தஞ்சை மாவட்டம், தஞ்சை - தக்ஷ்ண காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
தஞ்சைத் தெற்கு இராஜவீதியின் மத்தியில் தெற்கு வீதி-எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது.
தரை மட்டத்தில் இருந்து உயர்ந்த மேடை போன்ற பகுதியின் மீது
தக்ஷிண காசி விஸ்வநாதசுவாமி கோயில் அழகுற அமைந்துள்ளது. வடக்கில் இருக்கும் காசி திருக்கோயிலுக்கு இணையான பலன்களை வாரி வழங்கும் திருக்கோயில் என்பதால் இதனை தக்ஷ்ண காசி என குறிப்பிடுகின்றனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
கிழக்கு நோக்கிய இக்கோயிலுக்கு தெற்கு வீதியில் ஒரு வாயிலும், எல்லையம்மன் கோயில் தெருவில் மற்றொரு வாயிலும் அமைந்துள்ளன. தெற்கு வீதி வாயிலாகச் சென்றால் அம்மன் சன்னதியையும், எல்லையம்மன் கோயில் தெரு வாயிலாகச் சென்றால் காசி விசுவநாதர் சன்னதியையும் காணலாம். மக்கள் தெற்கு வாயிலையே பிரதானமாக கொண்டுள்ளனர்.
இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். மூலவர் கருவறையின் வெளிப்புறத்தில் இரு புறமும் சிறிய கருங்கல் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை வாயிலில் சிறிய விநாயகரும் உள்ளார். எதிரில் நந்தி, பலிபீடம் காணப்படுகின்றன. மூலவர் சன்னதியின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது.
இக்கோயில் ராஜகோபுரம், மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. திருச்சுற்றில் நால்வர், சித்தி விநாயகர், நந்தியுடன் கூடிய அரங்குல நாதர், பெரிய நாயகி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளனர். அடுத்து கஜலட்சுமி உள்ளார். அடுத்துள்ள பாலதண்டாயுதபாணியின் முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து வடகிழக்கில் பைரவர், சனி, சூரியன், நாகலிங்கம், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையும் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
அனைத்து விழாக்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. பங்குனியில் பால தண்டாயுதபாணிக்கு பால் காவடி எடுத்து வரும் விழா நடைபெற உள்ளது என வாயிலில் ஒரு பெரிய விளம்பர பதாகை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்- குறள்
சமைத்த கூழே ஆனாலும், தன் முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. எனும் பொருள் போல சிறிய கோயில்; மனம் ஒன்றிய பக்தர்கள்; என விஸ்வநாதர் இருக்கை கொண்டுள்ளார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment