தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு அட்டவீரட்ட திருத்தலங்களில்
இரண்டாவது தலம் #திருக்கோவிலூர்
#வீரட்டேஸ்வரர் கோயில் வரலாறு.[223]
மூலவர் :#வீரட்டேஸ்வரர்
அம்மன் :#சிவானந்தவல்லி
பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது.
#தலவரலாறு
திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது.
இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த
அட்ட வீரட்ட தலங்களில் 2-வது வீரட்டான திருத்தலம் இது. வாஸ்து சாந்தி எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. சுக்கிரன் சாபவிமோசனம் பெற்ற தலம். அம்பாள் திருபுர பைரவி உற்பத்தி தலம். சப்தமாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைவரர்கள் மற்றும் 64 பைரவிகள் உற்பத்தியான தலம். சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத் தலங்களில் இது 223வது தேவாரத் தலம் ஆகும்.
ஈசனின் மனைவியான பார்வதி, ஈசனின் இரு கண்களையும் (சூரியன், சந்திரன்) விளாயாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள் (அஞ்ஞானம்). அந்த அசுரனான அந்தகாசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க, அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தியாகி போர் தொடர்நது கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனி; தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறார். வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக் கோடுகளாகி எட்டுத் திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அந்த பதங்களில் இருக்கச் செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இதுவே இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களிலும், வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகாசூரனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேஸ்வரர் ஆவார்.
தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து ‘அயிராவணம்’ என்னும் யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார்.
அவரோடு, அவரது நண்பரான சேரமான் பெருமானும், குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது, கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார்.
அவரிடம் சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் கயிலாயம் செல்கிறோம். நீயும் வருகிறாயா?’ என்று கேட்டனர்.
கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது! ‘நானும் வருகிறேன்’ என்று கூறிய அவ்வை, விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார்.
அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அது விநாயகரின் குரல். ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம்போல் பொறுமையாகவே செய். வழிபாடு முடிந்ததும், சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாக உன்னை கயிலாயத்தில் சேர்க்கிறேன்’ என்றார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வை, ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட...’ எனத் தொடங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடி விநாயகரை வழிபட்டார்.
அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ பாடி முடித்ததும், அவர் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வையை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிறகுதான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.
👉அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், ‘பெரிய யானை கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர்.
👉வீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.
👉சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது.
👉 வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர்.
👉சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது.
👉ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர்.ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார்.இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.
👉தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது.
குருபூசை நாள் : கார்த்திகை - உத்திரம்
சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம். (நரசிங்க முனையரைய நாயனார் வேறு.)
திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.
🙏ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.
👉சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.
திருவிழா:
மாசிமகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம்
கார்த்திகை – 3 ம் சோம வாரம் சங்காபிசேகம்.
திறக்கும் நேரம்
காலை 6 மணி - மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி - இரவு 8:30 மணி
அமைவிடம்
அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில்,
திருக்கோயிலூர் - 605 757.
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787.
மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment