி) ராமன் அருள்மொழியான உத்தமசோழ பிரம்மராயன் மேற்பார்வையில் ஓலை அனுப்பி திருமழபாடி கோயிலின் அலுவலரான குளவன் சோழன் அரங்கலமுடையன் பட்டலாகன், திருமழபாடி பிச்சன் கண்டராதித்த சதுர்வேதிமங்கலச்  சபையோர் பெரும்புலியூர் சபையோர் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டுகள் ஒப்பிட்டு பார்த்தபின் கல்வெட்டில் பொறிக்கவேண்டும் என்பது ராஜேந்திர சோழரின் ஆணை மேலும் இந்த ஆணை திருமழபாடி மூலவரின் கருவறைச் சுவற்றில் 83 வரிகளில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. அதில் 73 வரிகள் ராஜேந்திர சோழனின் ஆணையும் 74 ஆம் வரிகளில் ராஜ ராஜ சோழரின் ஆணையும் இடப்பெற்றுள்ளது சிறப்பு செய்தியாகும். இந்த அனைத்து செய்திகளையும் தற்போது உள்ள கல்வெட்டுகளில் காணலாம்.

அப்பேர்ப்பட்ட பெருமைகளையெல்லாம் கண்ட இந்த ஊர் இன்று நெடுஞ்சாலைகளிலிருந்தெல்லாம் ஒதுங்கி,ஆய்ந்து ஓய்ந்து அடங்கி ஒரு சிற்றூராக அமைதியாக இருக்கிறது.சேர நாட்டிலிருந்துஅல்லது கொங்கு நாட்டிலிருந்து  இங்கே வந்து குடியேறிய மழவர்கள் அமைத்த ஊர் என்பதால் மழவர்பாடி என்றிருந்தது மழபாடி என்று மருவியதாவும்,மார்க்கண்டேயருக்காக சிவன் மழுவைத்தாங்கி ஆடியதால் மழுவாடி என்று பெயர்பெற்று பின்னர் அதுவே மழபாடி என்று மருவியதாகவும் செய்திகள் இருக்கின்றன.. சோழப் பேரரசிகளில்  மிகச்சிறப்பு வாய்ந்து செம்பியன்மாதேவி இந்த மழவர் குலத்தைச் சேர்ந்தவர்தான். மழவர் குல மாணிக்கம் என்றும் அவரைச் சொல்வதுண்டு.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த முக்கியமான கோவிலை இந்து மதத்திலும் தமிழக இந்திய வரலாற்றிலும் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் தவறாமல் சென்று பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment

Followers

திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்

மூலவர் : #திருமாகறலீஸ்வரர்  உற்சவர் : #சோமாஸ்கந்தர், நடராஜர்  அம்மன்/தாயார் : #திரிபுவனநாயகி  தல விருட்சம் : எலுமிச்சை  தீர்த்தம் : அக்னி  ப...